நாட்டின் எல்லாத்தரப்பினரையும் கவர்ந்து வரும் ஜனாதிபதியின் செயற்பாடுகள் தனியே சுய நலன் சாரா செயல்முறைகள் எனஅரசியல் மற்றும் பொதுநலன் சார் வல்லுனர்களால் விமர்சிக்கப்படுகிற நிலை மாறிடலாம் என்கின்ற நிலையை பொதுப் போக்காளர்களிடம் இது ஏற்படுத்தி விடலாம். விசேடமாக பட்ஜெட் இன்றிய அரசாங்கமும் கலைக்கப்பட்ட பாராளுமன்றமும் உள்ள நிலையில் கொரோனா பற்றி GMOA மற்றும் சுகாதார அமைச்சு கூறும் அறிக்கைகள் நிஜமானால் நிலைமை இன்னும் மோசமாகலாம். அதேவேளை உலக வல்லரசுகள் திக்குமுக்காடும் நிலையில் நமது நிலை மிகப்பெரிய கேள்விக்குறியாகும் வாய்ப்புகளும் அநேகம்.
கொரானா தாக்கத்தின் காரணமாக முடக்கப்பட்டுள்ள நாட்டின் நடவடிக்கைகளை முன்னெடுத்து மீளமைக்கும் நோக்குடன் கலைக்கப்பட்ட பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட்டு அதனூடாக 6 மாதம் அல்லது ஒரு வருட ஆயுற்காலத்தை கொண்ட தேசிய அரசாங்கத்திற்கான அழைப்பை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும் என்கின்ற நிலை நாட்டுக்கு மிகப் பொருத்தமானதாகும்.
2/3 பெரும்பான்மையை எதிர்பார்க்கும் கட்சியொன்று அதற்கான நிலை இருந்தும் மக்கள் நலனுக்காக நாட்டின் தேசிய முன்னேற்றத்திற்காக எதிர்கட்சிகளையும் இணைத்து நாட்டின் தேசிய இடர் நிலையை சமாளிப்பதற்கான யுக்தியானது நம் நாட்டின் மீதான சர்வதேசிய முதலீடுகளையும், மானியங்களையும் அதிகரிக்கும் என்பதுடன் தனி நபர் வளர்ச்சியை அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியத்தை அதிகரிக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
அடிப்படையில், பொருளாதார ரீதியிலான சிக்கல்களில் இருந்தும் மக்களை விடுவிப்பதற்கான உபாயங்களையும் அரசாங்கத்தின் மானிய ரீதியிலான ஆதரவினையும் நல்க முடியும். மீளக்கட்டமைக்கப்படும் அரசாங்கத்தின் மூலமாக ஜனாதிபதி நாட்டுக்கு பொருத்தமான உள்ளூர் உற்பத்தி மற்றும் நிலையான பொருளாதார மேம்பாட்டுக்கான வழிமுறைகளையும் கைக்கொள்ள முடியுமாக இருக்கும்.
அதேவேளை, உடனடியான தேர்தல் ஒன்றினை எதிர்கொள்ளும் மனோ நிலை மக்களுக்கும், அரசியல் வேட்பாளர்களுக்கும் உடனடியாக இருக்குமா என்பது மிக அழுத்தமான கேள்வியாகும். எது எவ்வாறிருப்பினும் மக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் உடைந்து போயிருக்கின்ற நிலையில் 85 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்களர்களின் மனோ நிலை கருத்திற் கொள்ளப்படல் மிக இன்றியமையாததாகும்.
எவ்வாறாக இருப்பினும், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியுட்பட எல்லாக்கட்சிகளும் ஜனாதிபதியுடன் உடன்பட தயாராகும் இந் நிலையை அரசாங்கத்தின் பிரதமரும் , சிரேஷ்ட அரசியல் வாதியான மஹிந்த மற்றும் இலங்கை அரசியலில் கொள்கை வகுப்பாளரான பஷில் ராஜபக்ஷே ஆகியோர் பயன்படுத்திக் கொள்ள தயங்க மாட்டார்கள் என்றே கருதவேண்டியுள்ளது.