கொரோணா தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கும் பொருட்டு, அவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட கிழக்கு பிரதேசத்திற்கு அழைத்துவர வேண்டாம் என வலியுறுத்தும் கண்டண போராட்டம் இன்று - வெள்ளிக்கிழமை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கண்டன போராட்டத்தில், கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் பங்கேற்றது. வந்தாறுமூலையில் அமைந்துள்ள பல்கலைக்கழக பிரதான வளாகத்தின் முன்பாக நடைபெற்ற எதிப்பு நடவடிக்கையில் பெருந்திரளான மாணவர்களும் பல்கலைக்கழக ஊழியர்களும் கலந்துகொண்டு கண்டன சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பினர்.
'வேண்டாம் வேண்டாம், கொரோணா வேண்டாம்'
'அழிக்காதே அழிக்காதே, எம் இனத்தை அழிக்காதே'
'நாடு சீனாவிற்கு, மக்கள் கொரோணாவிற்கா'
'மீட்போம் மீட்போம், உயிர்களை மீட்போம்'
'நோய்களைப் பரப்ப, நாம்தான் கிடைத்தோமா'
'இல்லாத கொரோணாவை, எம் மண்ணில் விதைக்காதே'
கொன்றது போதும், கொள்ளை நோய் தேவையா'
'வேண்டாம் வேண்டாம், கொரோணாவிற்குள் அரசியல் வேண்டாம்'
'மாற்று மாற்று, கொரோணாவிற்கான இடத்தை மாற்று' போன்ற கோஷங்களை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உச்சரித்த வண்ணம் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டம் காரணமாக மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் போக்குவரத்து இடையூறுகள் எற்பட்டதனால், நிலமையை கட்டுப்படுத்தும் பொருட்டு போக்குவரத்து பொலிசார் கடமைகளில் ஈடுபட்டிருந்தமையை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.