வயிற்றிலுள்ள பிள்ளையை நம்பி கையிலுள்ள பிள்ளையை இழப்பது போல் எல்லை மீள் நிர்ணயத்திலுள்ள குறைபாடுகளை காட்டி புதிய பிரதேச செயலகங்களை இல்லாது செய்ய முற்படுவது அரசியல் காழ்புனர்சியை காட்டுவதாக நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் எம்.இராமச்சந்திரன் தெரிவித்தார்.
நோர்வூட் பிரதேசசபையின் மாதாந்த செயலமர்வு 12/03 டின்சின் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற போதேஇவ்வாறு தெரிவித்தார்.
அம்பகமுவ பிரதேச செயலகம் இரண்டாக பிரிக்கப்பட்டால் மக்களுக்கு சேவை செய்வதில் ஏற்படும் பிரச்சினை தொடர்பில் பிரேரணையொன்றை முன்வைத்து அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டிய செனன் மற்றும் வெளிஓயா பிரதேசமானது புதிதாக அமைக்கப்பட்ட நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு உள்வாங்கப்பட்டமையானது கண்டணத்திற்குரியது என சபை ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென சபைதலைவர் தெரிவித்தார். இத்தீர்மானத்திற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியினர் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இது தொடர்பில் உறுப்பினர் ராமச்சந்திரன் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நுவரெலியா மாவட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள பிரதேச செயலகமானது வெறுமனே கிடைத்ததொன்றல்ல. சுமார் 15 வருட கால போராட்டத்தின் பின்னர் 2016 ஆம் ஆண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பயானாகவே கடந்த மார்ச் முதலாம் திகதி பிரதேச செயலகங்கள் அதிகரிப்பதற்கான அங்கீகாரம் கிடைத்தது ஆனால், அதனை அரசியல் காழ்புனர்ச்சியால் தடுத்து நிறுத்த சிலர் முற்படுகின்றனர்.
சாய்ந்த மருது மக்கள் பல போராட்டங்களுக்கு மத்தியில் ஒரு நகரசபை பெற்றெடுத்தனர் அது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வந்த போது அந்த மக்கள் பட்டாசு கொழுத்தி பாற்சோறு வழங்கி கொண்டாடினார். ஆனால், அந்த சந்தோசம் நீடிக்க வில்லை. பல்வேறு காரணங்களை காட்டி அது நிறுத்தப்படுள்ளது.
ஆனால் நுவரெலியா மாவட்ட பிரதேசத்தில் ஐந்து பிரதேச செயலகங்கள் பத்தாக அதிகரித்தமையானது இலகுவாக கிடைத்ததொன்றல்ல பல வருடகாலமாக சிவில் அமைப்புகள் குறிப்பாக விரிவுரையாளர் விஜயச்சந்திரன் ,கண்டி அபிவிருத்தி தாபனத்தின் தலைவர் பெ.முத்துலிங்கம் உட்பட பல குழுக்கள் எல்லை மீள் நிர்ணயம் தொடர்பாக முன்னெடுத்த தொடர்ச்சியான ஆய்வு மற்றும் அதனை தொடர்ந்து வந்த அரசாங்கத்திடம் பேசு பொருளாக்கியமை பயனாகவும் அரசியல் சாணக்கித்தினாலும் முதற்கட்டமாக ஐந்து பிரதேச செயலகங்கள் பத்தாக அதிரிக்கப்பட்டன.
ஆகவே இவ்வாறு கிடைத்த செயலகங்களை பல்வேறு காரணங்களை காட்டி நிறுத்த நினைப்பது எம் மக்களுக்கு நாங்கள் செய்யும் துரோகமாகும் மேலும் புதிய பிரதேசசெயலகங்களை எடுத்துக்கொண்டு பின்னர் அதிலுள்ள குறைபாடுகளையும் மேலதிகமாக செயலக அதிகரிப்புகளையும் கோரலாம் மாறாக கிடைப்பதை நிறுத்தி விட்டு குறைகளை சுட்டிக்கொட்டுவதென்பது வயிற்றிலுள்ள பிள்ளையை நம்பி கையிலுள்ள பிள்ளையை இழந்தமையாகும் என்றார்.