புனிதமிகு ரமழான் மாதத்தின் வாசல் எமக்காக திறக்கப்பட்டிருக்கிறது. வல்ல நாயகன் அல்லாஹூத்தாலாவின் உதவியுடன் நாம் அனைவரும் நோன்பு நோற்று இப்புனிதமிகு மாதத்தினை கண்ணியப்படுத்துவதற்கான பாக்கியத்தை எல்லாம் வல்ல நாயகன் எமக்கருளியதை நினைத்து நாம் அனைவரும் பெருமிதம் கொள்வோம் என அக்கரைப்பற்று மாநகர முதல்வரும், தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதி செயலாளருமான அதாஉல்லா அகமட் ஸகி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும்,
நாம் இப்பொழுது சந்தித்திருக்கும் ரமழான் மாதத்தில்தான் இஸ்லாமிய வரலாற்றில் பல்வேறு நிறைவான சரித்திரங்கள் நடந்தேறியிருக்கின்றன. இவ்வுலகத்தாருக்கு பரிசாக அருளப்பட்ட அல்-குர்ஆன் இம்மாதத்தில்தான் இறக்கப்பட்டது. மேலும் வீசும் காற்றை விட வேகமாக ஸதகா, ஸக்காத் செய்பவராக எம் பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் இம்மாதத்தின் மகத்துவத்தினை விளங்கப்படுத்தியிருக்கிறார்கள்.
ஏழைமக்களின் பசி உணர்ந்து, முப்பது நாட்கள் நோன்பு நோற்று, நாமும் உண்ணாது, பருகாது இறைவனின் திருப்பொருத்தத்திற்கு உரித்தானவர்களாக மாறுகின்ற மாதமாகவும் ரமழான் சாட்சிபகர்கிறது.
உலகில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண நிலையினால் நாமும், எமது நாடும் பாரிய சவாலினை எதிர்கொண்டிருக்கிறோம். காலம் காலமாக நாம் கடைப்பிடித்து வந்த ரமழான் மாதம் போன்று இந்த ரமழானினையும் இறைவனின் அருள் வேண்டிய பயணத்திற்காக தயார்படுத்திக் கொள்வோம். உலகில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் முற்றாக அழிந்து, மக்கள் நிம்மதியாகவும், மனத்திருப்தியுடனும் வாழ்வதற்கான சூழல் எம்மை வந்தடைய மாதம் முழுவதும் நோன்பு நோற்று இறைவனிடம் இரு கரமேந்தி பிரார்த்திப்போம்.
ஷைத்தான்கள் விலங்கிடப்படும் இம்மாதத்தில் எமது பிரார்த்தனைகள் அனைத்தும் எல்லாம் வல்ல நாயகனால் திரையின்றி ஏற்றுக் கொள்ளப்படும். எமது சிறிய, பெரிய பாவங்களை நினைத்தும் அவனிடம் மன்றாடி இம்மாதத்தின் முழுப் பயனையும் அடைந்து கொள்ள முயற்சிப்போம். மிக அதிகமாக அல்-குர்ஆனை ஓதி உணர்ந்து எம் மனங்களை தூய்மையாக்கிக் கொள்வோம்.
ஊரடங்கு அமுலில் இருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் வீட்டிலிருந்தே நோன்பின் மகத்துவத்தினை பேண வேண்டும். எமது நற்காரியங்கள் அனைத்தினையும் வீட்டிலிருந்தே உருவாக்கிக் கொள்வோம். பள்ளிவாயலுக்கு செல்லமுடியாத நிலையும், ஓரிடத்தில் ஒன்று கூட முடியாத காரணத்தினாலும் எமது வணக்க வழிபாடுகள், நல்லமல்கள் அனைத்தினையும் வீடுகளிலிருந்தே மேற்கொள்வோம். எமது உள்ளங்களை மாத்திரமே இறைவன் பார்க்கிறான் எனும் தார்மீக உண்மையில் எமது நற்செயல்களுக்கான கூலிகள் அனைத்தும் நாளை மறுமையில் எமக்கு கிடைத்தே தீரும்.
இறைவனுக்காக பகல் முழுவதும் நோன்பு நோற்று, இரவு முழுதும் எமது வீடுகளில் நின்று வணங்கி எமது பிரார்த்தனைகளின் ஊடாக இவ்வுலகினையும், எமது நாட்டினையும் பீடித்திருக்கும் கொடிய நோய் தாக்கத்தினை அழித்தொழிக்க பாடுபடுவோம்.
வல்ல நாயகன் எமது எண்ணங்களையும், நற்செயல்களையும் பொருந்திக் கொண்டு அமைதியான சூழலை ஏற்படுத்தி, நோயற்ற வாழ்வினை தந்து எம்மனைவரையும் பொருந்திக் கொள்வானாக என கேட்டுக்கொண்டுள்ளார்.