புனித ரமழானில் புனிதம்பேனி ரமழான் மாத சமயக் கடமைகளை செய்வதே சாலச் சிறந்தது. கடந்த சில வருடங்களாக முஸ்லிம் சமுகம் பல இன்னல்களையும், துயரங்களையும் அனுபவித்தவர்களாகவே புனித ரமழானை கடைப்பிடித்தோம் என்பதே யதார்த்தமான உண்மையாகும்.
கடந்த வருடம் ஸஹ்ரான் என்ற தீவிரவாதியின் அட்டூழியத்தால் எமது சமுகம் பல கடுமையான எதிர்ப்புக்களுக்கு உள்ளானதுடன் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டு மௌனிகளாகக்கப்பட்டோம்.
அத்துடன் அந்த ரமழானையும் அச்சத்துடனும், பல தடைகளுடனுமே கடைப்பிடித்தோம். குறிப்பாக வீடுகளில்கூட நிம்மதியாக இருக்க முடியாத நிலைமைகள் காணப்பட்டன. இரவு வணக்கங்களை உயிரைப் பனயம் வைத்தே அறை குறையாக செய்தோம் ஏன் நோன்பு நோற்பதற்காக அதிகாலை வேளையில் (ஸஹர் நேரத்தில்) வெளியில் வரமுடியாதளவு பயத்துடனே நாம் நோன்புகளை நோற்றோம் காரணம் வல்ல அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் என்ற ஒரே நம்பிக்கையில்தான் என்பதாகும்.
இவ்வருடமும் முஸ்லிம்களுக்கு ரமழான் சவால் மிக்க ஒரு நேரத்தில் வந்துள்ளது. உலகையே அச்சுறுத்திக் கொண்டு நாளாந்தம் மனிதர்களைத் தாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நோயால் சகல மக்களுமே அச்சத்திலும், மரணப் பயத்திலும் இருக்கின்ற ஒரு தருணத்தில் புனித மிகு ரமழான் விரைவாகவே வந்து விட்டது.
கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நோயைக் கட்டுப்படுத்த தொடராக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் இவ்வருட நோன்பு ஆரம்பமும் ஊரடங்குச் சட்டத்திற்குள் வந்து விட்டதால் முஸ்லிம்கள் தமது கடமையை சரியான முறையில் நிறைவேற்றிக் கொள்வதில் பல இடர்கள் ஏற்பட்டுள்ளதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
எம்மைச் சூழ்ந்துள்ள கொடிய நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நாட்டில் பொதுவான சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளதால் நாம் அனைவரும் அதற்கு பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டிய பொறுப்புள்ளவர்களாக மாறியுள்ளோம் என்பதனை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டியுள்ளது.
கடமையான நோன்பைக் காரணம் காட்டி எந்தவொரு முஸ்லிம் குடிமகனும் எந்தவொரு கட்டத்திலும் அரசாங்கத்தினதோ அல்லது சுகாதாரத் தரப்பினரதோ அல்லது பாதுகாப்புத் தரப்பினரதோ அறிவுறுத்தல்களுக்கும், கட்டளைகளுக்கும் மாற்றமாக நடந்து கொள்ளவோ அல்லது அவற்றை மீறி நடந்து கொள்வதற்கோ வழி சமைத்து விடாது மிகவும் நிதானமாகவும், அமைதியாகவும், சாதுர்யத் தன்மைகளுடனும் நடந்து கொண்டு இஸ்லாமிய நெறிமுறைகளை காப்பாற்ற வேண்டும் என்பதே சகலரதும் எதிர்பார்ப்பாகும்.
எனவே இஸ்லாமியக் கடமைகளைக் காரணம்காட்டி தயவு செய்து முஸ்லிம்கள் மாற்றுமதச் சமுகத்தினையோ அல்லது அரசையோ அல்லது பாதுகாப்புத் தரப்பினரையோ பகைத்துக் கொள்ளாது புனித ரமழானை முடியுமானவரை வணக்க வழிபாடுகளுடன் மற்றவர்களுக்கு துன்பங்களையும், இடஞ்சல்களையும் கொடுத்து விடாது அமைதியாக முழு மனதுடன் கடைப்பிடித்துச் செயற்படுவோமாக.