எம்.எச்.சேகு இஸ்ஸதீன் முஸ்லிம்களுக்கான தனித்துவ அரசியல் கட்சியின் ஸ்தாபக பங்களிப்பாளர்களுள் முதன்மையானவர்!


பாகம் -03
பௌசர் மஹ்ரூப்- 
டையில் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கடந்த இரண்டு பதிவுகளையும் படித்த , முஸ்லிம் காங்கிரசின் உருவாக்கத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் பங்களித்த பலர் தங்களைப் பற்றி குறிப்பிடவில்லை என கவலைப்படுகின்றனர். அவர்களின் உணர்வை மதிக்கும் அதேவேளை அவர்களது ஆதங்கத்தினையும் புரிந்து கொள்கிறேன். எனக்குத் தெரிந்த வகையிலும் நான் அறிந்த வகையிலும் முஸ்லிம் காங்கிரசின் உருவாக்கத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் பங்களித்த யாரையும் இருட்டடிப்பு செய்வதோ, அவர்களின் பங்களிப்பினை குறைத்து மதிப்பிடுவதோ எனது நோக்கமன்று.
ஒரு அரசியல் ஸ்தாபனத்தின் உருவாக்கமென்பது இரண்டு, மூன்று தனி நபர்களின் உழைப்பினாலும், பங்களிப்பினாலும் நிகழ்வது மட்டுமல்ல என்பதை உலக அரசியல், சமூக இயக்கங்களை படித்தவன் என்கிற வகையில் நான் உறுதியாக நம்புபவன். எனது பார்வை அகன்றதுதான். தனி மனித வழிபாடும் தூய்ப்பினையும் அரசியல் , மற்றும் கருத்தியல் வழி கேள்விக்குட்படுத்தும் வாசிப்பே எனது பார்வையாகும். இங்கும் அதன் வழியில் யாரையும் மேல் நிலைப்படுத்துவதோ , இல்லாத விம்பங்களை புனைவாக சித்தரிப்பதோ இக் குறிப்பில் நிகழ்வதும் சாத்தியமில்லை .இங்கு நான் இதுதான் முடிந்த முடிவு என சொல்லவில்லை, தவறுகள் சுட்டிக் காட்டப்படுமானால் திருத்திக் கொள்ளப்படும்.
ஒரு சமூக அரசியல் மாற்றத்திற்கான ஸ்தாபன முன் கையெடுப்பில் அக்காலகட்டத்தில் பங்களித்தவர்களுள், தலைமைப் பாத்திரத்தினை வகித்தவர்கள், அதன் பிரதான செயற்பாட்டாளர்கள் வரலாற்றில் பெறும் இடம், அவர்களின் அன்றைய பாத்திரம் ( Role ) , செயற்திறன் என்பவற்றில் இருந்துதான், முஸ்லிம் காங்கிரசைப் பொறுத்தவரை அது ஒரு முழுதான அரசியல் ஸ்தாபனமாக வடிவம் பெறுகின்ற, திரட்சியுறுகின்ற (ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் 1986-1990 வரை) அஷ்ரபும் சேகு இஸ்ஸதீனும் முன்னிலை பெறுகின்ற காலத்தினைப் பற்றிய இடத்தில்தான் அவர்கள் இருவரும் இங்கு எடுத்தாளப்படுகிறார்கள்.
உண்மையில் சொல்லப் போனால் இந்தக் குறிப்பு எழுதப்படக் காரணமே , முஸ்லிம் காங்கிரசின் வரலாற்றில், அதன் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் சேகு இஸ்ஸதீனின் பங்களிப்பினை பதிவு செய்து கொள்வதேயாகும். ஏனெனில் இன்று முஸ்லிம் காங்கிரஸ் வரலாறு என்று பதிவு செய்யப்பட்டுள்ள பெருமளவிலான நூல்கள், மலர்கள் (Souvenirs ), ஆவணங்களில் சேகு இஸ்ஸதீன் பற்றிய எந்தப்பதிவும் இல்லை என்பதுடன், மிகத் திட்டமிட்டு சேகு இஸ்ஸதீன் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளார் என்பதினை கண்டு கொள்ள முடியும்.
1994 க்குப் பின் முஸ்லிம் காங்கிரஸ் , இலங்கை அரசியலில் ஆட்சியை தீர்மானிக்கும் அரசியல் பலத்தினைப் பெற்று அன்றைய அரசாங்கத்தின் பலமான அமைச்சரவை இடத்தினை அடைந்த பின் , அதன் அரசியல் மற்றும் பொருளாதார பலத்தின் காரணமாக அதிகமாக வெளியிடப்பட்ட மேற் சொன்ன நூல்கள், மலர்கள், ஆவணங்களில் சேகு இஸ்ஸதீன் , முஸ்லிம் காங்கிறஸ் வரலாற்றில் இல்லை என்பதுதான் கசப்பானது. அஷ்ரப் ஒரிரு இடங்களில் சேகு இஸ்ஸதீனின் பாத்திரத்தினையும் பங்களிப்பினையும் தவிர்க்க இயலாது சொல்லி உள்ளார். பதிந்துள்ளார். ஆனால் அன்று கட்சியின் உயர் மட்டங்களில் இருந்த யாரும் சேகு இஸ்ஸதீனீன் பங்களிப்பினைப் பற்றி ஒரு சிறு மூச்சுக் கூட விடவில்லை.
இதனையும் நாம் புரிந்து கொள்ளலாம். அன்று சேகு இஸ்ஸதீன் முஸ்லிம் காங்கிரசையும் அதன் தலைமையும் எதிர்க்கும் அரசியல் களத்தில் முன்னணியில் இருந்தார். பகை முரண் உச்சக்கட்டத்தில் இருந்தது. முஸ்லிம் காங்கிரசுக்குள் சேகு இஸ்ஸதீனின் பங்களிப்பினை சொன்னாலே தலைமையால் ஓரங்கட்டப்படுவோம், சந்தேகிக்கப்படுவோம் என்கிற நிலை இருந்தது . இன்னொரு வகையில் சேகு இஸ்ஸதீன் உடனான தனிப்பட்ட முரண்பாடுகளும் , அவர் மீதான தனிப்பட்ட வெறுப்புகளும் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்த பலருக்கு இருந்தது.
ஆனால் ஒரு கட்சியின் வரலாறு அந்தக் கட்சியின் மகா அனுதாபி ஒருவரால் எழுதப்படுவதும், அந்தக் கட்சிக்கு வெளியில் இருந்து ஒரு பொதுப்பார்வையில் எழுதப்படுவதும் வேறு வேறானது. நான் வெளியில் இருந்து, இந்த அதிகார அழுத்தங்கள் இல்லாத சூழ் நிலையில் இருந்துதான் இந்தப் பதிவை எழுதுகிறேன். ஆகவே எனக்கு ஒரு காலகட்டப் பங்களிப்பினை பற்றி எழுதுவதற்கு ஒரு முன்தடையும் இல்லை.தனிப்பட்ட கோபதாபங்களும் இல்லை.
என்னை பொறுத்தவரை அஷ்ரப், சேகு இஸ்ஸதீன் ஆகிய இருவருடன் அரசியல், மற்றும் தனிப்பட்ட உறவுகளையும் பேணியவன் என்பதுடன், இருவர் தொடர்பான அனுபவங்கள், மதிப்பீடுகளை நேரடியாக இருவரிடமுமே கேட்டு தெரிந்து கொண்டுள்ளேன். மற்றும் அன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் காங்கிரசில் பங்காற்றிய இருவரின் பங்களிப்பினையும் முரண்பாட்டினையும் தெரிந்த , மதிப்பீடுகளில் பக்கச்சார்பு எடுக்காத பலருடன் உரையாடி , பெற்ற தகவல்களையும் ஆதாரமாக்கி கொண்டுளேன்.
அஷ்ரப் மரணித்து 20 வருடங்கள் கடந்தோடி விட்டது, இப்போது சேகு இஸ்ஸதீன் முதுமையின் நிழலிலும் அனுபவத் திரட்சியின் வடிவிலும் ஞானத்தின் வழியிலும் உள்ளார். அவரது பாத்திரமும் பங்களிப்பும் இந்த முஸ்லிம் காங்கிரஸ் வரலாற்றில் காய்தல் உவத்தலின்றி பதியப்படல் வேண்டும் என்பதற்காகவே இதனை எழுதுகிறேன். இதனை சம்பந்தப்பட்டோர் எல்லோரும் நன் நோக்கில் புரிந்து கொள்வார்கள் என்றே நம்புகிறேன்.
000
அஷ்ரப் , சேகு இஸ்ஸதீனுக்கு இடையிலான முதலாவது சந்திப்பு 1985 நடுப்பகுதியில் கொழும்பு மருதான விமலவன்ச மாவத்தியில் அமைந்துள்ள Church of Lady Fatima முன்பாகவே நடைபெறுகிறது. கிழக்கில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் மிக மோசமான கலவரமும் சொத்தழிப்புகளும் நிகழ்ந்து இரண்டு மாதம் கூட ஆகி இருக்கவில்லை. கிழக்கில் முஸ்லிம்களின் இருப்பும் பாதுகாப்பும் கேள்விக்குரியதாக மாறிவிட்ட சூழலது. தமிழ் முஸ்லிம் இனத்துவ முரண்பாட்டின் ஆழமான பிளவை துல்லியமாக்கிய சம்பவங்களின் காலமது.
தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் சிறு நகரங்கள், கிராமங்கள் தீயில் எரிந்து , மனித உயிர்களைப் பறி கொடுத்து எரிந்து போன சுவடுகளை சுமந்து கொண்டிருந்தது.
இந்தக் கலவர காலத்தில் சேகு இஸ்ஸதீன் கிழக்கில் முஸ்லிம் கிராமங்களையும் மக்களையும் பாதுகாக்க , இலங்கை பாதுகாப்பு படைகளால் முடியாது விட்டால், முஸ்லிம் இளைஞர்களுக்கு இலங்கை அரசாங்கம் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கப்பட வேண்டும் என ஒரு முயற்சியை எடுத்து, இதற்கான குரலையும் செயற்பாடுகளையும் தொடங்கி இருந்தார். அஷ்ரப் சட்டத் தொழில் மற்றும் அரசியல் பணிகளை கல்முனையில் இருந்து செய்து கொண்டிருந்தார்.
இக்காலப்பகுதியில் அஷ்ரப் அவர்கள் வசித்து வந்த கல்முனை அம்மன் கோயில் வீடு தமிழ் அயுத இயக்கங்களால் தாக்கப்பட்டும், அஷ்ரப் அவ்ர்களுக்கு கொலை அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டிருந்தது. முஸ்லிம் தரப்பிலிருந்த அன்றைய பல செயற்பாட்டாளர்களுக்கும் தமிழ் இயக்கங்களால் கொலை அச்சுறுத்தல் இருந்தது.
தமிழ் இயக்கங்களின் அத்துமீறல்கள், ஒடுக்குதல்கள் ஒரு புறம், பேரினவாத கட்சிகளின் புறக்கணிப்பும் , மேலாதிக்கம் மறு புறமாகவும், அன்றைய முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளின் கையாலாகத்தனமும், தென்னிலங்கை முஸ்லிம் தலைமைகளின் புறக்கணிப்பும் சேர்ந்து வடக்கு கிழக்கு முஸ்லிம் சமூகத்தை ஆபத்துமிகு புள்ளியில் நிறுத்தி இருந்தது. முஸ்லிம் சமூகம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. இந்த நிலையும் சூழலும் சாதாரண மக்கள் தொடக்கம் சமூக செயற்பாட்டு சக்திகள் வரை தனிமனித நிலையில் கோபமாகவும் பதற்றமாகவும், அதேவேளை நம்பிக்கையீனங்களையும் மனதளவில் விதைத்திருந்தது.
அஷ்ரப் தனது குடும்பத்தினருடன் பாதுகாப்பு கருதி கொழும்புக்கு குடி பெயர்கிறார். சேகு சட்டக்கல்லூரியை முடித்துவிட்டு ஒரு பயில் நிலை சட்டத்தரணியாக கொழும்பில் இருக்கிறார்.
இக்காலப்பகுதியில் சேகு இஸ்ஸதீன் எழுதிய கவிதையொன்று பத்திரிகையில் பிரசுரமானது. அக்கவிதை இதுதான்.
கடைசி ஆசை
---------------
காணி நிலம் வேண்டாம்
ஒரு கட்டிடமோ தளபாடமோ
வேண்டாம்.
கூடவே பூங்கா வேண்டாம்
இன்னும்
கொள்கை கொள்கையாய்
பணமுமே வேண்டாம்.
நாவினிக்கப் பண்டம்
ஒரு நாளில் ஆயினும்
தந்திட வேண்டாம்.
மாடாய் உழைத்திடுவேன்
மன நிம்மதியோடு
உறங்கிட ஆறடி....

00
இக்கவிதையை படித்து விட்டுத்தான் அஷ்ரப், சேகு இஸ்ஸதீனை சந்திக்க விளைகிறார். மருதானையில் நடந்த அந்த முதல் சந்திப்பில் சேகு இஸ்ஸதீன் எழுதியிருந்த அக்கவிதை , தனக்கு இருந்த மனோ நிலைதான் என்றும், தன்னை பாதித்து இருப்பதாகவும் சொல்லி , தனது மனச் சோர்வையும் , அரசியல் பணி, மற்றும் அதன் வேலையில் உள்ள நிம்மதியற்ற நிலையையும் சேகு இஸ்ஸதீனுடன் பகிர்ந்து கொள்கிறார். இது இருவருக்குமிடையிலான தனிப்பட்ட ஒரு சந்திப்பாக இருந்த போதிலும் இருவரையும் அறிமுகமாக்கிக் கொள்ளவும், அன்றைய மனோ நிலையை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொள்ளவும் வழிவகுத்தது. இதில் சுவரஸ்யம் என்னவென்றால் அக்கவிதை சேகு இஸ்ஸதீனின் அன்றைய மனப் பிரதிபலிப்பாக இருந்ததால் பிறந்த கவிதையாக அது இருந்தமையே. எந்த பிரதி உபகாரத்தினையோ, வசதி வாய்ப்புகளையோ எதிர்பாராமல் சமூகத்திற்கு தன்னை அர்ப்பணித்து பணி செய்ய தான் தயாராக இருப்பதை அக்கவிதை வழி சேகு இஸ்ஸதீன் வெளிப்படுத்தி இருந்தார்.
வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கான தனித்த அரசியல் இயக்கம் தேவைதான் என்பதும், வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல், சமூக இருப்பை பாதுகாக்கவும், முஸ்லிம்களின் அரசியல் கோரிக்கையை முன் வைக்க ஸ்தாபன வடிவிலான அமைப்பு தேவை என்பதும் பலராலும் வலியுறுத்தப்படும் காலச் சூழல் 1985 இறுதிப்பகுதியில் வடக்கு கிழக்கில், ஐக்கிய தேசியக்கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு வெளியில் இருந்த , முஸ்லிம் சமூக அரசியல் சக்திகளிடமிருந்து பொதுக்குரலாக எழுகிறது.
அப்போதுதான் எம்.ஐ.எம். முஹித்தீன் தலைமையில் ” கிழக்கிலங்கை முஸ்லிம் முண்ணனி ”என்கிற அமைப்பு உருவாகிறது. இந்த அமைப்புக்கு தலைவராக எம்.ஐ.எம். முஹித்தீனும் செயலாளராக சேகு இஸ்ஸதீனும் இருக்கின்றனர்.
முஸ்லிம்களுக்கு வடக்கு கிழக்கில் , முஸ்லிம் பிரேதேசங்களை நிலத்தொடர்பற்று இணைத்த ஒரு ”தனி முஸ்லிம் மாகாணம்” வேண்டும் என்கிற முதல் அரசியல் கோரிக்கையை இந்த கிழக்கிலங்கை முஸ்லிம் முண்ணனி என்கிற அமைப்புத்தான் முதன் முதலாக முன் வைக்கிறது. இந்தக் கோரிக்கைகளை முன் வைத்து கிழக்கிலங்கை முஸ்லிம் முண்ணனி.கூட்டங்களை நாடாத்தியதுடன் , பிரசுரங்கள், ஆவணங்களை வெளிக் கொண்டும் வருகிறது .
அக்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் , தனது முதல் பிரசுரங்களை வெளிக் கொண்டு வருவதுடன், சிறிய அளவில் நாட்டின் பல பகுதிகளிலும் அரசியல் பணிகளிலும் ஈடுபடத் தொடங்குகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விரல் சுட்டி எண்ணிவிடும் அளவுக்குத்தான் அதன் உறுப்பினர்கள் சேர்ந்து இருந்தார்கள். அன்று மனதளவில் சோர்ந்திருந்த அஸ்ரபை ஊக்குவித்து அஷ்ரபுக்கு துணையாக இருந்தவர்களில் இருவர் முக்கியமானவர்கள் .ஒருவர் மருதூர்க்கனி, மற்றவர் ஹசன் அலி. அஷ்ரப் மரணிக்கும் வரை இருவரும் முஸ்லிம் காங்கிரசிலேயே இருந்தனர். (மருதூர்க்கனி மூத்த துணைத்தலைவர் பதவி வகித்தார்.அஷ்ரப் மரணத்தின் பின் அமைக்கப்பட்ட முதலாவது கூட்டு தலைமைத்துவ சபையில் பேரியல் அஷ்ரப், ரஊப் ஹக்கீம் , மருதூர்க்கனி ஆகியோரே இருந்தனர்.ஹசன்அலி அஷ்ரப் மரணிக்கும் வரை கட்சியின் பொருளாளராகவும் , அமைச்சரின் பிரத்தியேக செயலாளராகவும் இருந்தார். அஷ்ரப் மரணத்தின் பின் கட்சி செயலாளரானார்.2016 இல் முஸ்லிம் காங்கிரசின் இரண்டாவது தலைவரான ரஊப் ஹக்கீமால் ,செயலாளரின் அதிகாரங்களை பறித்து எடுக்கப்பட்டதை எதிர்த்ததன் காரணமாக கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்).
அப்போது 1986இன் முதல் பகுதியில் கிழக்கிலங்கை முஸ்லிம் முண்ணனிதான் முஸ்லிம்களுக்கான அரசியல் கோரிக்கையுடன் செயலாற்றி , ஒரு அரசியல் தீர்வு திட்டத்தினை கொண்டிருந்தது.அஷ்ரபுக்கும் எம்.ஐ.எம். முஹித்தீனுக்குமிடையில் கொழும்பில் அடிக்கடி அரசியல் சந்திப்புகள் நிகழத் தொடங்குகின்றன. இந்த இருவருக்குமான சந்திப்பில் சேகு இஸ்ஸதீன் தேவைப்பட்டால் மட்டுமே கலந்து கொள்கிறார். அப்படி கலந்து கொண்ட தருணங்களில்தான் அஸ்ரபுக்கும் சேகு இஸ்ஸ்தீனுக்குமிடையில் அரசியல் ரீதியான உரையாடல்கள் நிகழ்கின்றன.
அக்காலகட்டத்தில்தான், ஜே.ஆர் ஜெயவர்த்தானாவால் , தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான முதலாவது சர்வகட்சி மா நாடு 1986 இல் கொழும்பில் கூட்டப்படவுள்ளது என்கிற செய்திகள் வரத் தொடங்குகின்றன . அந்த மா நாட்டில் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் சார்பில் கலந்து கொள்ள வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் அஷ்ரப் தலைமையில் முயற்சித்து வந்தது. அப்படி அந்த மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்தால், வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் சார்பில் சர்வகட்சி மாநாட்டில் முன் வைப்பதற்கு முஸ்லிம் காங்கிரசிடம் எந்த ஆவணமோ, தீர்வு அறிக்கைகளோ இருக்கவில்லை.
அவற்றினை கிழக்கிலங்கை முஸ்லிம் முன்ன்ணியின் தலைவரான எம்.ஐ.எம். முஹித்தீனிடம் இருந்து பெறுவதே இந்த சந்திப்புக்களின் நோக்கமாகவும் பேசு பொருளாகவும் இருந்தது. எம்.ஐ.எம். முஹித்தீனின் நிலசார் அறிவும், புள்ளி விபரங்களின் தொகுப்பும் அஷ்ரபுக்கு எம்.ஐ.எம். முஹித்தீனின் ஆளுமை மேல் பெரிய வியப்பை ஏற்படுத்தி இருந்த காலமது. இந்த ஆவணங்களை எழுத்து வடிவில் சீராக திரட்டி முன்வைப்பதில் சேகு இஸ்ஸதீனுக்கு இருந்த முக்கிய பங்களிப்பினையும் அஷ்ரப் இந்த சந்திப்புகளில் அறிந்து கொண்டார். இரு தரப்பும் நல் நோக்கத்துடனேயே கருத்துக்களையும், ஆவணங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் , சர்வகட்சி மாநாட்டில் முஸ்லிம் தரப்புக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்கிற கோரிக்கையை அஷ்ரப் முன் வைத்தார். அதே நேரம் சர்வகட்சி மாநாட்டிற்கு வெளியில் அன்றைய தமிழ்த் தலைமையான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சில பேச்சுவார்த்தைகளை அஷ்ரப் தனியாகவும் , எம்.ஐ.எம். முஹித்தீனுடனும் சேர்ந்தும் நடாத்தினர். தமிழர் கூட்டணி தலைமைக்கு அஷ்ரப் நன்கு தெரிந்தவராக இருந்ததும் இந்த சந்திப்புகள் நிகழ வாய்ப்பினை தந்தது. அன்றையை ஜே.ஆர் ஜெயவர்த்தானா அரசாங்கம் , அஷ்ரபின் கோரிக்கையை கவனத்தில் கொள்ளவில்லை......அதற்கு தென்னிலங்கை முஸ்லிம் அரசியல் தலைமைகளும் இடம் தரவில்லை.
வடக்கு கிழக்கு முஸ்லிம் சமூகம் , ”இரு தலைக் கொள்ளி ” நெருப்பின் ஜுவாலைக்குள் அந்தரித்து நின்றது.....
தொடரும்...


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -