வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
வடகொரியாவில் கடந்த 15 ஆம் தேதியன்று சூரியனின் நாள் எனப்படும் வடகொரிய நிறுவனரும், கிம் ஜாங் உன்னின் தாத்தாவுமான கிம் இல் சங்கின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாதது பல கேள்விகளை எழுப்பியது.
இதனை அடுத்து, கடந்த இரு தினங்களுக்கு முன்னர், கிம் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியானது. உடல்பருமன், புகைப்பிடிக்கும் வழக்கம் மற்றும் அதிகப்படியான வேலையால் இதய நோயால் பாதிக்கப்பட்ட கிம் ஜாங் உன்னுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக சி.என்.என் செய்தி வெளியிட்டது.
ஆனால், வட கொரியாவின் மிக நெருங்கிய அண்டை நாடான தென் கொரியா, கவலைக்கிடமாக இருக்கும் அளவுக்கு கிம் உடல்நிலை இல்லை என்று கூறியது. வட கொரியாவில் இருந்து எந்த அசாதாரண குறியீடுகளும் வர வில்லை என்று தென் கொரிய அதிபர் மாளிகை தெரிவித்தது.
எனினும், கிம் உடல்நிலை பற்றிய உண்மை முழுவதும் தெரியாத நிலையே உள்ளது. இந்த விவகாரம் தெடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவிக்கையில், ”கிம் உடல்நிலை தொடர்பான தகவல்கள் தவறு என்று நினைக்கிறேன். நான் அதை அப்படியே எடுத்துக்கொள்கிறேன். அவர்கள் பழைய ஆவணங்களை பயன்படுத்தியுள்ளனர் என்று கேள்விப்பட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.