எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 'மலையக தன்னெழுச்சி இளைஞர்கள்' அமைப்பு நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளது.
சுயேட்சை அணியாக களமிறங்கவுள்ள இவ்வமைப்பு நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் (12.03.2020) அன்று கட்டுப்பணம் செலுத்தியது.
அதன்பின்னர் பொதுத்தேர்தலில் களமிறங்கும் அறிவிப்பை அமைப்பின் தலைவர் கணேசன் உதயகுமார் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.
இது தொடர்பில் அவர் கூறியதாவது.
" மலையகத்தில் சமூக மாற்றத்தை வலியுறுத்தியும், தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பியும் பல செயல் திட்டங்களை முன்னெடுத்த மலையக தன்னெழுச்சி இளைஞர்களாகிய நாம் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானம் எடுத்தோம்.
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்கு உரிய சேவைகளை வழங்கவில்லை. அவர்களுக்கு அநீதிகளையே அழைத்தனர். இதனால் தான் உரிய சம்பள உயர்வைக்கூட பெற்றுக்கொடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தான் எமது தாய், தந்தை, சகோதரர்களுக்காக நாம் அரசியல் களம் புகுந்துள்ளோம். பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நம்புகின்றோம். நாங்களும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் தான். எனவே, எமது மக்கள் முழு ஆதரவையும் நுவரெலியா மாவட்டத்தில் வழங்குவார்கள் என உறுதியாக நம்புகின்றோம்.
அதேபோல் மலையக பெருந்தோட்டப்பகுதியில் இருந்து கொழும்பு உட்பட பிற நகர்களில் தொழில் புரியும் எமது சொந்தங்களுக்காகவும் பல திட்டங்கள் எம்மிடம் உள்ளன. அவர்களும் எமக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர்.
வாக்குகளை சிதறடிப்பது அல்ல, மக்களின் வாக்குகளைப் பெற்று மக்களுக்காக சேவையாற்றவே நாம் பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றோம். நிச்சயம் வெற்றிபெறுவோம் என்பதை மீண்டுமொருமுறை கூறிக்கொள்கின்றேன்." - என்றார்.