உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தொற்றின் காரணமாக மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் சில வறிய மக்கள் போசாக்கு குறைபாடுகளுடன் காணப்படுவதாக சுகாதார திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட கிராமங்களுக்கு வாழைச்சேனை மீனவர்களால் மீன்கள் வழங்கப்பட்டது.
அதனடிப்படையில் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தின் மீனவர்களினால் மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித் திணைக்கள உதவி பணிப்பாளரிடம் போசாக்கு குறைபாடுகளுடன் காணப்படும் மக்களுக்கான மீன்கள் கையளிக்கும் நிகழ்வு வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித் திணைக்கள உதவி பணிப்பாளர் ருக்சன் குரூஸ், கோறளைப்பற்று மத்தி கடற்றொழில் பரிசோதகர் எஸ்.ஐ.முஹமட் இம்தியாஸ், வாழைச்சேனை பொதுச்சுகாதார பரிசோதகர் என்.எம்.எம்.சிஹான், வாழைச்சேனை அல் அமான் படகு உரிமையாளர் சங்கம், அல்ஷபா மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தின் மீனவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தின் மீனவர்களினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் போசாக்கு குறைபாடுகளுடன் காணப்படும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பூலாக்காடு, முறுத்தானை போன்ற கிராமத்தில் வாழும் அறுநூறு குடும்பங்களுக்கு வழங்குவதற்கு தலா ஒன்றரை கிலோ கிராம் எடையுடைய மீன்கள் கையளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் வழங்கிய தகவலின் பிரகாரம் போசாக்கு குறைபாடுகளுடன் காணப்படும் மக்களுக்கு மீன்கள் வழங்கி உதவும் வகையில் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தின் மீனவர்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் மீன்கள் கையளிக்கப்பட்டது.
எனவே மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித் திணைக்களத்தின் வேண்டுகோளை ஏற்று ஒரே நாளில் அறுநூறு குடும்பங்களுக்கு மீன்கள் வழங்க உதவிகளை வழங்கிய வாழைச்சேனை அல் அமான் படகு உரிமையாளர் சங்கம், அல்ஷபா மீனவர்கள் கூட்டுறவு சங்க மீனவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித் திணைக்கள உதவி பணிப்பாளர் ருக்சன் குரூஸ் தெரிவித்தார்.