ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் மறைவு, ஊடகத்துறைக்கு மாத்திரமல்லாமல் முழு நாட்டுக்கும் பேரிழப்பாகும்;


அனுதாப செய்தியில் கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவிப்பு

அஸ்லம் எஸ்.மௌலானா-
டகத்துறையில் புகழ்பூத்துப் பிரகாசித்த சிரேஷ்ட ஒலிபரப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் திடீர் மறைவு, ஊடகத்துறைக்கு மாத்திரமல்லாமல் தமிழ் பேசும் சமூகத்தினருக்கும் நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

சிறந்த குடும்பப் பின்னணியைக் கொண்ட ஏ.ஆர்.எம்.ஜிப்ரி, மிகவும் அமைதி, நேர்மை, நற்குணங்கள் கொண்ட ஒருவராகவும் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்ற ஒலிபரப்பாளராகவும் நல்லாசானாகவும் திகழ்ந்து வந்தார். சில பாடசாலைகளில் அதிபராக கடமையாற்றி, தனது நிர்வாக, முகாமைத்துவத் திறமையினால் அப்பாடசாலைகளின் குறுகிய கால வளர்ச்சிக்கு வித்திட்டிருந்தார்.

மிகப்பெரும் அறிவு, ஆற்றலை தன்னகத்தே கொண்டிருந்த ஏ.ஆர்.எம்.ஜிப்ரி, இலங்கை வானொலியில் அறிவுக்களஞ்சியம் நிகழ்ச்சியை பல வருடங்களாக நடாத்தி, மாணவர்களினதும் பெற்றோரினதும் வானொலி நேயர்களினதும் பொது அறிவு வளர்ச்சிக்கு விருந்தளித்து வந்துள்ளார். அத்துடன் போட்டிப் பரீட்சைகளுக்கு தோற்றுவோரை பயிற்றுவிப்பதிலும் அறிவிப்புத்துறையில் ஆர்வம் கொண்டோரை ஊக்குவித்து, வழிகாட்டுவதிலும் பெரும்பங்களிப்பு செய்து வந்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் அதனை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து, ஆதரவுத்தளத்தை உருவாக்குவதில் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுடன் இணைந்து தனது மேடைப் பேச்சாற்றல் மூலம் பெரும் பங்காற்றியுள்ளார். பிற்பட்ட காலங்களில் அவர் மாற்றுக் கட்சிகளில் அங்கம் வகித்த போதிலும் தனது பேச்சு, செயற்பாடுகளினால் எவரையும் புண்படுத்தாமல் ஒரு நாகரீகமான அரசியல் கலாசாரமொன்றை தனக்கேயுரிய பாணியில் கடைப்பிடித்து வந்தார். இதனால் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் எல்லோராலும் இவர் விரும்பி, மதிக்கப்பட்டார்.

பொதுவாக ஊடகத்துறைக்கும் சமூகத்திற்கும் நாட்டுக்கும் அளப்பரிய சேவையாற்றி வந்த நிலையில் இவர் திடீரென நோய்வாய்ப்பட்டு, இவ்வுலகுக்கு விடை கொடுத்துச் சென்றுள்ளமை எல்லோருக்கும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும் இறைவனின் நாட்டம் எதுவோ அதனை பொருந்திக் கொள்வதே எமது மார்க்கமாகும்.

அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட குடும்ப உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்" என்று கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -