புத்தளத்தில் கீரியும் பாம்புகளுமாக இருந்த ஹக்கீம், ரிசாத், பாயிஸ் ஆகியோர் ஒன்றிணைந்து ஹக்கீமின் மச்சானின் கட்சியில் போட்டியிடுகின்றனர்.
இந்த இணைவு என்பது புத்தளத்துக்கு இதுவரை பெறாத பாராளுமன்ற உறுப்பினரை பெறுவது, கலுவாக்காடு குப்பை திட்டம் போன்றவற்றை நீக்குவது போன்றவற்றுக்கு எம் பி தேவை என்பதற்காக என சொல்லப்படுகிறது.
இங்கு பல விடயங்கள் சிந்திக்கப்பட வேண்டும்.
உண்மையில் புத்தளத்துக்கான ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பெற வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அவர் எம் பி ஆகித்தான் புத்தளத்து பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்றால் இன்று வரை புத்தளம் நகர சபை தலைவராக பாயிஸ் முழு அதிகாரத்துடன் இருந்தும் ஏன் தீர்க்க முடியாமல் போனது?
அத்துடன் புத்தளத்தை சேர்ந்த நவவி அவர்கள் இரண்டு வருடங்கள் அ.இ.ம. காவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததால் புத்தளத்துக்கு எம் பி இருக்கவில்லை என்ற கூற்றும் அடிபட்டு போகிறது. ஆனாலும் இந்த எம் பியாலும், அவர் சார்ந்த ஐ தே க அரசாலும் புத்தளம் மக்கள் பிரச்சினை தீரவில்லையா? தீரவில்லையாயின் இதற்கு என்ன காரணம்.?
புத்தளத்தின் குப்பை பிரச்சினை என்பது கடந்த ஐ தே க ஆட்சிக்காலத்தில் சம்பிக்கவினால் ஏற்படுத்தப்பட்டது. அப்போது ஹக்கீமும் ரிசாதும் அமைச்சர்களாகவே இருந்தனர். முஸ்லிம்கள் 99 வீதம் வாக்களித்த கட்சியாக ஐ தே க இருந்தது. இத்தனை அதிகாரம் இருந்தும் புத்தளம் பிரச்சினை தீராத போது அதே தவிசாளர் அதே அமைச்சர்களின் கூட்டில் எம் பி ஆகி அதுவும் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு புத்தளத்துக்கு சேவை செய்ய முடியுமா? சில வேளை அரசில் இவர்கள் சேர்ந்தாலும் எதிர்த்து நின்று விட்டு வேறு வழி இன்றி நக்கு திண்ண வந்தவர்களாகவே அரசு இவர்களை பார்க்கும் என்பதால் உவர்களால் புத்தள குப்பை பிரச்சினையை தீர்க்க முடியுமா? புத்தளம் மாவட்ட முஸ்லிம்களுக்கு சேவை செய்ய முடியுமா? நிச்சயம் முடியாது.
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதோர் வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா?
அப்படியானால் தீர்வு என்ன?
முதலில் அடுத்த அரசாங்கம் என்பது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் என்பது நூறு வீதம் உண்மை. இந்த நிலையில் பொதுஜப பெரமுனவுக்கு சார்பான, கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி கோட்டாவுக்கு ஆதரவளித்த முஸ்லிம் கட்சி ஒன்று தனியாக போட்டியிட்டு அதில் புதியதொரு வேட்பாளரை வெல்ல வைப்பதன் மூலமே புத்தளத்துக்கு அரசின் சேவைகளை பெற்றுக்கொடுக்க முடியும். அவ்வாறு அவர் வெல்லாது போனாலும் புத்தளம் மக்களின் கணிசமான வாக்குகளை பெற்றால் அவருக்குரிய கவுரவம் அரசாங்கத்தில் இருக்கும். அதன் மூலம் அவரால் அரசிடமிருந்து பல சேவைகளை பெற்றுத்தர முடியும்.
ஆகவே இது விடயத்தில் புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் மீண்டும் மீண்டும் ஏமாறாது நிதானமாக சிந்திக்க வேண்டும் என பொதுஜன பெரமுன ஆதரவுக்கட்சியான உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.