அரசாங்கம் 5000 ரூபா நிவாரணத்தை 52 லட்சம் குடும்பங்களுக்கு வழங்குவதாக கூறுகின்றது. அப்படியானால் தோட்ட தொழிலாளர்களாக இருக்கும் ஒன்றரை இலட்சம் மக்களுக்கு ஏன் அந்த நிவாரணத்தை வழங்க முடியாது. இன்று அரசாங்கத்தின் அந்நிய செலவாணியை பெற்றுக்கொள்வதற்காக தங்களை அர்ப்பணித்து சேவை செய்கின்றவர்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள். எனவே அவர்களுக்கும் இந்த 5,000 ரூபாய் கொடுப்பனவு உட்பட அனைத்து நிவாரணங்களையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள், அமைச்சருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா வேட்பாளர்கள் கலந்துகொள்ளும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று 18.05.2020 அன்று நுவரெலியாவில் கன்ட்ரி ஹவுஸ் விருந்தகத்தில் இடம்பெற்றது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த ராதாகிருஷ்ணன்
இன்று அரசாங்கம் பல்வேறு நிவாரணங்களை வழங்கினாலும், அவை எங்களுடைய தோட்ட தொழிலாளர்களுக்கு முறையாக கிடைப்பதில்லை. இன்று நாட்டில் அனைத்து துறைகலும் முடக்கப்பட்டு இருக்கின்ற இந்த சூழ்நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரமே தங்களுடைய உயிரையும் பணயம் வைத்து அந்நிய செலவாணியை பெற்றுக் கொடுப்பதற்காக தங்களுடைய தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இதன் மூலமாக நாட்டிற்கு அதிகமான அந்நிய செலவாணி கிடைக்கப் பெறுகின்றது. அண்மைய செய்திகளின் அடிப்படையில் தேயிலை உலக சந்தையில் வெகுவாக அதிகரித்து இருக்கின்றது. ஆனால் அந்த விலை அதிகரிப்பின் உடைய பிரதிபலன் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை.
எனவே அரசாங்கம் திட்டமிட்ட அடிப்படையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களை ஒதுக்குவதாகவே நாங்கள் கருதுகின்றோம். அதேபோல இன்று நாட்டில் பொருட்களின் விலைகளும் வெகுவாக அதிகரித்து இருக்கின்றது. எனவே இவ்வாறான ஒரு சூழ்நிலையில் அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களை மறந்து செயல்படுகின்றது.
7000 இளைஞர், யுவதிகள் மலையகத்திற்கு வருகை தந்திருக்கின்றார்கள் என்பது வெறும் வதந்தியே. இதனை பாதுகாப்பு தரப்பும் வதந்தியே என உறுதி செய்துள்ளது. ஆனாலும், கொழும்பில் இருக்கின்ற இளைஞர், யுவதிகளை முறையாக இங்கு அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான விடயங்களை செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
அதேநேரம் அந்த இளைஞர், யுவதிகளுக்கு வருமானத்திற்கான வழிவகைகளையும் அரசாங்கம் செய்து கொடுக்க முன்வர வேண்டும்.
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் எங்களுடைய அணி வழமை போலவே பெரும்பான்மை வாக்குகளை பெற்று வெற்றி பெறும். அத்துடன், அடுத்த அரசாங்கத்தை சஜித் பிரேமதாச தலைமையில் நாங்கள் அமைப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.