கல்குடாவில் முஸ்லிம் சிவில் சமூக கட்டமைப்பின் அவசியமும் சவால்களும்..ஏ.எல்.பீர்மொஹம்மட் (BA,MA)


ட்டக்களப்பு மாவட்டத்தின் நுழைவாயிலாக விளங்கும் கல்குடா முஸ்லிம் பிரதேசம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில் ஒன்றாகும். இப்பிரதேசத்தில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இப்பிரதேசம் சுமார் 85 பள்ளிவாயில்கள், 10 அரபுக் கல்லூரிகள் ,26 பாடசாலைகள் , 2 பிரதேச செயலாளர் பிரிவுகள் , 2 சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள் போன்ற பல அரச, சமூக, சமய நிறுவனங்களை கொண்டு விளங்கும் ஒரு பிரதேசமாகும். சுமார் 300- 400 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த இப்பிரதேசம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய முஸ்லிம் பிரதேசங்களை போன்றல்லாது ஆரம்ப காலம் தொட்டே பல்வேறு கிராமங்களாக பிரிந்து காணப்படுகிறது. குறிப்பாக வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீராவோடை, காவத்தமுனை, நாவலடி போன்ற முக்கிய பல கிராமங்களையும் அவற்றுடன் இணைந்த மேலும் பல குக்கிராமங்களையும் கொண்டு விளங்கும் ஒரு பிரதேசமாக இப்பிரதேசம் காணப்படுகின்றது. (அதாவது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏனைய முஸ்லிம் பிரதேசத்தைப் போல இப்பிரதேசத்தை ஒரு தனிப்பெயர் கொண்டு அழைக்க முடியாது.) இவ்வாறு பல்வேறு சமூக சமய நிறுவனங்களைக் கொண்டு விளங்கும் இப்பிரதேசத்தில் முழுச் சமூகத்தையும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்கும் சிவில் சமூக கட்டமைப்பொன்று இல்லாதது நீண்ட காலமாக பெரும் குறையாகவே இருந்து வருகின்றது.
இதனால் இப்பிரதேசம் தழுவிய பொது வேலைத் திட்டங்களின் போதும் சமூக நலன்சார் விடயங்களின் போதும் பல்வேறு பின்னடைவுகளையும் இழப்புக்களையும் இப்பிரதேசம் சந்தித்து வருவது கவலைக்குரிய விடயமாகும் .

கல்குடா முஸ்லிம் பிரதேசத்தின் சமூக, சமய நிறுவனங்களை உள்ளடக்கிய சிவில் சமூகக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதன் அவசியத்தை உணர்த்துவதாகவே இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன உருவாக்கமும் வீழ்ச்சியும்
____________________________________________


கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் உள்ள அனைத்து சமய, சமூக நிறுவனங்களையும் உள்ளடக்கிய பொதுவானதொரு சிவில் சமூக கட்டமைப்பை உருவாக்கும் முயற்சி நானறிந்தவரை கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. ஒரு சிலர் அல்லது சில நிறுவனங்கள் இம்முயற்சியில் ஈடுபடுவதும் பின்னர் அம்முயற்சி சாத்தியமில்லையென தோல்வியடைந்து மன நொந்து போவதும் நடைமுறை உண்மைகளாகும். ஆயினும் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறானதொரு சமூக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு சிறிது காலம் இயங்கி வந்தது. அக்கால கட்டத்தில் பல்வேறு சமூக, சமய, அரசியல் பணிகளை அது செய்துள்ளது. ஆயினும் அச்சம்மேளனமானது ஒருசிலரின் அல்லது குறிப்பிட்ட சில குழுக்களின் அல்லது குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளின் கைப்பாவையாக ஒரு பக்கச் சார்பு கொண்டு செயற்பட்டதன் காரணமாக காலவோட்டத்தில் சமூகத்தின் மத்தியில் செல்வாக்கிழந்து கரைந்து காணாமல் போனது .இன்னும் குறிப்பிட்ட சில காலங்கள் அது கடிதத் தலைப்பிலும் அலுவலக முத்திரையிலும் மட்டுமே இயங்குகின்ற ஒரு சபையாக மாறி இருந்தது. இதன்பின்னர் பல்லாண்டுகள் எந்த சிவில் சமூக கட்டமைப்பும் இல்லாத நிலையில் ஒவ்வொரு அமைப்பினரும் அவரவருக்கு இயலுமானதை செய்துவந்தனர், செய்து வருகின்றனர். இருந்தபோதும் தேவையான, அவசியமான சந்தர்ப்பங்களில் இத்தகையதொரு சம்மேளன சிவில் சமூக கட்டமைப்பு இல்லாததன் குறைபாட்டை அவர்கள் நன்கு தெளிவாக உணர்ந்திருந்தனர்.

மீண்டும் இத்தகையதொரு வலுவான சிவில் சமூக கட்டமைப்பை உருவாக்க முடியாமல் போயுள்ள நிலைமை குறித்து அவர்கள் அவ்வப்போது கவலைப்பட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மீண்டும் கல்குடா பள்ளிவாயில்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தை மீளுருவாக்கம் செய்ய கல்குடா ஜம்இய்யத்துல் உலமா காத்திரமான பல பணிகளை மேற்கொண்டு பல கூட்டங்களையும் அமர்வுகளையும் நடாத்தி சம்மேளனத்தை உருவாக்கும் இறுதிக் கட்ட நிகழ்வில் தூர நோக்கற்ற சிலரின் செயற்பாடு காரணமாக இந்த சபையை உருவாக்க முடியாமல் போனது மிகவும் துரதிஷ்டமாகும்.
இருந்தபோதும் இச்சபை செய்யவேண்டிய பல பணிகளை தன் இயலுமைக்கு அப்பாலும் கல்குடா ஜம்இய்யத்துல் உலமா செய்யவேண்டிய நிர்ப்பந்த நிலைமை இருந்ததால் மீண்டும் அந்த சபையை பல சவால்களுக்கு மத்தியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கி முறையான சபையை உருவாக்கும் வரையான தற்காலிக சபை ஒன்றையும் ஏற்படுத்தியது. ஆயினும் அந்த சபை கூட எக்காரணத்தால் தொடர்ந்து இயங்க முடியாமல் போனது என்ற விளக்கம் சமூகத்திற்கு தெரியாத நிலையிலேயே மீண்டும் ஆழ்ந்த உறக்கத்துக்கு அது சென்றது மிகவும் வேதனைக்குரிய செய்தியாகும் .

சிவில் சமூக கட்டமைப்பு உருவாக்கத்தின் அவசரத் தேவை
____________________________________________


முஸ்லிம் சமூகம் எப்போதும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் கூட்டாக (ஜமாஅத்தாக) செயற்படும் சமூகமாகும். அதன் செயற்பாடுகள் அனைத்தும் ஒரு தலைமைத்துவ வழிகாட்டலின் கீழ் கலந்தாலோசனை அடிப்படையில் அமையப்பெற்றதாக இருக்கும். அக்கூட்டமைப்பும் அதன் தலைமைத்துவமுமே அதன் அடையாளங்களாகும்.
அச்சமூகத்தின் இருப்பு, பாதுகாப்பு, இயக்கம், ஏற்றத்தாழ்வு எல்லாமே இக்கூட்டமைப்பிலும் அதன் தலைமைத்துத்திலுமே தங்கியுள்ளது.
அது கூட்டமைப்பாக ஒரு தலைமைத்துவத்தின் கீழ் இயங்குவது சமூகரீதியான சமயக் கடமையுமாகும்.
இது தேசியத்திற்கும் பிரதேசத்திற்கும் பொதுவானதாகும்.

இந்தப் பீடிகையின் பின்னணியில்
கல்குடா முஸ்லிம் சமூகத்தை நோக்குகையில் அது பலமானதொரு சிவில் சமூக கட்டமைப்பின் பால் அவசிய தேவையுடைய சமூகமாக விளங்குகின்றது.
கல்குடா முஸ்லிம் சமூகம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய முஸ்லிம் பிரதேசங்கள் எதிர்நோக்குகின்ற சவால்களுக்கு மேலதிகமாக தனக்கே உரித்தான சமூக, சமய, அரசியல் சவால்களை கொண்டு விளங்குகின்றது. இந்த சவால்களை எல்லாம் ஒரே தலைமைத்துவத்தின் கீழ் நின்று எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் பலமானதொரு சிவில் சமூக கட்டமைப்பு மிக அவசியமாக தேவைப்படுகின்றது. பிரதேச சிவில் சமூக கட்டமைப்பில் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு மிகச்சிறந்த முன்மாதிரியாக விளங்குவது காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமாகும்.

இந்த சிவில் சமூக கட்டமைப்பானது காத்தான்குடி முஸ்லிம் சமூகத்தை ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்கின்றது. தன்னுடைய பணிகளில் பல்வேறு தடைகளையும் சவால்களையும் சந்தித்த போதும் பல நெழிவு சுழிவுகளுக்கு மத்தியில் அவற்றையெல்லாம் வென்று வீறு நடை போடுகின்ற சபையாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தை குறிப்பிட்டால் அது மிகையன்று. அயல் நகரமான ஏறாவூரிலும் இத்தகையதொரு சிவில் சமூக கட்டமைப்பு காத்தான்குடியின் வீச்சுக்கு இல்லாவிட்டாலும் தன் இயலுமைக்குள் நின்று தேவையான வழிகாட்டல்களை அவ்வப்போது சமூகத்துக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால் மேற்குறித்த இரண்டு பிரதேசங்களை விடவும் மக்கள் தொகையிலும் வளங்களிலும் மேம்பட்டு நிற்கும் கல்குடா முஸ்லிம் பிரதேசம் தனக்கான நிலையானதொரு சிவில் சமூக கட்டமைப்பை உருவாக்கிக்கொள்ள முடியாத கையாலாகாத தன்மையில் தொடர்ந்தும் இருந்து வருவது துரதிஷ்டமாகும்.

உண்மையில் இப்பிரதேசத்தின் இழந்த காணிகள் தொடர்பான பிரச்சினை ,பிரதேச மக்களின் அரசியல் சார்ந்த பிரச்சினை, சமூகம் மற்றும் சமயம் சார்ந்த பிரச்சினைகள், பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகள், பிற சமூகங்களுடனான உறவுகள் சார்ந்த விடயங்கள் என்பவற்றை காத்திரமாக முன்னெடுப்பதில் இத்தகைய சபையொன்று மிக அவசியமானதாகும். இல்லாத போது நாம் கிராமங்கள் கிராமங்களாக பிரிந்து கிடப்பதால் பொதுவான சமூக தீர்வுகளுக்கு அப்பால் தத்தமது பிரதேசங்களின் நலன்களை மைய்யப்படுத்திய தீர்வுகளை நோக்கி மட்டுமே செயற்படுகின்ற துரதிஷ்ட நிலை தவிர்க்க முடியாத தொடர் பிணியாகவே இருக்கும். இதற்கு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக எல்லைப் பிரச்சினை, கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக எல்லைப் பிரச்சினை சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த விடயங்களில் கூட ஒருமித்ததொரு கோரிக்கையை முன்வைக்க முடியாமல் போனமைக்கு எல்லோரையும் ஒன்றிணைத்த சிவில் சமூக கட்டமைப்பு ஒன்று இல்லாமல் போனதே பெரும் குறையாகும். குறிப்பாக தேசிய ரீதியிலும் பிரதேச ரீதியிலும் பல்வேறு அனர்த்தங்களுக்கு நாம் உள்ளாகும் போது அவற்றில் காத்திரமான பங்கை வகித்து சமூகத்துக்கு வழிகாட்டுவது யார் என்ற பிரச்சினை எழுகிறது.
2002ல் பிரதேசத்தில் ஏற்பட்ட இன மோதல்களின் போதும் 2006 சுனாமி அனர்த்தத்தின் போதும் அதனை அடுத்து வந்த வெள்ள அனர்த்தம் போன்ற நிலைகளின் போதும் கடந்த வருடம் இடம்பெற்ற ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரும் தற்போது எழுந்துள்ள கொவிட்- 19 நோய்த்தொற்றின் போதும் சமூகத்துக்கு தேவையான வழிகாட்டல்களை யார் வழங்குவது என்ற குறைபாடு உணரப்பட்டே வருகின்றது. பலமான சிவில் சமூக அமைப்பொன்று இல்லாததன் காரணமாக “தடி எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன்” என்பதுபோல் எல்லோரும் அந்த சமூக பாத்திரத்தை தமதாக்கிக் கொள்ள விழைவதும் எதிர் வினைகளைச் சந்திப்பதும் இப்பிரதேசத்தின் மிகப்பெரும் துரதிஷ்டமாகும். எனவே சமூகத்தின் தேவைகளை நிறைவேற்ற வலுவானதொரு சமூக் கட்டமைப்பை உருவாக்கவேண்டிய கட்டாயத் தேவையில் கல்குடா முஸ்லிம் சமூகம் இருக்கிறது என்பதை சகலரும் உணர்ந்து கொள்ள வேண்டும் .

சிவில் சமூக கட்டமைப்பை உருவாக்குவதில் உள்ள சவால்கள்
____________________________________________
பிரதேச மட்டத்தில் சிவில் சமூக கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி செயல்படுத்துதல் என்பது பல்வேறு சவால்கள் நிறைந்த பணியாகும் . இச்சவால்களை எதிர்கொள்ளும் ஆளுமையும் மனவலிமையும் தூர நோக்கும் தியாக சிந்தையும் கொண்ட அசாதாரண மனிதர்கள் பலர் இப்பணிக்காக தேவைப்படுகிறார்கள் .எமது அயல் முஸ்லிம் கிராமங்கள் இத்தகைய ஆளுமை கொண்ட மனிதர்கள் பலரை அடையாளம் கண்டுள்ளன. அதன் விளைவாக பல்வேறு சவால்களுக்கு மத்தியில் சிவில் சமூக அமைப்பை உருவாக்கி தங்களாலான பணிகளை அப்பிரதேச மக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் .நாமும் அத்தகைய ஆளுமை கொண்ட நிறைய மனிதர்களை கொண்டிருந்தபோதும் அவர்களை அடையாளம் காண்பதில் எம்மிடம் உள்ள பலவீனங்கள் காரணமாக சற்று தாமதமாகவே சென்று கொண்டிருக்கின்றோம். இத்தகைய சிவில் சமூக அமைப்புக்களை உருவாக்குவதில் நாம் பின்வரும் சவால்களை எதிர்கொள்ளும் வலிமை கொண்டவர்களாக மாற வேண்டும்.

1.அரசியல்ரீதியான கருத்து முரண்பாடுகள்
____________________________________________


கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் பலமான சிவில் சமூக கட்டமைப்பை உருவாக்கி செயற்படுத்துவதில் எமக்குள்ள மிகப்பெரும் தடைக்கல் எமக்குள் ஆழ வேரூண்றியுள்ள அரசியல் பேதங்களாகும். ஏனைய பிரதேசங்களிலும் அரசியல்ரீதியான கருத்து முரண்பாடுகள் அவர்களுக்குள் இருந்தபோதும் இத்தகைய சமூக கட்டமைப்புக்குள் தாக்கம் செலுத்தி அவற்றை சிதைக்கும் அளவுக்கு நடவடிக்கைகளில் ஈடுபட அவர்கள் விடுவதில்லை. மாறாக அவர்கள் பிரதேசம் ,சமூகம் என்று வருகின்ற போது எல்லாவற்றையும் மறந்து ஒன்றுபட்டு விடுகின்றனர். அல்லது ஒருவரையொருவர் புரிந்து விட்டுக்கொடுப்புடன் செயற்பட பழக்கப்பட்டுள்ளனர்.
ஆயினும் எமது பிரதேச அரசியல் செல்நெறி இதற்கு மாற்றமானது. அது அரசியல்ரீதியாக இத்தகைய அமைப்புக்களில் ஊடாட்டம் செய்து அவற்றை தமக்கு வசதியாக மாற்றிக்கொள்ள விழைகின்றது. அல்லது அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்துடைய எவரும் சபையில் இருக்கக்கூடாது எனும் நிலையையடைந்து தானும் தன் ஆதரவாளர்களும் மட்டுமே இருக்கவேண்டுமென சிந்திக்கின்ற போது இத்தகைய சமூக நிறுவனங்களை கொண்டு நடத்த முடியாமல் போகின்றது .கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட சம்மேளனங்களின் சிதைவுக்கு அரசியல் கருத்து முரண்பாடு முக்கிய காரணியாக இருந்தமை கசப்பான உண்மையாகும். இதனாலே ஒவ்வொரு அரசியல் முகாமும் தனித்தனியான சம்மேளனத்தை அல்லது அதையொத்த சபைகளை உருவாக்கிக் கொண்டமை மறக்கமுடியாத பிறழ்வான அனுபவமாகும். இன்று வரைக்கும் அவற்றின் எச்ச சொச்சங்கள் அவ்வப்போது கடிதத் தலைப்பிலும் சமூக வலைத்தள அறிக்கைகளிலும் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.

எனவே கல்குடா முஸ்லிம் பிரதேசத்தின் பலமான சிவில் சமூக கட்டமைப்பை உருவாக்க அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து சமூக நலனை முன்னிலைப்படுத்தி நாம் ஒன்றுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் .நிச்சயம் இத்தகைய சிவில் சமூக் கட்டமைப்பை இயக்குவதில் தீவிர அரசியல் ஈடுபாடு கொண்டவர்கள் அல்லது கட்சிரீதியான அரசியலில் முனைப்புக் கொண்டு உழைப்பவர்கள் ஒரு போதும் பொருந்த மாட்டார்கள். அவர்கள் இத்தகைய சபைகள் மூலம் ஆக்கப் பணிகள் செய்வதைவிட அழிவுப் பணிகளே செய்வார்கள் . எனவே தீவிர அரசியல் ஈடுபாடற்ற பொது நோக்குக் கொண்ட தலைமைகளின் பால் நாம் அதிக தேவையுடையவர்களாக இருக்கின்றோம். இதன் பொருள் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் அல்லது ஒரு வேட்பாளரின் ஆதரவாளர்கள் இத்தகைய சபைகளில் இடம்பெறக்கூடாது என்பது அல்ல. அத்தகைய மனிதர்களை கொண்டுதான் சபைகளை உருவாக்க வேண்டும் என நாம் நினைத்தால் மறுமை நாள் வரைக்கும் இத்தகைய சபைகளை உருவாக்க முடியாது. இதன் மூலம் நான் எதனைக் கூற வருகிறேன் என்பதை நன்கு புரிந்திருப்பீர்கள் .

2 .பிரதேச வாதம்
____________________________________________


கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் சிவில் சமூக் கட்டமைப்பை உருவாக்குவதில் எமக்குள் உள்ள பிரதேச வாதமும் பெரும் தடைக்கல்லாக அமைந்திருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய முஸ்லிம் பிரதேசங்களை போலல்லாது கல்குடா முஸ்லிம் பிரதேசம் தொன்றுதொட்டே பல கிராமங்களாக பிரிந்து கிடக்கின்றது. குறிப்பாக ஒட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை , காவத்தமுனை, நாவலடி என்பன போன்ற கிராமங்களாக காணப்படுவதைக் கூறலாம் .
இப்பிரதேச வேறுபாடுகள் சில வேளைகளில் பிரதேச வாதமாக தலைக்கேறி எம்மை இத்தகைய சிவில் சமூக கட்டமைப்பை உருவாக்கி செயற்படுத்துவதில் பின்னுக்குத் தள்ளி வருகின்றன. அரசியல் ரீதியிலும் அபிவிருத்தியிலும் நிர்வாகத்திலும் பிரதேச வாதங்களை கட்டவிழ்த்து குளிர்காயும் பலர் எமக்குள் இருக்கிறார்கள். சிலரது இயல்பில் இத்தகைய பிரதேசவாத நோய் புரையோடிப் போய் இருக்கிறது என நான் கூறின் அது மிகையன்று. எனவே இங்கு நாம் பிரதேசவாதம் தலைக் கேறிய நோயாளர்களை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு கல்குடா முஸ்லிம் சமூகம் என்று ஒற்றுமைப் படவேண்டிய தேவையில் இருக்கின்றோம்.

அவ்வாறு இல்லாமல் காலங்காலமாக தலைமுறை தலைமுறையாக இந்தப் பிரதேச வாதம் வளர்க்கப்படுவதால் நாம் அடையப் போவதை விட இழக்கப் போவது தான் அதிகமாக இருக்கும் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும் .நான் இவ்வாறு கூறுவதன் மூலம் இப்பிரதேசத்தில் வாழுகின்ற எல்லோரும் அல்லது மிக அதிகமானவர்கள் இத்தகைய பிரதேசவாத நோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று பொருளாகாது. பெரும்பாலானோர் அத்தகைய எண்ணம் இல்லாதவர்களாக இருப்பினும் சில இத்தகைய நோயாளிகள் சந்தர்ப்பம் பார்த்து மற்றவர்களை தூண்டி விடுகின்றனர்.
இதனால் கல்குடா முஸ்லிம் பிரதேசம் என்று ஒற்றுமைப்பட முடியாத துரதிஷ்ட நிலையில் நாம் இருக்கின்றோம். பொதுவாக இப்பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற சமூகம் தழுவிய பல்வேறு வேலைத்திட்டங்களில் ஒவ்வொரு பகுதியினரும் காட்டுகின்ற அக்கரை, வழங்குகின்ற பங்களிப்பு இதற்கு சிறந்த சான்றுகளாகும். எனவே நாம் பிரதேசவாதம் என்ற இந்தத் தடையை தகர்த்து கல்குடா முஸ்லிம் சமூகம் என்ற பொது நோக்கில் செயல்படாத வரை இன்னும் பல தசாப்தங்கள் இத்தகைய சபைகளின் தேவை குறித்து பேசிக்கொண்டே இருப்போம் .

3.படித்த புத்திஜீவிகளின் சமூக பங்கேற்பின்மை
____________________________________________


கல்குடா முஸ்லிம் சமூகத்தின் சிவில் சமூக கட்டமைப்பை உருவாக்குவதில் படித்த புத்திஜீவிகள் அதிக அக்கறை செலுத்த வேண்டும். இப்பிரதேசத்தின் சமூக, சமய நிறுவனங்களின் இயக்கத்தில் காத்திரமான பங்களிப்பை அவர்கள் வழங்கவேண்டும். ஆயினும் எமது கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் அவர்களது சமூகப் பங்கேற்பு மிகவும் குறைவாகவே இருந்து வருகின்றது. ஆரம்ப காலங்களில் அவர்களது பங்கேற்பு 0 ஆகவே இருந்தது . அண்மைக் காலங்களாக சில முன்னேற்றங்கள் காணப்பட்டாலும் இன்னும் அவர்கள் தமது சமூகப் பங்கேற்பை அதிகமாக்குதல் வேண்டும். இப்பிரதேசத்தில் பல படித்த புத்திஜீவிகள், கல்விமான்கள், துறைசார் நிபுணர்கள் இந்த சமுதாயத்தின் மீது எதுவித அக்கறையும் இல்லாமல் தானுண்டு தன்னுடைய பாடுண்டு என்ற அடிப்படையில் தமது தொழில் ,தமது பதவி ,தமது வருமானம், சுகபோக வாழ்வு என்பதில் மட்டுமே குறியாக உள்ளனர்.அவர்களுக்கு யார் எப்படிப் போனாலும் பிரச்சினையில்லை.
இதனாலேதான் கடந்த காலங்களில் சமுதாயத்தை பொதுவாக வழிநடத்த போதுமான படித்த ஆளுமைகள் கிடைக்காமல் போனார்கள் .ஏதோ சமூகத் தலைமைகள் என்று பொறுப்பு வகித்தவர்களை இவர்கள் தான் எங்கள் பிரதேச தலைமை என்று பிறரிடம் அடையாளப்படுத்த முடியாத நிலையில் எமது வறுமையால் அடையாளப்படுத்தி வந்தோம் . அவர்களது தியானத்துடன் கூடிய பணிகளை நான் இங்கு குறைத்து மதிப்பிடவில்லை. ஆயினும் படித்த புத்திஜீவித்துவ ஆளுமைகள் சமூகத்தை வழிநடத்தி அவ்விடைவெளியை நிரப்ப முன்வரவேண்டும் என்பதனை வலியுறுத்தவே விழைகின்றேன்.

4.தனிநபர் விருப்பு வெறுப்புகள்
____________________________________________


கல்குடா முஸ்லிம் சமூகத்தின் சிவில் சமூக கட்டமைப்பை உருவாக்குவதில் சில தனிநபர்களின் விருப்பங்கள் அல்லது அவர்களது இயல்பு சார்ந்த பிரச்சினைகள் இத்தகைய நிறுவனங்களை கொண்டு இயக்குவதில் பெரும் சிக்கலை ஏற்படுத்துகின்றன. ஊரிலுள்ள அத்தனை அமைப்புகளிலும் தானே இருக்க வேண்டும் .தானே பதவி வகிக்க வேண்டும் .தனக்கு இடமோ, பதவியோ கிடைக்கவில்லை என்றால் அத்தகைய சபைகளை கொண்டு நடாத்த அவர்கள் விட மாட்டார்கள். இத்தகைய கணிசமான மன நோயாளர்களால் கல்குடா சமூகம் தவித்துக் கொண்டிருக்கிறது.
யார் இருந்தாலும் சமூகத்துக்கு தேவையான ஆக்கப்பணி நடந்தால் அதுவே நமக்குப் போதுமானது என்ற பரந்த மனசு வேண்டும் .நான் இங்கு சமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ள இத்தகைய மனிதர்களைக் குறிப்பிடவில்லை. மாறாக இப்பிரதேசத்தின் புத்திஜீவிகள் என்றும் ஆளுமைகள் என்றும் தம்மைத் தாமே நினைத்துக்கொண்டு தான் இல்லாத இடத்தில் எந்தப் பணியும் நடந்துவிடக்கூடாது என தடை போடுகின்ற அல்லது விமர்சனப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்ற நோயாளர்களையே குறிப்பிடுகின்றேன்.இத்தகைய கணிசமான நோயாளர்களாலும் கல்குடா முஸ்லிம் பிரதேசம் அவதியுற்று கொண்டிருக்கிறது. இத்தகையோர் மனம் மாறி யார் செய்தாலும் சமூகத்துக்கும் பிரதேசத்திற்கும் நலவு செய்தால் ஊக்கப்படுத்தி தட்டிக் கொடுக்கும் மனவளம் கொண்டவர்களாக மாறவேண்டும்.

5.பொறுப்பற்ற விமர்சனப் போக்குகள்
____________________________________________


கல்குடா முஸ்லிம் சமூகம் தனது சிவில் சமூக கட்டமைப்பை உருவாக்குவதில் மற்றொரு சவாலாக அமைவது இப்பிரதேசத்தில் தன்னார்வ அடிப்படையில் சமூக, சமயப் பணிகளில் ஈடுபட முன்வருவோரை எதற்கெடுத்தாலும் காழ்ப்புணர்வுடன் நியாயமற்ற முறையில் விமர்சனங்கள் செய்யும் போக்காகும் . பொதுவாக சமூகப் பணியாற்றி வருகின்ற எல்லோரும் விமர்சிக்கப்படுவது இயல்பானது. என்றாலும் இப்பிரதேசம் அதிக விமர்சகர்களையும் வியாக்கியானிகளையும் கொண்டுள்ளமை மிகப்பெரும் துரதிஸ்டமாகும். இவர்களது நியாயமற்ற விமர்சனங்கள், தாக்குதல்கள் யாரையும் விட்டுவைப்பதில்லை.

ஆன்மீகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், தனவந்தர்கள், புத்தி ஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள் யாரையும் இவர்கள் விட்டுவைப்பதில்லை. பிறரைக் குறை கூறுவதிலும் விமர்சிப்பதிலும் குறை தேடி அலைவதிலுமே தமது காலத்தை கழிப்பவர்களாக இவர்கள் இருக்கின்றார்கள். இத்தகைய மனநோயாளிகளால் நற்பணி செய்ய ஆர்வமுள்ளோர் முன்வருவதில்லை. நமக்கு எதற்கு வீண் வம்பு ? என அவர்கள் ஒதுங்கி விடுகின்றனர். சமூகப் பணி செய்ய முன்வரும் எல்லோரும் இத்தகைய விமர்சனங்களை தாங்கும் மனவளம் கொண்டவர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. எனவே இவர்கள் தானும் செய்வதில்லை. மற்றவர்களை செய்ய விடுவதுமில்லை. குறிப்பாக சமூக வலைத்தளங்கள் அதிகரித்துள்ள இன்றைய இக்காலப்பகுதியில் இவர்களுக்கு பஞ்சமே இல்லை. தான் எழுதும் வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதுகூட சரியாகப் புரியாத முகநூல் போராளிகள் அதிகரித்து காணப்படுகின்றார்கள் .இவர்களுக்கு யாரை விமர்சிப்பது? எதற்கு விமர்சிப்பது? என்ற விவஸ்தையே கிடையாது.
ஸ்மார்ட்போன் ஒன்றும் தமிழ் கீபோட்டும் பிறீ டேட்டாவும் கிடைத்துவிட்டால் அவர்களை மிஞ்சும் விமர்சகர்களும் இல்லை. புத்திஜீவிகளும் இல்லை . சமூக அக்கறை யாளர்களும் இல்லை . முப்திகளுமில்லை. சமூக பகுப்பாய்வாளர்களுமில்லை. இத்தகைய மன நோயாளர்கள் இப்பெரும் சமூக பொறுப்பை சுமக்க முன்வர விரும்பும் தன்னார்வலர்களுக்கு பெரும் தடைக் கற்களாகும் .(எது வித சுய நலமுமின்றி சமூக வளர்ச்சியை மட்டும் இலக்காக் கொண்டு எழுதப்பட்ட இக்கட்டுரைக்கும் ஆர்வக் கோளாறு, பழக்க தோஷம் காரணமாக ஏதாவது விமர்சனங்கள் எழுத இவர்கள் இப்போது தயாராகி இருப்பார்கள்.) இந்த சவாலையும் தாண்டியே இத்தகைய சமூகப் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களை நாம் வாழ வைக்க வேண்டியுள்ளது.
சுருங்கக்கூறின் கல்குடா முஸ்லிம் பிரதேசம் மிக அவசரமாக சிவில் சமூக கட்டமைப்பொன்றின் பால் அவசிய தேவையுடையதாய் இருக்கின்றது.
அதனை உருவாக்குவதில் மேற்குறித்தன போன்ற பல, சவால்களும் எமக்கு இருக்கின்றன. அவற்றையெல்லாம் தாண்டி எல்லா வகையான பேதங்களையும் மறந்து இப்பிரதேச சமூக ஆர்வலர்கள் ,புத்தி ஜீவிகள் சமூக ,சமய நிறுவனங்கள், துறைசார் நிபுணர்கள் சிவில் சமூகக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதை நோக்கி நகர வேண்டும் .எமது வளர்ந்து வரும் தலைமுறைக்கு இவ்விடயத்தில் நல்லதொரு முன்மாதிரியை வழங்கி இலங்கையில் ஏனைய முஸ்லிம் பிரதேசங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்வோமாக. சம்பந்தப்பட்டவர்கள் தீவிரமாக சிந்திப்பார்களாக.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் பின்னராவது இம்முயற்சி எமக்கு கைகூடுமா?பொறுத்திருந்து பார்ப்போம் .

இந்தப் பூனைக்கு மணி கட்டுவது யார்?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -