சட்டத்திற்கமைவான ஊரங்குச்சட்ட ஒழுங்கு விதிமுறைகள் மற்றும் அரசியலமைப்பின் உறுப்பரை 11, 13 இன் ஏற்பாடுகளும்.


மு.முகம்மது நப்சர், LLB, MBA(SEUSL)
தலைவர், ஏஸ் என் சியல் லீகல் எயிட் போரம் 

பொதுவாக ஊரடங்கு எவ்வாறு இலங்கையில் நடைமுறைக்கு கொண்டுவரப்படுகின்றது என்பது பற்றி 51ம் அத்தியாயத்தின் பிரகாரம் 1947ம் ஆண்டு 25ம் இலக்க பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் வாயிலாக அறிந்து கொள்ளமுடியும்.

அதாவது, இச்சட்டத்தின் பிரிவு 5ன் படி நாட்டின் ஜனாதிபதி பல்வேறு காரணிகளின் அடிப்படையில் அவசரகால சட்டத்தினை அமுலாக்கம் செய்ய அதிகாரம் கொண்டவராக காணப்படுகின்றார் என்பதுடன் அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பினை வேறு அதிகாரமளிக்கப்பட்ட துறையினருக்கு அல்லது நபருக்கு சட்டத்தின் பிரிவு 6 இற்கிணங்க வழங்கவும் முடியும்.

குறிப்பாக இச்சட்டத்தின் பிரிவு 12 ஆனது ஜனாதிபதிக்கு மேலும் ஒரு விஷேட அதிகாரத்தை வழங்கியுள்ளது. அதாவது குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் பொது அமைதியை நிலைநாட்ட வேண்டிய தேவை காணப்படுமிடத்தும் பொலீஸ் ஆளணியினர் போதாமையாக காணப்படுமிடத்தும்; நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமிடத்து வர்த்தமானியில் பிரசுரிப்பதன் மூலம் விஷேட படையினரை குறித்த இடத்திற்கு கொண்டு குவிக்க முடியும். இங்கு இலங்கை கடற்படையினர், வான்படையினர் மற்றும் தரைப்படை போன்றோர் இச்சட்டத்தின் பிரிவு 24 இன்படி படையினராக கருதப்படுகிறார்கள்.
மேலும் இச்சட்டத்தின் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மீதான 1959ம் ஆண்டு 8ம் இலக்க பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின்; பிரிவு 16 ஆனது ஊரடங்கு ஒழுங்கு விதிமுறைகள் தொடர்பில் இன்றியமையாததாகும். இதன்படி ஏதாவதொரு குறிப்பிட்ட பிரதேசத்தில் பொதுமக்கள் ஒழுங்கு பேணப்பட வேண்டுமென ஜனாதிபதி கருதுமிடத்து அதற்கான கட்டளையை அதிவிஷேட வர்த்தமானியின் மூலம் பிரசுரிக்க வேண்டும். அத்துடன் வர்த்தமானியில் குறிப்பிட்ட காலப்பகுதியில் எழுத்து மூலம் அனுமதிக்கப்பட்ட இடங்கள் தவிர பொது வீதிகள், பொதுப்பூங்கா, புகையிரதம், பொதுமக்கள் ஒன்று கூடுமிடம், பொழுதைக்கழிக்கும் இடங்கள், பொது மைதானம் போன்ற இடங்களில் பொதுமக்கள் எவரும் காணப்படுவது சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும். இங்கு பொது வீதிகள் எனும்போது பொதுப்பாலங்களில் காணப்படும் வீதிகள் உட்பட பாதையோரம், கால்வாய், வடிகான்கள் என்பனவும் உள்ளடங்கும்.

அத்துடன் பிரிவு 16(3) இற்கமைவாக மேற்படி விதிமுறைகளை மீறுபவர்கள் குற்றமிழைத்தவர்களாக கருதப்படுவதோடு சுருக்கமுறை விளக்கத்திற்காக கௌரவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவேண்டும். இதன்போது குற்றவாளியாக இனங்காணப்படுமிடத்து ஒரு மாதத்திற்கு விஞ்சாத கடூழிய சிறைத்தண்டனைக்கு அல்லது 100 ரூபா தண்டப்பணத்திற்கு அல்லது இவை இரண்டிற்கும் உள்ளாக்கப்படுவார்கள். மேலும் இக்குற்றமானது நீதவானின் கட்டளைப்படி பிணை வழங்கக்கூடிய குற்றமாக காணப்படுவதுடன் சரீரப்பிணையின்றியும் விடுவிக்க கூடியதாகவும் காணப்படுகின்றது.
அதேபோன்று இச்சட்டத்தின் பிரிவு 18 இற்கமைவாக ஒருவர் நியாயமான சந்தேகத்தின அடிப்படையில் ஊரடங்கை மீறியவராக கருதப்படுமிடத்து அவர் பொலீஸ் அதிகாரியினால் பிடியாணையின்றி கைது செய்யப்பட முடியும். அத்துடன் அவ்வாறு கைது செய்யப்படும் நபர் பிரிவு 20 இற்கமைய தாமதியாமல் பொலீஸ் கட்டுக்காவலுக்கு கொண்டுவரப்பட்டு சட்டத்தின்படி அணுகப்பட வேண்டும்.
ஆனாலும் எமது சட்ட மூலாதாரங்களில் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பானது மேலாண்மை (Supremacy) கொண்டு காணப்படுவதனால் அதன் உறுப்புரை 11 மற்றும் 13 போன்றவை இச்சட்டத்துடன் இணங்கிக் காணப்பட வேண்டும். அதன் பிரகாரம் ஆளெவரும் சித்திரவதைக்கு, அல்லது கொடூரமான, மனிதாபினாமற்ற அல்லது இழிவான நடாத்துகைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படலாகாது என்பதுடன் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடவடிக்கைமுறைக்கிணங்கவன்றி, ஆளெவரும் கைது செய்யப்படலாகாது. மேலும் கைது செய்யப்படுவற்கான காரணம் கைத செய்யப்படும் எவரேனும் ஆளுக்கு அறிவிக்கப்படுதல் வேண்டும்.
எனவே காணப்படும் சட்டங்கள் சமூக அக்கறை கருதி இயற்றப்பட்டுள்ளதனை அனைத்து தரப்பினரும் விளங்கிக்கொண்டு மனிதாபிமான முறையில் நடந்தொழுகி சட்டங்கள் உருவாக்கப்பட்ட நோக்கங்களை பாதுகாக்க வேண்டிய தேவைப்பாடு எம் அனைவருக்கும் உண்டு.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -