முகம்மட் றஸீம்-
புனித ரமழான் நோன்பு ஆரம்பித்து விட்டது. கொவிட்-19 கொரனாவினால் முடக்கப்பட்டு தொழில்துறைகளையும், அன்றாட வருமானத்தையும் இழந்து நின்ற நாம், நோன்பு காலத் தேவைகளை நிறைவு செய்வது எவ்வாறு என்று தடுமாறிக் கொண்டிருக்கின்றோம். கொரனா நெருக்கடியின் விளைவாக பல்வேறு பாதிப்புக்களை உலக மக்களைப் போலவே இலங்கை மக்களும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். பொதுவில் இலங்கை மக்கள் அனைவரும் அச்சம், பதட்டம், அடுத்து என்ன செய்வது? என்ற நிலையில் தவித்துப் போயுள்ளனர். எப்போதெல்லாம் அவலங்களையும், நெருக்கடிகளையும் இதற்கு முன்னர் இலங்கை எதிர்கொண்டாலும் அப்போதெல்லாம் மனித நேயம் உயிர்த்தெழுந்து தன் கடமையினை ஆற்றத் தவறியதில்லை. இம்முறையும் அரசு சார்ந்த, அரசு சாராத நிறுவனங்கள், சமய நிறுவனங்கள், இளைஞர் குழுக்கள், தனிநபர்கள் என பல தரப்பட்ட பிரிவினர் தமது மனித நேயக் கடமைகளை மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஆற்றத் தவறவில்லை. அந்த வகையில், முஸ்லிம் எய்ட் சிறிலங்கா உடனடியாகவே களத்தில் இறங்கிச் செயற்பட்டது. உடன் பயன்படுத்தக் கூடிய உணவுப் பொருட்களை உள்ளக்கிய 1000 பொதிகளை இராணுவ தலைமையத்தின் ஊடாக கொரனா நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த முகாம்களுக்கு வழங்கி தன் பணியினை ஆரம்பித்தது. ஐடிஎச் வைத்தியசாலைக்கு கொரனா சுகாதார சேவைக்கு உதவும் மருத்துவ உபகரணங்களை வழங்கியது. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் எய்ட் நிவாரணப் பணியானது, 2650 உலருணவுப் பொதிகளை ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட வறிய, நலிந்த அன்றாட வருமானம் இழந்த குடும்பங்களுக்கு வினியோகித்தது .மேலும், தனது வானவில் குடும்பம் என்ற நிகழ்ச்சித் திட்டத்திற்குட்பட்ட 159 அநாதரவாக சிறார்களைப் பராமரிக்கும் குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கிதுடன் நிவாரணச் செயற்பாட்டின் முதற்கட்டம் நிறைவு செய்யப்பட்டது. கொழும்பு. கம்பஹா, புத்தளம், குருணாகல, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்கள் இன, மொழி, சமய பாகுபாடின்றி இந் நிவாரணம் மூலம் பயன்பெற்றன.
முஸ்லிம் எய்ட் சிறிலங்கா, முஸ்லிம் கவுன்சில் சிறிலங்கா, சிறிலங்கா மினரெத் நிறுவனங்கள் நிதி திரட்டுவதிலும் உணவுப் பொருட்களைப் பொதி செய்தல் மற்றும் வினியோகம் செய்வது போன்ற செயற்பாடுகளிலும் கூட்டிணைந்து செயற்பட்டன. முஸ்லிம் எய்ட் சிறிலங்கா அமைப்பினால், இரண்டாம் கட்டமாக 2000 உலர் உணவுப் பொதிகளை மொனராகல, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏப்ரல் ஆரம்பம் மற்றும் நடுப்பகுதியில்; வினியோகிக்க முடிந்தது. சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்கள், சர்வமத அமைப்புகள், முஸ்லிம் எய்ட் இன் பிரதேச பங்காளர் அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் உதவியுடன் மிகுந்த போக்குவரத்து நெருக்கடிகளுக்கு மத்தியில் இரண்டாம் கட்ட வினியோகம் வெற்றிகரமாக முடிவடைந்தது.
அவரவர் தம் பொறுப்புக்களை ஆற்றினர்:
அரச பாதுகாப்புப் படையினர் தமது பணிகளை தளராது ஆற்றினர். சுகாதாரத்துறையினர் அர்ப்பணிப்புடன் தமது கடமையினைச் செய்தனர். அத்தியாவசிய சேவை வழங்கும் நிர்வாகத் துறையினர் பொதுமக்களுக்கு தமது கடமைகளை வழங்கினர். அது போலவே, அரச சார்பற்ற மனித நேயப் பணியாளர்கள் நிறுவன ரீதியாகவும், சமயத் தளங்களை அடிப்படையாகக் கொண்டும் தனிப்பட்ட முறையிலும் நடமாட்ட சுதந்திரம் முடக்கப்பட்டிருந்த நிலையிலும் அர்ப்பணிப்புடன் தமது தார்மீகப் பொறுப்புகளை ஆற்றினர். வீடு வீடாகச் சென்று பசி போக்கப் பாடுபட்டனர். முஸ்லிம் எய்ட் சிறிலங்கா தனியாகவும் கூட்டாகவும் தனது பொறுப்பினை இயன்றவரை நிறைவேற்றியது.
விழிப்புணர்வுப் பரப்புரை :
பசி தீர்க்க உணவுப் பொருட்கள் வழங்குவதுடன் மாத்திரம் நின்று விடயாது, கொரனா ஆபத்திலிருந்து மக்கள் தம்மைத் தாம் பாதுகாப்பதற்கான வழிமுறைகள், அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்கள் ஆற்ற வேண்டிய மனிதநேய தர்மச் செயற்பாடுகள், மற்றும் எதிர்காலத்தில் வரக்கூடிய உணவு நெருக்கடிக்குத் தீர்வாக அனைவரும் ஏதோ வகையில் உணவுட்பத்தில் ஒரு பங்கினை ஆற்ற வேண்டும் ஆகிய விடயங்களில் முஸ்லிம் எய்ட் சிறிலங்கா விழிப்புணர்வுப் பரப்புரையை ஆரம்பித்தது. தனது சக்திக்குட்பட்ட அளவிற்கு துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் கருத்தாடல்கள் மூலமாகவும் விழிப்புணர்வினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். இப்பணியானது அடுத்து வரும் காலங்களில் அதிகமாக மேற்கொள்ளப்படல் வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒரே சமயத்தில் பலமுனையில் சவால்கள்:
நடமாட்ட சுதந்திரம் முடக்கம், நோய்;த் தொற்று ஏற்படக்கூடிய ஆபத்துகள், தேவைப்பட்ட உணவுப் பொருட்கள் தேவையான அளவிற்கு உரிய நேரத்தில் பெற முடியாத நிலை, பொருட்களின் இயற்கையான செயற்கையான விலையேற்றங்கள், பாவனைக்குகந்த உணவுப் பொருட்களை தேர்ந்தெடுப்பதிலுள்ள கடினங்கள், உணவுத் தேவையுடையோர் ஆயிரக்கணக்கில் இருக்கையில் அவர்கள் மத்தியிலிருந்து ஆகவும் பொருத்தமானவர்களைத் தெரிவு செய்வதிலுள்ள கடினங்கள, சங்கடங்கள், மனத்தாங்கல்கள் என்பவற்றை ஒவ்வொரு மனித நேயப்பணியாளரும் அனுபவித்தனர். அனைத்துத் தரப்பினரும் ஏதோ வகையில் வருமான இழப்பிற்கு உட்பட்டதனால் நன்கொடை பெறுவதில் மனித நேய அமைப்புகள் கடினமான சூழலை எதிர்கொண்டன. இப்படிப்பட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டே முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
முஸ்லிம் எய்ட் பங்களார்களுடன் இணைந்த செயற்பாடுகள்:
வரப்போகும் நெருக்கடி நிலைமையை ஊகித்தறிந்து கொண்ட முஸ்லிம் எய்ட் சிறிலங்கா, ஏற்கனவே தன்னுடன் பங்காளர் அமைப்புக்களாகச் செயற்பட்டு வருகின்ற 'முஸ்லிம் கவுன்சில் சிறிலங்கா' மற்றும் 'சிறிலங்கா மினரெத்' அமைப்புகளுடன் இணைந்து நிதி திரட்டல் மற்றும் நிவாரணப் பணிகளை ஆரம்பித்தது. தவிர பிரதேச மட்டங்களில் சர்ம அமைப்புகள், சர்வ மதத்தலைவர்கள், முஸ்லிம் எய்ட் இன் மாவட்ட ரீதியான பங்காளர் அமைப்புகள் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து மனித நேய நிவாரணப் பணிகளை வெற்றிகரமாக ஆற்ற முடிந்தது. இவ்வாறாக இணைந்து செயற்பட்டதன் மூலமாக அனைத்து இன மத பிரிவுகளையும் சேர்ந்த வறிய, பின்தங்கிய, அன்றாட வருத்தில் பிழைப்பு நடாத்துகின்ற குடும்பங்களின் பசியினை போக்க முடிந்தமை படிப்பினை தரும் செயற்பாடாகும்.
உடனடி மற்றும் எதிர்கால நெருக்கடிகளை எதிர்கொள்ள உபாயங்கள்:
நெருக்கடி நிலைமைகள் இன்னமும் தொடர்கின்றன. நேரடியான விளைவுகளை மாத்திரம் நாம் இப்போது பார்க்கின்றோம். ஒவ்வொரு தனிநபரும் சமூகக் குழுக்களுக்கும் உளவியல் ரீதியில் ஏற்பட்ட பாதிப்புகள், உடனடி நீண்டகால பொருளாதார வீழ்ச்சிகள், தேசிய உற்பத்தியில் ஏற்பட்டுள்ள முடக்கம், இழந்து விட்ட வாழ்வாதாரங்கள், பறிபோய்விட்ட வேலை வாய்ப்புகள் என கொரனாவின் பாதிப்புகளை இலங்கைச் சமூகம் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் குழுக்களின் உதவியுடன் சரி செய்ய வேண்டிய பாரிய பொறுப்புகள் நம்முன் உள்ளன.
முஸ்லிம் எய்ட் சிறிலங்கா தனது கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் நிகழ்கால மற்றும் எதிர்காலத் தேவைகளை மதிப்பீடு செய்து வருகின்றது. அடுத்த கட்டச் செயற்பாடுகளுக்காக அமைப்பின் அக நிலையில் காலப் பொருத்தமான மாற்றங்களைச் செய்து கொண்டு புறநிலைச் செயற்பாடுகளைத் திட்டமிட்டு வருகின்றது. எந்தவொரு நெருக்கடியும் நிரந்தரமானதல்ல, மனிதகுலம் தனது நூற்றாண்டு கால அனுபவம், ஆற்றல்களைக் கொண்டு இந்த கொரனா நெருக்கடிக்கும் மிக விரைவில் தீர்வு காணும், எந்தவித நெருக்கடி நிலைமைகளையும் வெற்றி கொள்ளும் என முஸ்லிம் எய்ட் தலைமையகமும் அதன் இலங்கை கிளையாகிய முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனமும் உறுதியாக நம்புகின்றது.
புனிதரமழான் மாதத்தை எதிர்கொள்வோம் பணி செய்வோம்:
ஒவ்வொரு வருடமும் முஸ்லிம் எய்ட் சிறிலங்கா அதன் லண்டன் தலைமையகம், பல்வேறு நாடுகளில் செயற்படும் முஸ்லிம் எய்ட் நிதி திட்டும் அமைப்புகள், இலங்கையிலுள்ள கொடையாளிகள் உதவியுடன் ஆயிரக்கணக்கான வறிய குடும்பங்கள் நோன்பிருக்கவும் பசி போக்கவும் பணியாற்றியுள்ளது. இவ் வருடம் கொரனா நெருக்கடி காரணமாக புனித ரமழான் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்படப் போவதை உணர முடிகின்றது. முழு உலகும் பிராந்திய நாடுகளும் இலங்கையிலுள்ள ஒவ்வொரு தரப்புமே கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இவ் வருடத்தில் நமது ரமழான் பணி மிகுந்து சவால்களை எதிர்கொள்ளும் என்பது திண்ணம். இருந்த போதிலும் முஸ்லிம் எய்;ட் சிறிலங்கா தனது ரமழான் கால செயற்பாடுகளைச் சுருக்கி மிகவும் அத்தியாவசிய கடமையான ' நோன்பாளிகளைப் போசிப்போம்'- Feed the Fasting – என்ற பணியில் மாத்திரம் தனது கவனத்தைக் குவிக்கத் திட்டமிட்டுள்ளது. நன்கொடைக்கான அழைப்புகள் கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன. உள்ளவர்கள் தம்மிடம் உள்ளதில் சிறு சிறு பகுதியையேனும் இல்லாதோருக்கு வழங்கினால் அவர்களும் மனத் திருப்தியுடன் நோன்பிருக்க நிச்சயம் நம்மால் உதவ முடியும். நோன்புகாலக் கடமைகள் பலவற்றை வீட்டிற்குள்ளேயே நிறைவேற்ற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள நாம் வறிய, பின்தங்கிய குடும்பங்களுக்காக தர்மம் செய்வதில் அதிகமதிகமாக ஈடுபடுவோம்.
15 வருடகால தொடர்ச்சியான பணிகளில் முஸ்லிம் எய்ட் சிறிலங்கா அதிக பங்களிப்பினை அவசரகால மனித நேயச் செயற்பாடுகளில் வழங்கியுள்ளது. சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வதிவிடம், வாழ்வாதாரம், நீர் வினியோகம் செய்தல் போன்ற செயற்பாடுகனுடன் ஆரம்பித்த மனிதக் கடமைகள் யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பல்வேறு சமூகப் பிரிவினர்களுக்கும் தனது மனிதநேய சேவைகளை வழங்கி வருகின்றது. இன்று நம்முன்னுள்ள மிகப் பெரும் சவால் கொனாவும் அதன் எதிர்மறைத் தாக்கங்களும்.....
இணைந்து செயற்படுவோம்! விரைந்து செயற்படுவோம்! வெற்றி கொள்வோம்!