பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படை தளபதிகளின் வழிகாட்டலுடன் இராணுவ முகாம்களில் முழுமையான சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றை தயாரித்து, அதனை நடைமுறைப்படுத்தும், கண்காணிக்கும் பொறுப்பு புதிய ஜனாதிபதி செயலணியொன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
'மக்களையும் முப்படை அதிகாரிகளையும் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பது முக்கியமானதாகும். தொற்றுடையவர்களுடன் நெருங்கிப் பணியாற்ற வேண்டியுள்ள குழுக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். நோயாளிகளை வைத்தியசாலைகளுக்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை நோய்த்தடுப்பு நிலையங்களுக்கும் அனுப்ப வேண்டும். முன்னுரிமையளிக்கப்பட வேண்டியது வைரஸ் சமூகத்தில் பரவுவதை தடுப்பதாகும்' என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
முப்படைக்கு சொந்தமான அனைத்து முகாம்களையும் கண்காணித்து உடனடியாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி நிபுணர்கள் குழுவொன்றிடம் தெரிவித்தார். நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவ அதிகாரிகளின் சுகாதார பாதுகாப்பை வழங்குவதற்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டும். முகாம்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக தேவையின் அடிப்படையில் விசேட வைத்திய நிவுணர்களின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நோயை கட்டுப்படுத்துவதில் இதுவரை அடைந்துள்ள வெற்றியை போன்றே எங்கேனும் தவறுகள் ஏற்பட்டிருப்பின் அதனை கண்டறியவேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, முன்னாள் விமானப்படைத் தளபதி, மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார் போர்ஸ், ரொஷான் குணதிலக, முன்னாள் கடற்படை தளபதி எட்மிரல் (ஓய்வுபெற்ற) ஜயந்த பெரேரா, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின பணிப்பாளர் நாயகம் ரியர் எட்மிரல் (ஓய்வுபெற்ற) அனந்த பீரிஸ், மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, விசேட வைத்திய நிபுணர்களான பந்துல விஜேசிறிவர்த்தன, வஜிர சேனாரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.