அரச பாதுகாப்பு சுகாதாரத்தரப்பினரின் அறிவுறுத்தல்களுக்கு மதிப்பளிப்போம், திட்டமிட்டு செயற்பட்டு அதன்படி எம்மைத் தயார் படுத்துவோம் - பைஸர் முஸ்தபாவின் அன்பான வேண்டுகோள்
மினுவாங்கொடை நிருபர்-
புனித ரமழான் மாதம், இன்னும் ஓரிரு தினங்களில் நம்மை வந்தடையவுள்ளது. இம்முறை வரும் ரமழான் வித்தியாசமாக இருப்பதனால், இதில் கண்ணியமாகவும், பொறுமையாகவும், அமைதிகாத்து நடந்து கொள்ளுமாறும், முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, இலங்கை வாழ் சகல முஸ்லிம்களிடமும் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த வேண்டுகோளில் அவர் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களின் விளைவால் மன உளைச்சலுக்குள்ளான முஸ்லிம்கள், பெரும் கவலையோடும் கஷ்டத்தோடும் பீதியோடும் ரமழான் நோன்புகளைக் கழித்தனர். இவ்வருட ரமழானை, கொரோனா தொற்றின் கோரப்பிடிக்கு மத்தியில் பல்வேறு தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாதவாறு துன்பத்தோடும் அச்சத்தோடும் கழிக்கவுள்ளனர்.
நாம் முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். இக்காலகட்டத்தில், பொறுமையைக் கடைப் பிடித்து நம்பிக்கையைக் கட்டியெழுப்புவோம்.விட்டுக்கொடுப்புடனும் பணிவுடனும் நடந்து கொள்வோம். திட்டமிடல், ஒருங்கிணைத்தல், கட்டுப்படல், செயற்படல் என்பனவற்றைக் கட்டாயம் பின்பற்றுவோம். இந்த ஊரடங்கை, நாம் நாமாகவே கருதி, அதற்குக் கட்டுப்படுவோம். ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் அத்தியவசியத் தேவைகளுக்காக மாத்திரம் பாதுகாப்புடன் வெளியே செல்வோம். அரச, பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தரப்பினரின் அறிவுறுத்தல்களுக்கு மதிப்பளித்து, புனித ரமழானில் கண்ணியமாகவும் பொறுமையாகவும் அமைதியாகவும் நடந்து கொள்வோம்.
சிலவேளை, நம்மத்தியில் மலரவுள்ள புனித ரமழான் மாதமும் இப்படியே ஊரடங்கோடு கழிந்து விடலாம். ஊரடங்கு உத்தரவு இடையிடையே தளர்த்தப்படும் சாத்தியக்கூறுகள் குறைவாகவே காணப்படுகின்றன. அவ்வாறு தளர்த்தப்பட்டாலும் கூட, மக்கள் கூடுவதற்கான அனுமதி தற்போதைய நிலையில் கிடைக்கப்போவதில்லை என்பதே உண்மை.
இதேவேளை, இன்னும் ஓரிரு நாட்களில் நம்மை எதிர்கொள்ளவுள்ள புனித ரமழானுக்காக, இன்றிலிருந்தே நாம் நம்மைத் தயார் படுத்தினால் மாத்திரமே, வரப்போகும் ஆன்மீக அமர்வு நமக்கு ஒரு புது அனுபவத்தைத் தந்து விட்டுப் போகும். இல்லையெனில், இந்தச் சந்தர்ப்பமும் அந்தப் புது அனுபவத்தைத் தராமல் வீணாகவே போய்விடும்.
இம்முறை, பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களினால் வழங்கப்படும் இப்தார் நிகழ்வுகள், ஆங்காங்கே நடைபெறும் கூட்டுத் தராவீஹ் தொழுகைகள், உலமாக்களின் மார்க்கச் சொற்பொழிவுகள், ஹிஸ்பு மஜ்லிஸ்கள், பள்ளிவாசல் இஃதிகாப், திடல் பெருநாள் தொழுகைகள் என்பன இல்லாத ஒரு ரமழான் மாதமே நம்மை நோக்கி வர இருக்கிறது.
இந்த வருடத்து ரமழான் நமது தனிமைக்கும், இறைத் தொடர்புகளுக்கும் ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தருகின்ற ஒன்றாகவும்,
ஒவ்வொருவரின் உள்ளச்சத்தையும், தனிப்பட்ட அமல்களையும் சீர் தூக்கிப் பார்க்கின்ற ஒரு மாதமாகவும் அமையப்போகின்றது.
இந்த ரமழானில் தனித்து நின்று தொழுவதில்,
தனித்திருந்து குர்ஆன் ஓதுவதில்,
தனித்திருந்து திக்ருகள் செய்வதில்,
தனியே இருந்து இறைவன் முன்றில் அழுது மன்றாடுவதில் உள்ள புதுவகை இன்பத்தை அனுபவிக்க, நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்வது சிறந்தது.
இதே நேரம், இம்முறை ரமழானில் இக்கட்டான சூழ்நிலையில், நமது ஊரிலே பக்கத்து வீட்டிலே எத்தனை பேருக்கு இப்தாரும், ஸஹரும் செய்யக் கூடிய வசதி வாய்ப்புக்கள் இல்லாமல் போகும் சந்தர்ப்பங்கள் நிறையவே இருக்கலாம். இது போன்றவர்களை,
இன்றிலிருந்தே அடையாளம் கண்டு நமது ஸதகா, ஸகாத் மற்றும் தான தர்மங்கள் போன்றவற்றை இயன்றளவு அவர்களைச் சென்றடைய வழி வகைகளைச் செய்யலாம். செல்வந்தர்களும், வசதி படைத்தவர்களும், பள்ளிவாசல் நிர்வாகிகளும், முஸ்லிம் அமைப்புக்களின் அங்கத்தவர்களும் இப்தார், ஸஹர் ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க முன்வரலாம்.
இது தவிர, ரமழான் மாதம் முழுவதுக்கும் அல்லது மறு அறிவித்தல் வரை அமுலில் உள்ளவகையிலான பணிப்புரைகள், முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை வக்ப் சபை ஆகியவற்றினால் சகல மஸ்ஜித் நிர்வாகிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். இந்தப் பணிப்புரைகளில், பள்ளிவாசல் ஜமாஅத் அங்கத்தவர்களுக்கு முறைப்படி அறிவிக்குமாறும், கொரோனா தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சினாலும் பாதுகாப்புத் தரப்பினராலும் வழங்கப்படும் பணிப்புரைகளையும் வழிகாட்டல்களையும் பற்றி ஜமாஅத் அங்கத்தவர்களுக்கு தெளிவூட்டுவதோடு, அவற்றைப் பின்பற்றி கடைபிடிக்குமாறு மக்களை ஊக்கப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில், இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களும் இப்பணிப்புரைகளை ஏற்று, மிகப் பொறுப்போடும், அவதானமாகவும் நடந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.
எனவே, பல துன்ப துயரத்திற்கும், அச்சத்திற்கும் மத்தியில் புனித ரமழான் நம்மை வந்தடையவுள்ள நிலையில், இந்த ரமழானை நாம் சிறந்த முறையில் திட்டமிட்டு அதன் படி செயற்படுவோம்.
இப்போது இருந்தே எம்மை நாம் தயார்படுத்திக் கொள்வோம். நாம் தனிமைப்படுவோம் ! நாம் முன்கூட்டியே திட்டமிடுவோம் !!