கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட அரச பாடசாலைகளை விரைவில் மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.
அதற்கான இறுதியான உறுதியான திகதி இதுவரை தீர்மானிக்கப்படாவிட்டாலும்கூட கல்வியமைச்சு அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
எதிர்வரும் 26ஆம் திகதி கல்வியமைச்சு சுகாதார அமைச்சுடன் பாடசாலைகளைத்திறப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக கல்வியமைச்சர் டளஸ்அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் கொரோனா அச்சுறுத்தல் முற்றாக நீங்கியபின்னரே பாடசாலைகள் திறக்கப்படும்.எனவே பெற்றோர்கள் கல்விச்சமுகம் அஞ்சத்தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.பாடசாலைகளுக்கு உடல்வெப்பமானி மற்றும் மாணவர்க்கு முகக்கவசம் மேலும் மாணவரின் எண்ணிக்கைக்கு ஏற்ப காலால் இயக்கப்படும் கைகழுவும் இயந்திரசாதனம் வழங்க 630மில்லியன் ருபா ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா அச்சுறுத்தல் அண்மைக்காலமாக தணிவடைந்து வருவதே இதற்குக்காரணமெனக் கூறப்படுகிறது.
கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக மூடப்பட்ட அரச பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்காக கல்வியமைச்சு சுகாதாரஅமைச்சுடன் இணைந்து சமகாலத்தில் பல கலந்துரையாடல்களை நடாத்தி பலஆலோசனை வழிகாட்டல்களை வழங்கிவருகிறது.
பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி பற்றி ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவிக்கும். அதுவரை பாடசாலைகளில் பலவித நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கென மாகாணம் தோறும் கல்வியமைச்சின் செயலாளர் சித்ரானாந்தா விஜயம்செய்து மாகாண களநிலைமைகளைக்கண்டறிந்து அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்தார்.
பாடசாலைகளை நான்கு கட்டங்களில் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பாடசாலைகளை சுத்தப்படுத்துதல் என்ற விடயத்தை சகல பாடசாலைகளும் அறிவிக்கின்ற காலத்தில் கட்டாயம் மேற்கொள்ளவேண்டும் என கேட்கப்பட்டுள்ளது. சுகாதாரப்பிரிவினரின் ஒத்துழைப்பையும் ஆலோசனை வழிகாட்டல்களை பெற்றுக்கொள்ளுதல் இன்றியமையாததாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கொரோனாவால் மூடப்பட்ட பாடசாலைகள் அவசரமாக திறக்கப்பட்டு பின்பு மூடப்பட்ட சம்பவங்கள் டென்மார்க் மற்றும் தென்கொரியாவில் இடம்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.