குளிர்சாதப் பெட்டி திருத்துனர் போன்று பாசாங்கு செய்த நபரொருவர் வர்த்தக நிலையமொன்றில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீராவோடையில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலேயே இத் திருட்டுச் சம்பவம் இவ்வாறு இடம்பெற்றுள்ளது.
வர்த்தக நிலைய உரிமையாளர் தன்னுடைய குளிர்சாதனப் பெட்டி பழுதடைந்துள்ள சம்பவத்தை கடைக்கு வந்த நபர்களிடம் கூறியுள்ளார்.
அதை ஏதோவொரு வகையில் அறிந்து கொண்ட நபரொருவர் குளிர்சாதனப்பெட்டி திருத்துனர் போன்று வருகை தந்து பணத்தோடு இருந்த தேசிய அடையாள அட்டை, வாக்காளர் இடாப்பு ஆகியவற்றை திருடிச் சென்றுள்ள சம்பவம் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் முகக் கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்ததாக பாதிக்கப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, பொலிஸார் சம்பவம் நடந்த வர்த்தக நிலையத்தைப் பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.