தங்களது தேவைக்கு ஏற்ப வீடுகளை திருத்தியமைத்து வேண்டிய விதத்தில் மீளவும் கட்டிக் கொள்ள தனி வீட்டுத் திட்டம் வழிகோலியது!


தொடர் 01 பாகம் 02
50 ஏக்கர் காணியை நிரப்புவதற்கான முறையான அனுமதி பெறப்பட்டு நிரப்பப்பட்டு, அங்கு வீட்டுத்திட்டம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படுகின்றது. இங்குதான் அடுத்த பிரச்சினை பூதாகரமாக வெடிக்கிறது.
அதுதான் தொடர்மாடி வீட்டுத் திட்டம் (G plus 2) அமைப்பதற்கான முன்மொழிவை அரசு செய்தது, அதற்கான பணிப்புரைகளை விடுத்தது. குறைந்த நிலப்பரப்பில், குறைந்த செலவில் கூடுதலான மக்களை குடியமர்த்த முடியும் என்ற அரசின் கொள்கைத்திட்டத்தை இங்கும் அமுல்படுத்த ஏற்பாடுகள் நகர்கின்றன.
இதனையே அன்று வீடமைப்பு அமைச்சராக இருந்த பேரியல் அஷ்ரப் அவர்கள் இப்பிரதேச மக்களுக்கும் பரிந்துரை செய்து எல்லா இடங்களுக்கும் தொடர்மாடி வீடுகளை அமைக்கும் திட்டத்தினை செய்திருந்தார்.
அந்த அடிப்படையிலே கல்முனையிலும் இஸ்லாமாபாத்திலும் மக்களின் வாழ்க்கை முறையையும் கலாச்சார விழுமியங்களையும் கருத்தில் கொள்ளாமலும் எனது வேண்டுகோளை புறக்கணித்தும் அமைத்து கொடுப்பட்டமை குறித்து இன்றும் கவலை அடைகிறேன்.

இதற்கு மாற்றமாக தனித்தனி வீடுகள் வழங்கப்படுதல் வேண்டும். தொடர்மாடி வீட்டுத் திட்டம் எங்களுடைய மக்களுக்கு பொருத்தமற்றது என்று விடாப்பிடியாக இருந்து, அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களுடன் சொற்போர் புரிந்து, அவரது விசனத்தையும் மக்களுக்காக ஏற்றுக்கொண்டு, தன்னுடைய கோரிக்கையில் உறுதியாக இருந்தேன்.
இந்த சந்தர்ப்பத்தில்தான் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், பேரியல் அஷ்ரப் உட்பட கல்முனை பிரதேசத்தில் அனைத்து அரசதரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கிய கூட்டம் ஒன்று கொழும்பில் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் அவசரமாக கூட்டப்பட்டது.

சாய்ந்தமருதுக்கான தொடர்மாடி வீட்டுத் திட்டத்திற்கான கட்டுமான பணிக்கான கேள்விப் பத்திரம் கோரப்பட்டு, ஒப்பந்தம் கைச்சாத்துகின்ற நிலையில் இருந்த தருணம் அது.

இடைநடுவே குறுக்கிட்டேன், சாய்ந்தமருது மக்களுக்காக தனி வீட்டுத் திட்டமே அமைதல் வேண்டும் என்றேன். என்னுடைய சமூகம் மீனவ சமூகம், விவசாய சமூகம், வர்த்தக சமூகம் அவர்களது தொழில்களுடன் தொடர்புபட்ட பொருட்களை அவர்களுடைய வீட்டிற்குள் அவர்களுடைய பாதுகாப்பிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக எங்களுடைய பெண்கள் இந்த தொடர்மாடி வீட்டுத்திட்டத்திற்கு பழக்கப்பட்டவர்கள் அல்ல. இது கலாச்சார விழுமியங்களுக்கு மிகவும் பாதிப்பாக அமையும். அத்துடன் அமையப்போகும் வீடுகள் அவர்களின் பிள்ளைகளின் எதிர்கால தேவைக்கு ஏற்ப விஸ்தரிப்பு செய்வதற்கு ஏதுவாக அமைவதல் வேண்டும், மாறாக மாடி வீடு கொடுக்கப்பட்டால் இந்த விஸ்தரிப்பினை ஒருபோதும் செய்ய முடியாது. எனவே என்னுடைய மக்களுக்கு தேவையான விதத்தில்தான் வீடுகள் அமைக்கப்படுதல் வேண்டுமென காட்டமாக வலியுறுத்தினேன்.
ஒப்பந்தம் கைச்சாத்தாகின்றன நிலையில் இருந்த வீட்டுத் திட்டங்களை மயோன் முழுமையாக குழப்பி அடிக்கிறார் என்று மிகவும் ஆத்திரப்பட்ட நிலையில் ஆவேசமாக தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டி விட்டு, இடைநடுவே கூட்டத்தை நிறுத்தி வெளியேறிச் சென்றார் பசில் ராஜபக்ஷ.
ஏனைய அமைச்சர்கள் என்னை தொடர்மாடி வீட்டுத்திட்டத்திற்கு இணங்க வைக்க பிரயத்தனம் மேற்கொண்டனர். பஷிலின் ஆத்திரம் அவர்களை நிலைகுலைய வைத்து விட்டது. அன்றய வீடமைப்பு அமைச்சராக இருந்த பேரியல் அஷ்ரப் அவர்கள் என்னை ஏளனமாக பார்த்தார். இவ்வளவு நடந்தும் இந்தப் போராட்டத்தில் வெல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து கீழிறங்கவில்லை.

மறுநாள் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு. அமைச்சரவை அந்தஸ்துள்ள உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால வெளிநாடு சென்றுள்ளதால், அதற்குப் பதிலாக நீங்கள் நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறே அந்த அழைப்பு.
புத்துயிர் பெறுகிறேன், எனது கோரிக்கை நிறைவேறும் என்ற புதிய தன்னம்பிக்கையும் பிறக்கிறது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்காக பத்திரங்களை தயார் படுத்தினேன். மறுநாள் குறித்த அமைச்சரவை கூட்டத்தின் பிற்பாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ச, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகிய மூவரையும் ஒரே மேசையில் சந்திக்கும் வாய்ப்பு, விடயத்தை கொண்டு சென்றேன், என்னுடைய மக்களுக்குத் தேவையானது தனி வீட்டுத்திட்டம் என்பதை வலியுறுத்தினேன்.

மயோன் முஸ்தபா கூறுவது போன்று அந்த மக்களின் வாழ்க்கை முறையும் மக்கள் விருப்பமும் அவ்வாறாக இருந்தால் தனி வீட்டுத் திட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். குறித்த ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்கள் என பசில் ராஜபக்ஷவுக்கு மஹிந்தவினால் உத்தரவு வழங்கப்படுகின்றது.
தனி வீட்டுத் திட்டத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுங்கள். புதிய கேள்வி பத்திரத்தை தயார் செய்யுங்கள். அதேபோன்று அதனை விரைவாக கட்டிமுடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இத்தகைய பின்னணியில் தான் இந்த வீட்டுத்திட்டம் மக்களுக்கு தனி விட்டுத் திட்டமாக ஒவ்வொரு வீடும் 06 பேர்ச் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டு அமைக்கப்பட்டது.
எவ்வாறாயினும் சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை பிரதேசங்கள் வீடமைப்பு திட்டத்தின் பெயரால் வயல் வெளிகளில் விஸ்தரிக்கப்பட்டு, பாடசாலைகள், பள்ளிவாசல்கள், அரபுக் கல்லூரிகள், அரச, தனியார் நிறுவனங்கள், மைதானம், பூங்கா என்று புதிய நகரங்கள் உருவாவதற்கு காரணகர்த்தாவாக இருந்தமை குறித்து மனமகிழ்கிறேன்.
தற்போது அந்த மக்கள் தங்களது தேவைக்கு ஏற்ப வீடுகளை திருத்தியமைத்து வேண்டிய விதத்தில் மீளவும் கட்டிக் கொள்ள எனது துரநோக்கு சிந்தனை வழிகோலியது. அல்ஹம்துலில்லாஹ்...!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -