குண்டெறிதல் போட்டியில் தேசிய சாதனையை முறியடித்த அய்மன்.



நேர்காணல்: எச்.எம்.எம்.பர்ஸான்-

கில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் மாணவன் அப்துர் ரகுமான் அய்மன் பதினான்கு வயதுக்குட்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட குண்டெறிதல் போட்டியில் தேசிய சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டியில் பங்குபற்றிய குறித்த மாணவன் 2017 ம் ஆண்டு பதிவாகியிருந்த 13.55 மீற்றர் தூரத்தை முறியடித்து 15.03 மீற்றர் தூரம் வீசி புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

புதிய சாதனையை நிலைநாட்டியுள்ள மாணவன் அய்மன் இப்போட்டியில் பெற்றுக்கொண்ட அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொள்கின்றார்.
உங்களைப்பற்றி கூறுங்கள்?

நான் வாழைச்சேனை ஹைராத் வீதியைச் சேர்ந்த எம்.பீ. அப்துர் ரகுமான், ஏ.பாத்திமா ஹானிம் தம்பதிகளின் மகன் ஏ.ஆர்.அய்மன் நான் தற்போது வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் ஒன்பதாம் தரத்தில் கல்விகற்று வருகின்றேன்.
விளையாட்டுத்துறையில் உங்களுக்கு எப்போது ஆர்வம் வந்தது?

நான் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும்போது எனது சகோதரி பாடசாலை ரீதியாக நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வார் அப்போது அவர் பயிற்சிகளில் ஈடுபடுவார் அதை நான் ஆர்வத்தோடு பார்ப்பேன் அப்போதுதான் நான் விளையாட்டில் ஆர்வம் கொண்டேன்.
குண்டெறிதல் போட்டியை நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கான காரணம் என்ன?

விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் எனது சகோதரி குறிப்பாக குண்டெறிதல் போட்டியைத்தான் தேர்ந்தெடுப்பார் அதைப் பார்த்துப்பார்த்து என்மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. எனக்கும் சந்தர்ப்பம் கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருந்த போதுதான் பாடசாலை ரீதியாக நடைபெற்ற விளையாட்டுப்போட்டியில் எனது பாடசாலை விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் என்னை குண்டெறிதல் போட்டிக்கு தேர்ந்தெடுத்து உன்னால் சிறப்பாக இப்போட்டியில் பிரகாசிக்க முடியும் நீ இதில் கலந்து கொள் என்று ஆர்வமூட்டினார். அதனால்தான் நான் இதனைத் தேர்ந்தெடுத்தேன்.
தேசிய ரீதியில் சாதனையொன்றை நிலைநாட்ட வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தீர்களா?

மாவாட்ட ரீதியாக மற்றும் மாகாண ரீதியாக நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொள்ளும்போது எனக்கு தேசியத்தில் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. ஆனால் மாகாணத்தில் நான் முதலிடம் பெற்று தேசிய போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட போதுதான் நான் தேசிய போட்டியிலும் சாதனை படைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான பயிற்சிகளில் தினந்தோறும் ஈடுபட்டு வந்தேன்.
தேசியத்தில் சாதனை படைத்த உங்கள் மனநிலை தற்போது எவ்வாறு உள்ள்ளது?
எனது நம்பிக்கை வீண்போகவில்லை என்பதினால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் அத்தோடு என்னை வாழ்த்துவதற்கும், பாராட்டுவதற்கும் எனது சொந்தங்கள், என்மீது அன்பும், ஆர்வமும் கொண்டவர்கள் என்னை வாழ்த்திச் செல்வதோடு பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கிச் செல்கின்றனர். அதை நினைக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளதோடு என் உள்ளத்துக்கு புத்துணர்ச்சியும் ஏற்படுகின்றது.
நீங்கள் இந்த சாதனையினை நிலைநாட்ட உங்களுக்கு பக்கபலமாக நின்றவர்கள் யார்?
முதலில் எனது பெற்றோர்களுக்கு நன்றி சொல்கின்றேன் ஏனென்றால் அவர்கள்தான் நான் இதில் ஆர்வம் கொண்டபோது எனக்கு முழு சுதந்திரத்தையும் வழங்கி என்னை ஆர்வப்படுத்தினார்கள். அதேபோன்று எனது பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் மற்றும் ஆசிரியர்கள் குறிப்பாக எனக்கு பயிற்சி வழங்கிய ஆசிரியர்கள் என் சாதனைக்கு பக்கபலமாக செயற்பட்டார்கள்.
எதிர்காலத்தில் நீங்கள் சாதிக்க இருப்பது என்ன?

நான் கல்வித்துறையிலும், விளையாட்டுத்துறையிலும் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டவுள்ளேன் அத்தோடு நான் ஆர்வமாக மேற்கொண்டுள்ள குண்டெறிதல் போட்டியில் ஒலிம்பிக் போட்டி வரைக்கும் செல்ல வேண்டும் என்று ஆசை கொள்கின்றேன் அதற்காக நான் கல்வியோடு சேர்த்து எனது விளையாட்டுத்துறை பயிற்சியிலும் தொடராக ஈடுபடவுள்ளேன். நான் தேசியத்தில் சாதனை படைத்தது போன்று சர்வதேசத்திலும் சாதனைகள் படைக்க அவைவரினதும் பிரார்த்தனைகளை எதிர்பார்க்கின்றேன்.
உங்களது இலட்சியம்?

நான் ஒரு விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராக வந்து என்போன்ற வீரர்கள் பலரை உருவாக்க வேண்டும் அவர்கள் தேசியத்திலும், சர்வதேசத்திலும் பிரகாசிக்க வேண்டும் என்பதுதான் எனது இலட்சியமாகவுள்ளது.
உங்களுக்கு ஊக்குவிப்பு எவ்வாறு அமைந்தது?

நான் தேசிய போட்டியில் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக எனது ஆசிரியர்கள் மிகவும் கூடுதல் முயற்சி செய்தார்கள் என்னை தினந்தோறும் மைதானத்திற்கு அழைத்து பயிற்சிகள் வழங்கினார்கள். நான் ஒவ்வொரு நாளும் காலை ஆறுமணிக்கு முன்னர் மைதானத்திற்கு சென்றுவிடுவேன் அதேபோன்று அன்றைய தினம் மாலை மூன்றுமணிக்கு மைதானத்திற்கு சென்று பயிற்சிகளில் ஈடுபடுவேன் நான் செல்லுகின்ற போதெல்லாம் மனம் சளைக்காமல் எனது ஆசிரியர்கள் எனக்கு பயிற்சிகளை வழங்கினார்கள் அத்தோடு எனது பெற்றோர்கள் எனக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களையும் பெற்றுத்தந்து என்னை பெரிதும் ஊக்குவித்தார்கள்.
இறுதியாக நீங்கள் சொல்ல விரும்புவது?
எனது தாய்தந்தை, பாடசாலை அதிபர் மதிப்புக்குரிய ஏ.எம்.எம்.தாஹிர் மற்றும் எனக்கு பயிற்சியளித்த ஆசிரியர்களான ஆர்.ஆலோஜிதன், பீ.ரீ.பிரதீப், எம்.ஐ.பஹீம் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், எனது வகுப்பு நண்பர்கள், எனக்கு ஆர்வமூட்டிய எனது குடும்பத்தினர்கள், என்னை மத்தித்து எனக்கு வாழ்த்துச் சொன்ன உறவுகள் அத்தனை பேருக்கும் நான் நன்றிகளை தெரிவிக்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -