கொரோனா (Covid 19) எனும் வைரஸ் சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவி நூற்றுக்கணக்கான உயிர்களை பலி கொண்டு, தற்போது ஏறத்தாள உலகின் எல்லா நாடுகளிலும் பரவியுள்ளது. இது காய்ச்சல், தடுமல், உடல் அசதி போன்ற சாதாரண அறிகுறிகளுடன் தோன்றினாலும் சுவாசிக்க முடியாத அளவு நுரையீரலை தாக்குவதாலே மரணம் நிகழ்வதாக கூறப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தக்கூடிய (vaccine) மருந்தை கண்டு பிடித்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. சீனாவும் இவ்வைரஸின் தாக்கத்தில் இருந்து மீள்வதாக சொல்லப்படுகிறது.
இவ்வைரஸ் மேலாதிக்கம் செலுத்த நினைக்கும் நாடுகளினால் மனிதர்களை நிலை குழையச் செய்யும் நோக்கில் தயாரிக்கப்பட்டதாகவே நம்பப்படுகிறது. பரஸ்பரம் சீனாவை அமெரிக்காவும் அமெரிக்காவை சீனாவும் குற்றம் சாட்டினாலும் இதன் உரிமையாளர்கள் யார் என்பது மர்மமாகவே இருந்துவருகிறது. எது எப்படியோ உயிரியல் யுத்தம் (Bio War) என்ற புதிய ஆயுத உற்பத்தியில் வெற்றிபெற்று விட்டார்கள். இதன்மூலம் எந்தவொரு நாட்டையும் அடிபணிய வைக்கலாம் என்பதை நிரூபித்து விட்டார்கள் என்பதே உண்மை.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் சீன நாட்டு பெண் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், IDH வைத்தியசாலையில் வைத்து அவருக்கு சிகிச்சையளித்து வெற்றி கண்டதாகவும் இலங்கை அரசு பெருமை கொண்டது. அதுமட்டுமல்ல சுகாதார அமைச்சர் நேரடியாக சென்று குறித்த சீனப் பெண்ணுக்கு மலர்கொத்து கொடுத்து அவரை முத்தமிடுவது போன்ற காணொளிகளும் வெளிவந்தன.
கொரோனோ வைரஸ் தொற்று அதிகரித்திருக்கும் நிலையில், வெளிநாடுகளுக்கு பயணத்தடை விதித்துள்ள இலங்கை அரசாங்கம், வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவுக்கு எவ்வித தடைகளும் விதிக்கப்படவில்லை என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சீன அரசாங்கம் அண்மையில் 50 ஆயிரம் முகமூடிகளையும் (Mask) வைரைஸ் தொற்றை கண்டுபிடிக்கும் உபகரணங்களையும் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்கும் நிலையில் இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இருவருக்கு கொரோனோ வைரஸ் இருப்பதை சுகாதாரத் துறையினர் ஊர்ஜிதம் செய்துள்ளனர். மட்டக்களப்பின் எல்லையில் அமைந்துள்ள முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு சொந்தமான பல்கலைக்கழக கட்டடத்தை தனிமைப்படுத்தி வைக்கும் தடுப்பு முகாமாக செயற்படும் அறிவிப்பையும் அதிரடியாக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு எதிரான கடையடைப்பு போராட்டங்களும் எதிர்ப்பு அரசியலும் மேலெழுந்துள்ளது.
இதே நேரம் இவ்வெதிர்ப்பு நடவடிக்கையை செய்தியாக வெளியிட்ட செய்தி நிறுவனங்கள் சிங்களவர் ஒருவர் தனக்குச் சொந்தமான சொகுசு ஹோட்டல் விடுதிகளை தனிமைப்படுத்தி வைக்கும் நிலையமாக பயன்படுத்த அனுமதி வழங்கியிருப்பதை பாராட்டி, சிங்களவர்களின் தேசபக்தியையும் தமிழ், முஸ்லிம்களின் குறுகிய சிந்தனைப் போக்கை வெளிப்படையாக நிறுவியதையும் காணமுடிந்தது.
கொழும்பில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் பிள்ளை ஒன்றின் தந்தைக்கு கொரோனோ வைரஸ் இருப்பதை காரணம்காட்டி, நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் மூடிவிட அரசு எடுத்த தீர்மானம் சமயோசிதமான முடிவு என்றாலும், நீடிக்கப்பட்டிருக்கும் காலம் இதுவொரு அரசியல் புரளியை ஏற்படுத்த அரசாங்கம் எத்தனிக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.
மார்ச் 16 முதல் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மற்றும் அதிபர்களின் தொடர்பணி நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக தோற்கடிப்பதை நோக்கமாகக் கொண்டுமே இந்த நீண்ட விடுமுறை பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 25 பொதுத் தேர்தல் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்து, இம்மாதம் 19இல் வேட்புமனு தாக்கல் முடிவடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் ஒரு வருட நினைவு தினமும் அனுஸ்டிக்கப்படவிருக்கும் நிலையில், ஏப்ரல் 20 வரை பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதன் மர்மத்தை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள முடியாதளவுக்கு முட்டாள்கள் கிடையாது.
கல்விநிலையங்களை மூடுவதன்மூலம், கொரோனோ வைரஸை ஏப்ரல் 20ஆம் திகதிக்கு முன்னர் முற்றாக அளித்து விடலாம் என்று அரசு கணிக்கிறதா? அல்லது ஒரு பதற்றமான சூழ்நிலைக்குள் நாடு இருப்பது போன்று காட்டி, 21ஆம் திகதி தேசிய துக்க தினமும் அனுஷ்டித்து தேர்தலை இலகுவாக வெற்றிகொள்ளப் பார்க்கின்றதா? ஒரு வைரஸ் தொற்றுக்கு எப்படி கால நிர்ணயம் செய்ய முடியும்?
அரசின் அபாயகரமான இந்த அறிவிப்பினால், அச்சமடைந்துள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்களை சேமிக்க தொடங்கிவிட்டனர். இதனால் அரிசி, பால்மா போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு நிகழ்வதுடன், இன்று பிரதான நகரங்களில் சன நடமாற்றம் குறைந்து வெறிச்சோடிக் காணப்படுகிறது.
இன்னுமொரு அரசியல் நோக்கமும் இதில் காணப்படுகிறது. எதிர்க்கட்சி பிளவுபட்டிருக்கும் நிலையில் இதனை சாதகமாகப் பயன்படுத்தி, பிரசார நடவடிக்கைகளை முடக்கவும் தேவையேற்படும் பட்சத்தில் தேர்தலை பிற்போடவுமான உபாயங்களை அரசு வகுத்துள்ளது என்பது நிதர்சனம்.