நுவரெலியா மாவட்டத்தில் நிலவி வரும் வரட்சியினை தொடர்ந்து காடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த காடுகளுக்கு தீ வைப்பதன் காரணமாக பல பிரதேசங்களில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்றைய தினம் தலவாக்கலை கிரேட்வெஸ்ட்டன் காட்டுப்பகுதிக்கு இனந்தெரியாதவர்கள் வைத்த தீ காரணமாக அக்காட்டுப்பகுதியில் சுமார் 50 ஏக்கர் வரை எரிந்து நாசமாகியுள்ளன.
குறித்த தீயினை கட்டுப்படுத்த இரனுவத்தின் ஹெலிகொப்படர் பயன்படுத்தப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
இவ்வாறு அடிக்கடி தீயணைப்பதற்கு இரானுவத்தினரையும் ஹெலிகொப்டர்களையும் பயன்படுத்துவதனால் பாரிய அளவில் நிதி வீணாகின்றன.இவை பெது மக்களின் பணமாகும். எனவே இவ்வாறான சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பும் பொது மக்களுக்கு அதிகாரிகளுக்கு உள்ளதாக பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதே வேளை வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை பாடசாலைக்கு அருகாமையில் உள்ள பைனஸ் காட்டுப்பகுதிக்கு இனந்தெரியாதவர்கள் இன்று (13) திகதி வைத்த தீ காரணமாக சுமார் 04 ஏக்கர் வரை எரிந்து நாசமாகியுள்ளன.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் பிரதேசத்திற்கு குடிநீர் பெற்றுக்கொடுக்கப்படும் பிரதான இடமான சிங்கமலை காட்டுப்பகுதிக்கு அடிக்கடி இனந்தெரியாதவர்கள் தீ வைப்பதனால் எதிர்காலத்தில் ஹட்டன் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு பாரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருக்கின்றன.
அடிக்கடி காட்டுப்பகுதிக்கு தீ வைப்பதன் காரணமாக எமது நாட்டுக்கே உரித்தான அரிய வகை உயிரினங்கள் மூலிகைகள் தாவரங்கள்,அழிந்து போகும் அபாயத்தனை எதிர் நோக்கியுள்ளன.
அத்துடன் காட்டுப்பகுதிக்கு தீ வைப்பதன் காரணமாக கொடிய வகை மிருகங்கள் மக்கள் வாழும் பிரதேசங்களை நோக்கி வரும் அபாயமும் ஏற்பட்டுள்ளன.
நீரேந்தும் பிரதேசங்களுக்கு வைக்கப்படும் தீ காரணமாக இன்று நீரூற்றுக்கள் அற்றுப் போய் நீர்த்தீக்களின் நீர் மட்டமும் வெகுவாக குறைந்து வருகின்றன.
இதனால் தேசிய மின்சார உற்பத்தியும் பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
எனவே எமது பெறுமதிமிக்க சொத்தக்களை நாமே அழித்து எமக்கு வினையினை தேடிக்கொள்வதற்கு பதிலாக அனைவரும் காடுகளை காக்க முன்வர வேண்டும் என பலர் கோரிக்கை விடுக்கின்றனர்.