காரைதீவு நிருபர் சகா-
வெல்லாவெளி கமநலசேவைப்பிரிவுக்குட்பட்ட விவசாயிகளுக்கு உரமானியம் வழங்குவதில் தாமதிப்பதாகத் தெரிவித்து அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே நேரத்தில் தங்களுக்கான உரத்தினை வழங்கவேண்டும் என கோரி கமநலசேவை நிலையத்திற்கு முன்னால் இன்று(24) காலை வெள்ளிக்கிழமை விவசாயிகள் ஒன்றுதிரண்டனர் .
அப்பகுதி விவசாயிகளுக்கான உரமானியம் விதைத்து ஒருமாதமாகியும் அதிகமான விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கப்படவில்லை என விவசாயிகள் கவலைதெரிவித்தனர்.
அதே வேளை பசளை தட்டுப்பாடாக இருப்பதனால் ஏக்கருக்கு குறைந்த அளவில் பசளை வழங்கப்பட்டு இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
அவ்விடத்திற்கு வருகை தந்த வெல்லாவெளிப் பொலிசார் விவசாயிகளை கூடி நிற்காமல் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் குறைந்த அளவான விவசாயிகளே கமநலசேவை நிலையத்தில் நிற்குமாறும் அறிவுத்தினர்.
இது தொடர்பாக வெல்லாவெளி கமநலசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் முகமட் பாயிஸ் அவர்களுடன் வினாவியபோது வெல்லாவெளிப் பிரதேசத்தில் 3500 ஏக்கர் நெற்காணி இருப்பதுடன் இதில் அரைவாசி விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கிவிட்டதாகவும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் போதியளவான உரம் தற்போது இல்லாமல் இருக்கின்றது .
இந்நிலையில் தற்போது அனைத்து விவசாயிகளும் ஒரேநேரத்தில் உர மானியத்தை வழங்கவேண்டும் என கோரியதனால் இருக்கின்ற உரம் போதாமையால் கொழும்பில் இருந்து உரத்தினைப் பெற்றுக்கொண்டு அனைத்து விவசாயிகளுக்கும் இம்மாதத்திற்குள் உரத்தினை வழங்குவதுடன் குறைந்த அளவு உரம் வழங்கப்பட்ட விவிசாயிகளுக்கும் மிகுதியாக வழங்கவேண்டிய உரத்தினையும் வழங்கவுள்ளதாகத் தெரிவித்தார் .