மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சின்னப் புல்லுமலை பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுவன் பலியானதோடு, சிறுவனின் தாய், தந்தை, சகோதரி ஆகியோர் பலத்த காயங்கள் அடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கடந்த (5) ம் திகதி நடைபெற்றது.
குறித்த விபத்து தொடர்பில் மரணமடைந்த சிறுவனின் தந்தை தனது மனக் குமுறலை தெரிவித்துள்ளார்.
அவர் குறித்த விபத்து தொடர்பில் விபரிக்கையில்,
நானும் எனது மனைவி, பிள்ளைகளும் செங்கலடி பகுதியில் இருந்து பதுளைப் பக்கம் நோக்கிச் செல்லும் எனது வீடு அமைந்துள்ள மரப்பாலம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் செல்லும் போது எதிரே வேகமாக டிப்பர் ஒன்று வந்தது நான் டிப்பரைக் கடந்து செல்ல சிறிய அளவு பாதைதான் காணப்பட்டது.
நான் மெதுவாக டிப்பரைக் கடக்க முற்பட்ட போது டிப்பரும் திடீரென்று வேகத்தைக் குறைத்துக் கொண்டது.
டிப்பருக்குப் பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பரில் மோதிவிடக் கூடாதென்று, நாங்கள் பயணித்த பக்கம் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய போதே இவ் விபத்துச் சம்பவம் நடந்தது.
இதுதான் அன்று நடந்த விபத்துச் சம்பவமாகும் என்று தெரிவித்த அவர்,
மோட்டார் சைக்கிளைச் செலுத்தும் போது மிகக் கவனமாக செலுத்துங்கள் தவறான செலுத்துதல் மூலமாக எனது பிள்ளையை இழந்து இன்று நானும் எனது குடும்பமும் தவிக்கின்றோம் என்றார்.
எனது வாழ்வில் பதினாறு வருட காலமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி வருகிறேன் ஒருநாளும் நான் விபத்துக்குள்ளாகவில்லை.
அன்றைய நாள் நான் அவ்வளவு கவனமாக வந்தும் எதிரே முறையற்ற விதத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி மோதியதில் எனது பிள்ளையை இழந்து தவிக்கிறேன். அத்தோடு எனக்கும் எனது மனைவி, மகள் ஆகியோர்களுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த விபத்து தொடர்பாக பொய்யான செய்திகளும், தகவல்களும் இணையத்தளங்களில் பரவி வருவதை அறிந்து கொண்டேன்.
பொய்யான செய்திகளை தயவு செய்து பரப்பாதீர்கள். உண்மையான செய்திகளை மாத்திரம் பதிவிடுங்கள் என்று தனது ஆதங்கத்தை மரணமடைந்த சிறுவனின் தந்தை உருக்கமாக முன்வைத்துள்ளார்.