அதை செய்ய சுமந்திரன், ரணிலுக்கு முடியுமா? - அதாஉல்லா
நூருல் ஹுதா உமர்-
பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கும் சுமந்திரன் போன்றோர் ஒரு நாள் மட்டுமாவது பாராளுமன்றத்தை கூட்டி 19ம் திருத்த சட்டத்தை இல்லாமலாக்க போகிறோம் என்று தீர்மாணித்தால் ஒன்றரை வருடங்களுக்கு இப்பாராளுமன்றம் செயற்பாட்டில் இருக்கும்.தேர்தலும் ஒன்றரை வருடங்கள் தாமதித்து செல்லும். ஜனாதிபதியின் பதவிக்காலமும் ஒரு வருடங்கள் நீடிக்கும். உங்களால் முடிந்தால் தற்காலியமாகவாவது 19ம் திருத்த சட்டமூலத்தை நீக்க முடிவு செய்யுங்கள். அப்படி நடந்தால் ரணில், சுமந்திரன் போன்ற நீங்கள் தான் அடுத்த ஒன்றரை வருடங்களுக்கு எம்.பிக்கள். என முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் ஐ.தே.கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க போன்றோருக்கு பகிரங்க வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலமான கிழக்கு வாசலில் நடைபெற்ற "நெம்புகை" நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் தொடர்ந்தும் தனது உரையில்,
அரசியல் கட்சிகள் தமது இருப்பை தக்க வைக்கும் வகையில் பல கதைகளைகளையும் கூறுகிறார்கள். அதிலும் குறிப்பாக ஜனாதிபதி தனது சொந்த தேவைக்காக பாராளுமன்றத்தை கலைத்ததாகவும், பாராளுமன்றத்திற்கே அதிகாரங்கள் இருப்பதாகவும் ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை என்றும் தெரிவிப்பதுடன் இப்போதைய ஆட்சி இராணுவ ஆட்சி என்றும் பேசிக்கொள்கிறார்கள். இந்த நிலையில் நேரத்தை சரியாக பயன்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு எதையாவது பிடுங்கி எடுக்க வேண்டும் என்றும் முயற்சித்து கொண்டிருக்கிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இக்கால கட்டத்தில் அரசியலமைப்பில் மாற்றங்களை உருவாக்கி தமக்கு சாதகமாக எதையாவது உருவாக்க முயற்சிகள் செய்து வருகிறார்கள் என்னுடைய அரசியல் வாழ்க்கை, பாராளுமன்ற அனுபவங்களை கொண்டு ஒரு விடயத்தை தெளிவாக என்னால் கூற முடியும்.
என்னவென்றால் இப்போது நாடு இருக்கிறது, அதில் அரசாங்கமும் இருக்கிறது ஆனால் இலங்கை இராஜ்ஜியம் இல்லாது போகிவிட்டது. எங்களுடைய பிரச்சினை இதுதான். நாட்டின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாக ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை, சபாநாயகர், அரசியல் கட்சிகள் எடுக்கும் தீர்மானங்களை கேள்விக்குட்படுத்தி இறுதி முடிவை எடுக்க நீதிமன்றம் நோக்கி போகவேண்டி உள்ளது.
இப்போது இலங்கை இராஜ்ஜியம் பலமிழந்து, பல இடங்களில் தடுமாற்றத்தை சந்திப்பதனால் ஸ்திரமற்ற தன்மை வலுவாக நிலவுகிறது. அவசர பிரச்சினைகளுக்கும் தீர்வு காண நீதிமன்றத்தை நாடுவதால் பிரச்சினைக்களுக்கான தீர்வுகள் "ஆறின கஞ்சி" போன்று மாறி விட்டது. நாட்டில் பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இப்போது உருவாகி உள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை பின்பற்றி ஒரு அரசியலமைப்பை உருவாக்குதல். அல்லது பாராளுமன்ற அதிகாரத்தை பின்பற்றி ஒரு அரசியலமைப்பை உருவாக்குதல். அதுவும் இல்லை என்றால் மூன்றாவது முறையொன்றை அடிப்படையாக கொண்டு ஒரு அரசியலமைப்பை உருவாக்கலாம். ஆனால் இங்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசியலமைப்பில் தங்களுக்கு ஏதுவான, தேவையான அனைத்து இடங்களிலும் சில அரசியல் நகர்வுகள் மூலம் ஓட்டை போட்டுள்ளதால் அரச இயந்திரம் சீராக இயங்க முடியாமல் ஸ்தம்பித்து நிற்கிறது. நாட்டின் மீது அக்கறை இல்லாது முடிவுகளையும், தீர்மாணங்களையும் சரி, பிழை காண அடிக்கடி நீதிமன்றத்தை நாடுவது எமக்கு துர்பாக்கிய நிலையே.
மூன்றாவது திட்டமொன்றை வகுத்து புதிய அரசியலமைப்பை உருவாக்கி சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு உரிமை வழங்கப்போகிறோம் என்று அறிவித்து செய்வதற்க்கும் இப்போது இருக்கும் அரசியலமைப்பு, பாராளுமன்ற முறைகள் பலவீனமாக பயனற்று இருக்கிறது.
இறுதியாக கலைக்கப்பட்ட இந்த பாராளுமன்றம் தான் 19ம் சீர்திருத்தத்தை கொண்டுவந்தது. மாகாண சபைகளுக்கு தொகுதி முறையை கொண்டுவந்தது, உள்ளுராட்சி சபைகளில் பெரும்பான்மை பலம் பெற்றவர்கள் இருக்க சிறிய அளவிலான பலம் கொண்டவர்கள் ஆட்சியமைக்க திட்டம் வகுத்தது. இவர்களின் திட்டங்கள் வாந்தியெடுத்தது போன்று உள்ளது.
இவர்கள் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட அழைப்பது கொரோனாவை ஒழிப்பதற்க்கு அல்ல. அதற்காகவே தான் கூட்டும் படி கேட்டால் புலிப்பயங்கரவாதிகளை அழிக்க வியூகம் அமைத்து வெற்றி பெற்ற சிறந்த ஆற்றலும், ஆளுமையும் உள்ள பிரதமர் மஹிந்தவும், ஜனாதிபதி கோத்தாபாயவும் சுகாதார ரீதியிலான இப்பிரச்சினையை வெற்றிகரமாக தீர்க்க கூடியவர்கள்.
முன்னாள் எம்.பி சுமந்திரன் போன்றோர் தான் கொடுத்த கொந்தராத்துக்களுக்கான பணத்தையே ஒதுக்கீடு செய்ய திராணியற்று இருந்து கையுயர்த்தாமல் விட்டவர்கள். இப்போது இந்த விடயத்தில் கொதிக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க போன்றோர் பிரதமரின் அக்கூட்டத்திற்க்கு வந்திருந்தால் நான் இதையே அவர்களிடம் கேட்டிருப்பேன்.
நான் அங்கு நிறைய விடயங்களை பேச ஆயத்தமாக சென்றிருந்தாலும் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் அங்கு வராமையால் என்னால் நிறைய விளக்கங்களை கேட்க முடியாமல் போனது. என்றாலும் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஈழக்கோரிக்கை, அரசியல் அதிகாரப்பரவலாக்கம், போன்ற நீண்ட நாள் கோரிக்கைகள் தொடர்பில் அரசுக்கும் அவர்களுக்கும் இருக்கும் முரண்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டு மக்களின் இப்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண அக்கூட்டத்தில் கலந்து கொண்டமையை பாராட்டுகிறேன்.
என்றாலும் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கும் சுமந்திரன் போன்றோர் ஒரு நாள் பாராளுமன்றத்தை கூட்டி 19ம் திருத்த சட்டத்தை இல்லாமலாக்க போகிறோம் என்று தீர்மாணித்தால் 1.5 வருடங்களுக்கு இப்பாராளுமன்றம் அமுலில் இருக்கும்.
தேர்தலும் 1.5 வருடங்கள் பின்னால் செல்லும். ஜனாதிபதியின் பதவிக்காலமும் ஒரு வருடங்கள் நீடிக்கும். உங்களால் முடிந்தால் தற்காலியமாகவாவது 19ம் திருத்த சட்டமூலத்தை நீக்க முடிவு செய்யுங்கள். அப்படி நடந்தால் ரணில், சுமந்திரன் உட்பட நீங்கள் தான் அடுத்த ஒன்றரை வருடங்களுக்கு எம்.பிக்கள். அந்த காலத்தில் கொரோணா போன்ற பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த முடியும். இன்னும் பல பிரச்சினைகளை தீர்க்க முடியும். என கேட்டு கொள்கிறேன். இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட அழகான எமது நாட்டில் தான் உலகின் முதல் மனிதன் ஆதம் (அலை) தோன்றினார் என்பதற்கான ஆதாரமாக ஆதாம்மலை உள்ளது.
எங்களது தேசிய காங்கிரசின் தேவை பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளோ அல்லது அமைச்சுக்களோ அல்ல. எங்களின் எதிர்பார்ப்புக்கள் நாட்டில் நிலவும் பிரச்சினைகளை நியாயமாகவும் உடனடியாகவும் தீர்க்கும் தன்மையே. நாடு முழுவதும் அமைதியான, பலமான இலங்கை இராச்சியம் அமைவது தான் நாட்டின் இப்போதைய தேவை என மேலும் தெரிவித்தார்.