இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் சம்பிரதாய உரைமீது நடைபெறவுள்ள விவாதத்தில் சிறுபான்மைத் தலைவர்கள், உறுப்பினர்கள்; குறிப்பாக முஸ்லிம் தலைவர்கள், உறுப்பினர்களின் பேச்சுக்கள் வரலாற்றில் பதியப்படும் வண்ணம் அமையவேண்டும்.
தேர்தல்முறை மாற்றம், விஜேதாச ராஜபக்சவின் 22வது திருத்தம், சிறுபான்மை கட்சிகள் இனவாதக்கட்சிகளா? பெரும்பான்மை சமூகத்தின் ஆட்சியில் சிறுபான்மைகளுக்குள்ள நியாயமான பிரச்சினைகளை பாராளுமன்றிலும் ஏனைய அரசியல் அரங்குகளிலும் ஜனநாயகரீதியில் முன்வைப்பது இனவாதமாகுமா?
‘அடிப்படைவாதம்’ என்ற சொல் இன்று முஸ்லிம் அரசியல்வாதிகளையும் நோக்கி வீசப்படும் சூழ்நிலையில் இவர்கள் கூறும் ‘அடிப்படைவாதம்’ என்பது என்ன? என்பதை ஏன் இன்னும் கூறுகிறார்கள் இல்லை? வரவிலக்கணப்படுத்துகிறார்கள் இல்லை?
‘அடிப்படைவாதம்’ என்று அவர்கள் எதைக்கருதுகிறார்கள் என்று கூறாமல் வெறுமனே ஒரு சமூகத்தை நோக்கி மறைமுகமாக ‘அடிப்படைவாதம் ‘ என்ற சொல்லை அடிக்கடி பாவிப்பதன்மூலம் பெரும்பான்மை சமூகத்தில் சிறுபான்மைக்கெதிராக வெறுப்பைத்தூண்ட முற்படுவது இனவாதமில்லையா?
தன் சமூகத்தில் பிழையாக வழிநடாத்தப்பட்ட ஒரு குழு செய்த ஈனச்செயலை ஓட்டுமொத்த சமூகமும் கண்டித்து அவர்களைக் காட்டிக்கொடுத்த நிலையிலும் அச்சமூகத்தை தொடர்ந்தும் மனவேதனைப்படுத்துவது சரியா? போன்றவிடயங்களைப் பற்றிப்பேசுங்கள்.
நாங்களும் பேசினோம்; என்று பெயர்வாங்குவதற்காக உணர்ச்சிப் பேச்சுக்களைப் பேசாமல் அறிவுப்பூர்வமாக பேசுங்கள். முடிந்தளவு பேச்சுக்களை முன்கூட்டியே தயார்செய்துகொண்டு செல்லுங்கள்.
முடிந்தவரை சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் உரையாற்றுங்கள். உங்கள் கருத்துக்கள் பெரும்பான்மை சமூகத்தை சென்றடைய வேண்டும். அவர்களின் மனங்களைக் கவரவேண்டும்.
இந்தியாவில் முஸ்லிம்களுக்கெதிராக ஒரு சட்டம் கொண்டுவரப்படும்போது பெரும்பான்மை சமூகமும் அவர்களுக்காக போராடுகின்றது. எதிர்க்கட்சிகளும் போராடுகின்றன. இலங்கையில் அந்நிலை இல்லை. ஏன்? பெரும்பான்மை சமூகத்திற்கு மத்தியில் அரசியலுக்காக பிழையான இனவாதக்கருத்துக்களை விதைத்து வைத்திருக்கிறார்கள். அந்தக் கருத்துகள் களையப்படவேண்டும். பெரும்பான்மை மக்களின் இதயங்கள் கவரப்படவேண்டும்.
மு கா உருவானபோது அதனை ஒரு இனவாதக்கட்சியாக பேரினவாதிகளும் அன்றைய முஸ்லிம் அதிகார அரசியல் வாதிகளும் முத்திரைகுத்த முனைந்தார்கள். மறைந்த தலைவரின் பேச்சுத்திறன், வாதத்திறன் மற்றும் நேரிய செயற்பாட்டின்மூலம் அந்தமுயற்சியை முறியடித்து ஏனைய சமூகங்களும் அக்கட்சியை நோக்கி வரும்நிலையை ஏற்படுத்தினார்.
இங்கு புரிந்துகொள்ள வேண்டியது முஸ்லிம் கட்சியென்றால் இனவாதக்கட்சி என்று ஆரம்பத்திலேயே அடையாளப்படுத்த எடுத்த முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டு அவையும் ஏனைய கட்சிகளைப்போன்று நேர்த்தியானவையே என்று நிறுவப்பட்டு இன்று அவரில்லாத நிலையில் முஸ்லிம் கட்சி என்பது இனவாதக்கட்சியல்ல; என்று நிறுவப்பட்டவை மீண்டும் இனவாதக்கட்சிகளாக முத்திரை குத்தப்படுகின்றதென்றால் தவறு எங்கே இருக்கின்றது; என்பது ஆராயப்படவேண்டும்.
“முஸ்லிம் கட்சி” அல்லது “இனரீதியான கட்சி” என்று அவர்கள் விழிப்பது ‘முஸ்லிம்’ என்ற சொல்லை தன்பெயரில் உள்வாங்கிய கட்சியை மட்டுமல்ல. முஸ்லிம்கள் அல்லது சிறுபான்மை தலைவர்கள் தலைமைதாங்கும் அனைத்துக் கட்சிகளையும்தான் என்பதைக் கவனத்திற்கொள்க.
எமது நியாயங்கள் சரியாக பாராளுமன்றிலோ; வெளியிலோ எடுத்தியம்பப்படுவதில்லை. தலைவரை விட்டால் ( அதுவும் எல்லாத்தலைவர்களுமல்ல) ஏனையவர்கள் அனைவரும் “தமிழ்சேவை”. ஆகக்குறைந்தது எழுதிக்கொண்டாவது சென்று ஏனைய மொழிகளில் பேசவிருப்பமில்லை. ஏனெனில் அவர்கள் தேசத்திற்கு பேசுவதில்லை. மாறாக தமது வாக்காளர்கட்கே பேசுவார்கள். சுத்தத்தமிழில் உணர்ச்சிகளைக்கொட்டிவிட்டு அதற்கு முகநூலில் உச்சக்கட்ட விளம்பரம்.
பாராளுமன்றில் தமிழிலும் பேசலாம். உரிமை இருக்கிறது. ஆனால் எத்தனை பேருடைய பேச்சுக்கள் மொழிபெயர்க்கப்பட்டு ஏனையமொழிகளில் ஊடகங்கள் வெளியிடுகின்றன? எனவே, எங்களுடைய கருத்துக்கள் எவ்வாறு பெரும்பான்மை சமூகத்திடம் போய்ச்சேரும்.
மொழி தெரிந்தவர்கள், பேச்சாற்றல் உடையவர்கள், தலைமையாக இருந்தாலும் சரி, சரியே! பிழை, பிழையே! என்பவர்களை தலைமைகளுக்கு பிடிக்காது. அவர்களுக்கு ஆமாம் சாமி போடுபவர்களே பாராளுமன்றம் செல்லவேண்டும். அப்படிப்பட்டவர்களை எச்சதி செய்தாயினும் பாராளுமன்றம் செல்வதைத் தடுத்துவிடுவார்கள். இதனால் பாதிக்கப்படுவது அத்தனிநபர்கள் அல்ல; சமூகமே!
சமூகத்திற்கும் அதையெல்லாம் பற்றிக் கவலையில்லை. கட்சி மயக்கம். இறுதியில் அல்லோல கல்லோலப்படுவது சமூகமே! இவற்றைப் பற்றியெல்லாம் சமூகம் எப்போது சிந்திக்கும்? தலைமைகள் எப்போது சிந்திக்கும்? தெரியாது.
ஆகக்குறைந்தது இந்த விவாதத்தையாவது சரியாக பயன்படுத்துங்கள். மக்கள் உங்களைத் தெரிவுசெய்கிறார்கள்; என்றால் அது உங்களிடம் ஒப்படைக்கப்படும் அமானிதம்; என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் பேச்சுக்கள் வரலாற்றில் பதியப்பட முன்கூட்டிய வாழ்த்துக்கள்.