பெரமுன அரசாங்கம் பொய் வாக்குறுதிகளை வழங்கி நாட்டு மக்களை ஏமாற்றியே விட்டது


ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை முக்கியஸ்தர் கயான் கூறுகிறார்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி நாட்டு மக்களை ஏமாற்றி விட்டது என்று சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர் தொழிலதிபர் தேசபந்து கலாநிதி கயான் தர்ஷன தெரிவித்தார்.

வருகின்ற பொது தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட முன்வந்து உள்ள இவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இறக்காமத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது மேலும் தெரிவித்தவை வருமாறு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொய்யான வாக்குறுதிகளையே வழங்கி நாட்டு மக்களை ஏமாற்றி விட்டது. அவர்களின் ஆட்சி நூறு நாட்களை தாண்டி விட்டபோதிலும் இந்நாட்டு மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு, எரிபொருட்களின் விலை குறைப்பு, விவசாயிகளுக்கான உர மானியம், வருமானம் குறைந்த குடும்பங்களுக்கான உலர் உணவுகள், தொழில் முயற்சியாளர்களுக்கான வங்கி கடன்கள், இளையோர்களுக்கான ஒரு இலட்சம் வேலை வாய்ப்புகள் ஆகியன அவர்களுக்கு கிடைக்கவே இல்லை. மத்திய வங்கி கொள்ளையர்கள் கைது செய்யப்படவே இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் நம்பிக்கை கொடுப்பனவாக இல்லை. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை குழம்பி போய் ஒருவிதமான அச்ச நிலைமையே மேலோங்கி காணப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு மக்களின் இதய கனியாக விளங்குபவர் கௌரவ. சஜித் பிரேமதாஸ அவர்கள். உங்களை போலவே நானும் அவரையே எனது தலைவராக வரித்து கொண்டு உள்ளேன். உங்களின் உள்ளத்தை உள்ளபடி புரிந்து கொண்டவனாக, உங்களின் எதிர்பார்ப்புகளை தெரிந்து கொண்டவனாக, உங்களில் ஒருவனாக இத்தேர்தலில் போட்டியிடுகின்றேன். 1994 ஆம் ஆண்டு முதலான 26 வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியால் ஜனாதிபதி ஒருவரை நாட்டு மக்களுக்கு கொடுக்க முடியவில்லை. அதே போல 2001, 2005 ஆண்டுகளில் கிடைத்த ஆட்சிகளையும் தக்க வைத்து கொள்ள முடியவில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களுக்கு அநியாயங்கள் தொடர்ந்தேச்சையாக இழைக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி தொண்டர்கள் மனம் உடைந்து போய் உள்ளார்கள். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டவராகவேதான் எமது தலைவர் சஜித் பிரேமதாஸ ஐக்கிய மக்கள் சக்தியை காலத்தின் கட்டளையை உணர்ந்தவராக ஸ்தாபித்து உள்ளார்.

நாம் அனைவரும் இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டவர்களாக இவர் வழியில் ஒன்றித்து நிலைத்து நின்று அம்பாறை மாவட்டத்தை கட்டி எழுப்புதல் வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை தொலைபேசி சின்னத்துக்கு வழங்கி சஜித் பிரேமதாஸவின் கரங்களை பலப்படுத்த வேண்டும். மூன்று தசாப்த கால யுத்தத்தின்போதும் சரி, அதற்கு பின்னரும் சரி நான் எமது மண்ணையும், எமது மக்களையும் விட்டு ஓடியவன் அல்லன். என்னால் முடிந்த சேவைகளை அப்போது தொட்டு உங்களுக்கு வழங்கி வந்திருக்கின்றேன். அம்பாறை மாவட்ட மக்களின் கனவுகளையே எனது மனத்தில் சுமக்கின்றேன். நான் சொல்வதையே செய்வேன். செய்வதையே சொல்வேன். செய்து தர முடியாத வாக்குறுதிகளை ஒருபோதும் உங்களுக்கு தரவே மாட்டேன். எமது தலைவர் சஜித் பிரேமதாஸவின் பாதையை அடியொற்றியவனாக ஏழை மக்களின் தோழனாகவே என்றும் நடந்து கொள்வேன். அடி மட்ட மக்களை சுரண்டுகின்ற குறுகிய சுய இலாப அரசியலை ஒருபோதும் செய்யவே மாட்டேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -