இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 1978 ம் ஆண்டு அரசியலமைப்பானது மேலாண்மை பொருந்திய (Supreme Law) சட்டமூலாதாரமாக காணப்படுகிறது. அதற்கமைய, அரசியலமைப்பின் அத்தியாயம் XI ஆனது பாராளுமன்றத்தின் நடவடிக்கை முறையையும் தத்துவங்களையும் உள்ளடக்கிய ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது.
அரசியலமைப்பின் உறுப்புரை 70 இன் பிரகாரம் பாராளுமன்ற அமர்வுகள் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்பதனைப் புரிந்துகொள்ளலாம். அதன்படி பாராளுமன்றத்தை பிரகடனம் ஒன்றின்மூலம் காலத்துக்குகாலம் கூட்டுவதற்கும், கலைப்பதற்கும், அமர்வுகளை நிறுத்துவதற்குமான தத்துவத்தினை நாட்டின் ஜனாதிபதி கொண்டுள்ளார்.
எனினும் உறுப்புரை 70(ஈ) இன் பிரகாரம் பாராளுமன்றத்தில் ஒதுக்கீட்டுச் (வரவு செலவு) சட்டமூலம் (Appropriation Bill) நிராகரிக்கப்பட்டதன் விளைவாக ஜனாதிபதி அதனைக் கலைக்காது போனால் இரண்டாவது தடவையும் அச்சட்டமூலம் நிராகரிக்கப்படுமிடத்து அது கலைக்கப்படவேண்டும். மேலும் உறுப்புரை 70(5)(அ) இன் பிரகாரம் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை கலைப்பதற்காக செய்யும் பிரகடனத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்யும் திகதி அல்லது திகதிகளை நிர்ணயித்தல் வேண்டும். அத்துடன் அத்தகைய பிரகடனம் செய்யப்பட்ட தினத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு பிற்படாத திகதியில் புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அழைப்பை விடுக்க வேண்டும். அத்துடன் உறுப்புரை 62(2) இன் பிரகாரம் குறித்த காலத்துக் முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் பாராளுமன்றத்தை கலைப்பதற்காக செய்யும் பிரகடனத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்யும் திகதி அல்லது திகதிகளை நிர்ணயித்தல் வேண்டும். அத்துடன் அத்தகைய பிரகடனம் செய்யப்பட்ட தினத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு பிற்படாத திகதியில் புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அழைப்பை விடுக்க வேண்டும். அத்துடன் இவ்வாறான ஏற்பாடுகளின் பிரகாரம் புதிய பிரகடனம் ஒன்றின் மூலம் ஏற்கனவே பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட திகதி வேறுபடுத்தப்படலாம். எனினும் பின்னராக நிர்ணயிக்கப்படும் திகதியானது முதலாவது பிரகடனத்திகதியிலிருந்து மூன்று மாதங்களுக்குப் பிந்தாத ஒரு திகதியாக இருத்தல் வேண்டும்.
அதேபோன்று 1981 ம் ஆண்டு 01ம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டமூலமும் இங்கு தாக்கம் செலுத்தும் சட்டமூலாதாரமாக காணப்படுகின்றது. மேலும் இச்சட்டமானது 2009 ம் ஆண்டு 58 ம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டமாக திருத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதற்கமைய இச்சட்டத்தின் பிரிவுகள் 10 மற்றும் 24 போன்றவைகள் முக்கியமானவைகளாக பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக பிரிவு 10 ஆனது தெரிவத்தாட்சி அதிகாரியினால் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் காலப்பகுதி மற்றும் வாக்கெடுப்பு நடைபெற வேண்டிய தேதி பற்றியும் குறிப்பிடுகிறது. அதன் படி, பிரிவு 10(1) இன் பிரகாரம் பாராளுமன்றத்தைக் கலைக்கும் (ஒவ்வொரு பிரகடனத்திலும்) அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் திகதி அல்லது திகதிகளைத் தீர்மானிக்கும் ஒவ்வொரு பிரகடனத்திலும் வேட்பு தாக்கல் செய்யும் காலத்தையும் வாக்களிப்புக்கான தினத்pதையும் ஜனாதிபதி வர்த்தமானி மூலம் பிரசுரிக்க வேண்டும். அத்துடன் குறித்த பிரகடனம் வர்த்தமானி அறிவுறுத்தல் மூலம் பிரசுரிக்கப்பட்ட தினத்திலிருந்து 10 ம் நாளில் வேட்புமனு தாக்கல் செய்யும் காலம் ஆரம்பிக்க வேண்டும் என்பதுடன் 17 ம் நாள் நண்பகல் 12 மணியுடன் அது நிறைவடைய வேண்டும். மேலும் வாக்களிப்பை தீர்மானிக்கும் தினமானது வேட்புமனு தாக்கல் செய்து 5 தொடக்கம் 7 வாரங்களுக்கு மேற்படாமலிருத்தல் வேண்டும்.
மேலும் பிரிவு 24 ஆனது வாக்கெடுப்பிற்கான அறிவித்தல் பற்றிய ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. அதாவது இச்சட்டத்தின் பிரிவு 22 இன் பிரகாரம் தேர்தல் மாவட்டத்தின் அறிக்கை பெறப்பட்டதன் பேரில் தேர்தல் போட்டியிடப்படவுள்ள மாவட்டம், வேட்பாளர்கள் பெயர் பட்டியல் மற்றும் இலக்கங்கள், வாக்கெடுப்பிற்கான தினம் (பிரிவு 10 ல் குறிப்பிட்டது), பெண்களுக்காக விஷேடமாக ஒதுக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பு நிலையங்கள் உட்பட அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களையும் உள்ளடக்கிய வர்த்தமானியொன்று தேர்தல்கள் ஆணையாளரினால் பிரசுரிக்கப்பட வேண்டும். என்னும் பிரிவு 24(2) ஆனது அவசர சூழ்நிலைகளில் குறிப்படப்பட்ட வாக்கெடுப்பு நிலையங்களை மாற்றுவதற்கான விஷேட அதிகாரம் தேர்தல்கள் ஆணையாளருக்கு காணப்படுகின்றது. அதேபோன்று பிரிவு 24(3) இன் பிரகாரம் அவசர சூழ்நிலைகள் அல்லது எதிர்பாராத நிகழ்வுகளினால் ஏதாவது தேர்தல் மாவட்டத்தில் தேர்தல் நடாத்தமுடியாமல் போகுமிடத்து தேர்தலுக்கான பிறிதொரு தினத்தை வர்த்தமானி மூலம் வெளியிடும் அதிகாரத்தை தேர்தல்கள் ஆணையாளர் கொண்டுள்ளார் என்பதுடன் அப்பிந்திய தினமானது வர்த்தமான அறிவுறுத்தல் வெளியிடப்பட்ட தினத்திலிருந்து 14 நாட்களுக்குள் இருத்தலாகாது.
எனவே, இவ்வாறான சட்ட ஏற்பாடுகள் தேர்தலுக்கான திகதியினை தீர்மானிக்கும் பொருட்டு காணப்படுகின்றவிடத்து இதற்கு முறணான விதத்தில் ஏதாவது முன்னேற்பாடுகள் நடைபெற்றால் அது இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பிற்கு முறணானதாகவே காணப்படும் என்பதோடு இது தொடர்பில் குறிப்பிட்ட விடயத்தினை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றத்திடம் வியாக்கியானம் கோரி வழக்கைத்தாக்கல் செய்ய முடியும். இவ்வாறான சூழ்நிலைகளில் நீதிமன்றமானது குறித்த விடயத்தினை பொருள்கோடல் செய்யுமிடத்து குறித்த சட்டம் ஆக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தின் அப்போதைய எண்ணம் மற்றும் அவசிய கோட்பாடு (Doctrine of necessity) என்பன கவனத்திற் கொள்ளப்படும். எவ்வாறாயினும் பாராளுமன்றம் மூன்று மாதங்களுக்குள் கூடாமல் இருக்கமுடியாதென்பதனை மேலுள்ள ஏற்பாடுகள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.