"ரணில் விக்கிமரசிங்க தலைமையிலான அணி நுவரெலியா மாவட்டத்தில் தனித்து போட்டியிட்டால் கூட எமக்கு எவ்வித சவாலும் இல்லை - இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு


க.கிஷாந்தன்-
"ரணில் விக்கிமரசிங்க தலைமையிலான அணி நுவரெலியா மாவட்டத்தில் தனித்து போட்டியிட்டால் கூட எமக்கு எவ்வித சவாலும் இல்லை. பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி நடைபோடும்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், முன்னாள் அமைச்சருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அற்புதராஜாவை பொதுச்செயலாளராகக் கொண்ட தேசிய மலையக முன்னணி தனது ஆதரவை (13.03.2020) அன்று தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வழங்கியது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இராதாகிருஷ்ணன் மேலும் கூறியதாவது,
" தேசிய மலையக முன்னணி இன்று எம்முடன் இணைந்துள்ளது. செயலாளர் அற்புதராஜா உள்ளிட்ட குழுவினரை முதலில் நாம் வரவேற்கின்றோம். ஜனாதிபதித் தேர்தலின்போது சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கிய அக்கட்சி உறுப்பினர்கள், பொதுத்தேர்தலில் எமக்கு நேசக்கரம் நீட்டியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் எமக்கான அடித்தளம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே, ரணில் தரப்பு தனித்து களமிறங்கினால்கூட அது எமக்கு சவாலாக அமையாது. கடந்தமுறை நுவரெலியா மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் முற்போக்கு கூட்டணி கைப்பற்றியது. இம்முறையும் அந்த பெறுபேறுகளை பெறுவோம்.
எம்மால் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எம்மை தெரிவுசெய்ய வேண்டும் என்ற சிந்தனை மக்கள் மனங்களிலும் ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியில் உள்ள 90வீதமான உறுப்பினர்கள் சஜித்துடனேயே இருக்கின்றனர். எனவே, பெரும்பான்மையுடன்அவர் வெற்றிபெறுவார். ரணிலுடன் உள்ள பத்த பேர் வெற்றிபெறுவார்களா என்பது கேள்விக்குறியே....

ஜனாதிபதித் தேர்தலின்போது சஜித்துக்கு ஐக்கிய தேசியக்கட்சி முழுமையான ஆதரவை வழங்கியிருந்தால் அவர் வெற்றிபெற்றிருப்பார் என்ற எண்ணம் மக்கள் மனங்களில் இன்றளவிலும் உள்ளது. இதனால்தான் சஜித்தின் புதிய கட்சிக்கு அமோக ஆதரவை வழங்கியுள்ளனர்.

பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பட்டியலில் நானும், திகாம்பரமும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. மூன்றாவது வேட்பாளர் யார் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும்.

கொரோனா வைரஸ்.....

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் 'கொரோனா' வைரஸ் இலங்கையையும் விட்டுவைக்கவில்லை. இங்கு இரண்டுபேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கமும், இராணுவமும் முன்னெடுத்துவருகின்றன. இத்தகைய செயற்பாடுகளை நாம் பாராட்டுகின்றோம்.
இந்த விடயத்தால் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டிருந்தாலும், மக்களின் உயிரே எமக்கு முக்கியம். என்றாவது சுற்றுலாத்துறையை கட்டியெழுப்பிவிடலாம்.

'கொரோனா' வைரஸால் உலக சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது. ஏற்றுமதி வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலையும் குறைவடைந்துள்ளது. இலங்கையில் கடும் வறட்சியும் நிலவுகின்றது. இந்த விடயங்கள் தேயிலை ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்று கம்பனிகள் கூறுகின்றன.

எனினும், ஜனாதிபதி உறுதியளித்தப்படி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறித்த காலப்பகுதியில் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட்டால் மகிழ்ச்சியே.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -