கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தை முழுமையாக தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகளை முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களும் கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அரச, தனியார் நிறுவனங்கள், பிரதான பஸ் நிலையம், சந்தைகள், வங்கிகள் மற்றும் கடற்கரை உள்ளிட்ட பொது இடங்கள் அனைத்தையும் கொரோனா வைரஸ் தொற்று நீக்கி கொண்டு சுத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் இதற்குரிய இரசாயன பதார்த்தங்களையும் உபகரணங்களையும் அவசரமாக பெற்றுத்தருமாறு சுகாதார அமைச்சின் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் ஆகியோரிடம் இன்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அவ்வாறே முற்காப்பு நடவடிக்கையாக கல்முனையிலுள்ள வைத்தியசாலையொன்றை மையப்படுத்தி கொரோனா சந்தேக நபர்களை பரிசோதிப்பதற்கான பிரிவொன்றை அமைப்பதற்கும் அதற்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், வைத்தியர்கள், தாதியர் மற்றும் ஊழியர்கள் அணிவதற்கான பாதுகாப்பு அங்கிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டசுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில், பொது மக்கள் தமது வீடுகளில் பாதுகாப்பாக இருப்பது போன்று, தொடர்ந்தும் சில நாட்கள் வீடுகளில் தங்கியிருந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுடன் கொரோனா வைரஸ் தொற்று நீக்கி தெளிக்கப்பட்ட பின்னரே பொது இடங்களுக்கு செல்லுமாறும் பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
அத்துடன் கல்முனை மாநகர சபையில் கொரோனா தடுப்பு மத்திய நிலையம் ஒன்று உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் செயற்பட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இங்கு கொரோனா வைரஸ் தொற்று சம்மந்தமான தகவல்கள், ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களையும் தேவையான உதவிகளையும் பொது மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும், தொடர்புடைய திணைக்களத் தலைவர்களையும் வைத்திய அதிகாரிகளையும் உள்ளடக்கிய செயலணி ஒன்றை அமைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அதேவேளை, அண்மித்த காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து வந்த சுமார் 140 பேர் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் சுயமாக வைத்திய பரிசோதனைக்குட்பட்டதாக தெரியவில்லை. ஆகையினால் இவர்களை கண்காணிப்பதற்கும் விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வந்தோர் குறைந்தது 14 நாட்கள் தமது வீடுகளில் தம்மை சுய தனிமைக்குட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இதன்போது வீட்டில் இருக்கின்ற குடும்ப உறுப்பினர்களுடன் கூட நேரடி தொடர்புகளை பேணாமல் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கண்டிப்பாக அறிவுறுத்தப்படுவதுடன் இதை நடைமுறைப்படுத்துகின்ற விடயத்தில் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் மாத்திரமல்லாமல் அயலவர்கள் மற்றும் பொது மக்கள் கூட மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் வலியுறுத்துகிறார்.