நுவரெலியா பிரதேச சபைத்தலைவர் யோகராஜ் தெரிவிப்பு.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 5000 ரூபா வாழ்;வாதாரக் கொடுப்பனவு அதிகமான கிராமசேவகர்களால் சிறந்த முறையில் முன்னெடுக்கபட்டு 100 சதவீதமான பங்களிப்பினை ஒரு சிலர் செய்து வருகின்ற நிலையில் இன்னும் ஒருசிலர் அப்பணத்தினை உரியவர்களுக்கு பெற்றுக்கொடுக்காது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளனர்.இதனால் நன்றாக வேலை செய்பவர்களுக்கும் அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலைத்தொடர்ந்து நாட்டினுடைய பொருளாதாரம் பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.இதனால் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளன.இந்த பாதிப்புக்களில் இருந்து குடும்பங்கள் ஓரளவாவாது விடுபடும் வகையில் சௌபாக்கியா வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையினை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.இந்த திட்டத்தினை நுவரெலியா பிரதேச சபையில் முன்னெடுக்கும் நிகழ்வு வேலு யோகராஜ் தலைமையில் இன்று (29.04.2020) நுவரெலியாவில் நடைபெற்றது.அதனை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று மலையகப்பகுதியில் பல குடும்பங்கள் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகிறார்கள்.இந்த நெருக்கடியில் இருந்து நாம் ஓரளவாவது மீளவேண்டுமானால் எமது வீட்டுத்தோட்டத்தில் பயன்தரக்கூடிய மரக்கன்று அல்லது மரக்கறி போன்றனவற்றை நாட்ட வேண்டும்.அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த திட்டத்தினை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கமைய சகலருக்கும் வீட்டுத்தோட்டங்கள் செய்வதற்கு தேவையான விதைகளை இலவசமாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.எதிர்காலத்தில் இந்த விதைகளை பயன்படுத்தி தங்களுடைய வீட்டுத்தோட்டத்தில் எதனையாவது உற்பத்தி செய்யவேண்டும் அதனையே அரசாங்கமும் எதிர்பார்க்கிறது என தெரிவித்த அவர். இதற்கமைவாகவே அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கம்பனிகளுடன் பேசி விவசாயம் செய்வதற்கு தரிசு நிலங்களை பெற்றுத்தருவதாக தெரிவித்தார்.ஆனால் இன்று ஒருசில இளைஞர்கள் கம்பனிகளுடனும் பேசாமல் தோட்ட முகாமையாளர்களுடனும் பேசாமல் தரிசநிலங்களை பலவந்தமாக சுவீகரிக்க முற்பட்டதன் காரணமாக இன்று பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன.விவசாயம் செய்ய முயற்சிப்பது என்றால் காணியினை தோட்ட நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து தோட்ட ஒத்துழைப்புடனேயே பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.எனவே இளைஞர்கள் அமைதியான முறையில் தங்களுடைய நடவடிக்கைகளை நிதானமாக முன்னெடுக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.