ஆகஸ்ட்டில் உயர்தரப் பரீட்சை நடாத்துவது நியாயமா?

வி.ரி.சகாதேவராஜா-
லங்கைப்பரீட்சைகள் திணைக்களம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் க.பொ.த.உயர்தரப்பரீட்சையை வழமைபோன்று நடாத்தும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வருடம் பாடசாலை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முற்றாக ஸ்தம்பித்துள்ள நிலையில் இப்பரீட்சை நடாத்தப்படுவது நியாயமா இல்லையா என்பது தொடர்பில் பலவித கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுவருகிறது.

இந்தநிலையில் ஒன்றில் பரீட்சை பின்போடப்படவேண்டும் அல்லது பூர்த்திசெய்யப்பட்ட பாடப்பரப்பிற்குள் வினாப்பத்திரங்களைத்தயாரித்து பரீட்சையை நடாத்தவேண்டும்.

இந்த இரண்டில் எதை பரீட்சைத்திணைக்களம் செய்யும் என்பது இன்னும் பரீட்சார்த்திகளுக்கோ பெற்றோர்களுக்கோ தெரியாதுள்ளது.

இந்நிலையில் இக்கட்டுரை அதனை ஆராய்வதாக உள்ளது.

இலங்கைப்பரீட்சைத்திணைக்களம் பாடசாலை மாணவர்களுக்காக நடாத்திவரும் தரம்5 புலமைப்பரிசில் பரீட்சை க.பொ.த சா.தரம் க.பொ.த.உயர்தரப்பரீட்சை போன்ற பொதுப்பரீட்சைகள் மிகவும் நம்பகமாகவும் தரமானதாகவும் நடைபெற்றுவருவதை அனைவருமறிவோம்.

இந்தநிலையில் சமகால கொரோனா நெருக்கடி நிலையிலிருந்து நாடு இன்னமும் முற்றாக விடுபடவில்லை.
பாடசாலைகளைப்பொறுத்தவரை இவ்வருடத்தில் மாணவர்கள் கற்றல் நிலைமைகளிலிருந்து அந்நியப்பட்டிருக்கிறார்கள். எவ்வளவுதான் நிகழ்நிலை Online ,தொலைக்காட்சி கல்விச்சேவை என்று நடாத்தப்பட்டாலும் அவையனைத்தும் அனைத்து மாணவர்களையும் சென்றடைந்துள்ளதா? என ஆராயும்போது விடை கேள்விக்குரியதாகின்றது.

கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற க.பொ.த. சா.தர பரீட்சை முடிவுகள் கொரோனா பீதிக்கும் எத்தனையோ வசதியீனங்களுக்கும் மத்தியில் பரீட்சைத்திணைக்களம் வெளியிட்டுவைத்தமை பாராட்டுக்குரியது. ஆணையாளர்நாயகம் சனத்பூஜித மற்றும் அவரது குழாத்தினர் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே.

பரீட்சை தொடர்பில் பல்வேறு நியமங்கள் கருத்திற்கொள்ளப்பட்டாலும் குறித்த பரீட்சைக்கான பாடவிதானம் வகுப்பறையில் கற்பிக்கப்பட்டுள்ளதா? பரீட்சைக்கு மாணவர் தயாரா? அல்லது இவற்றுக்கு போதுமான காலம் இருக்கிறதா? இயல்பானசூழலில் பரீட்சை நடைபெறுமா? என்பதெல்லாம் கவனத்திற்கொள்ளப்படவேண்டியவை.

சரி இவ்வருடத்தில் அடுத்ததாக இடம்பெறவிருக்கும் பொதுப்பரீட்சைகளாக தரம்5புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப்பரீட்சை இருக்கப்போகின்றது.
தரம்5 புலமைப்பரீசில் பரீட்சையைப்பொறுத்தவரை குறிப்பிட்ட காலத்துள் கற்பிக்கப்பட்ட பாடப்பரப்பிற்குள் வினா அமையுமென தெரிவிக்கப்பட்டிருப்து ஓரளவு திருப்தியாகவுள்ளது.
எனினும் வாழ்க்கையில் முக்கிய பரீட்சையாக திகழும் க.பொ.த. உயர்தரப்பரீட்சை வினாப்பத்திரங்கள் பற்றி இன்னும் தீர்க்கமாக முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

உயர்தரப்பாடங்களில் பொதுவாக 12 அலகுகள் காணப்பட்டால் இறுதி 3 அலகுகள் இன்று பாடசாலைகளிலோ தனியார்நிலையங்களிலோ கற்பிக்கப்படாத சூழ்நிலைமைகளே காணப்படுகின்றன. அதற்கான காரணம் யாவரும் அறிந்ததே.

முழுப்பாட அலகுகளையும் கற்காத ஒரு மாணவனிடம் முழுப்பாடஅலகுகளுக்கான வினாக்களை உள்ளடக்கிய வினாப்பத்திரங்களை பரீட்சைக்கு வழங்குவது நியாயமாகுமா? பரீட்சை நியமமாகுமா?அரைகுறை பாடப்பரப்புடன் நடாத்தப்படும் ஒரு பரீட்சை பூரணபரீட்சையாகுமா? அத்துடன் அது பொதுப்பரீட்சையாகுமா? என்பது கேள்விக்குறி.

இதுதொடர்பாக மாணவர்பால் அக்கறையுள்ள ஒரு ஆசிரியர்தொழிற்சங்கம் இஸ்லாமிய ஆசிரியர்சங்கம் கேள்வியெழுப்பியுள்ளது.

மறுபக்கம் முதல் 8அலகுகளுக்கான வினாப்பத்திரங்களை மாத்திரம் உள்ளடக்கிய வினாப்பத்திரத்தை வழங்கி பரீட்சையை நடாத்தமுற்படலாம்.

இது அதற்குப்பிந்திய பல்கலைக்கழக அல்லது மேற்படிப்பிற்கு தடையாக அமையாதா? அதாவது இறுதி அலகுகளை அறவே கற்காத அவனால் மேற்படிப்பை இலகுவாகத் தொடர்வதில் சங்கடங்கள் இல்லாமலிருக்குமா?

அண்மையில் இப்பரீட்சை நடாத்துவது தொடர்பில் கல்வியமைச்சில் இடம்பெற்ற உயர்மட்டக்கூட்டத்தில் மாணவர்க்கு போதுமான தெரிவுகளை அதாவது choice சொய்சுகளை வழங்கி வினாப்பத்திரங்களை வழங்கலாம் என கூறப்பட்டதாம்.

உண்மையில் இந்த சொய்ஸ் என்பது கட்டுரை வகை வினாக்களுக்கே பொருந்தும். மாறாக பல்தேர்வு வினாக்களை உள்ளடக்கிய முதல்பத்திரத்திற்குப் பொருந்தாது.
தற்போதும் இப்பரீட்சை தொடர்பில் பல உயர் மட்டங்களில் கலந்துரையாடல்கள் நடைபெற்றுவருகின்றன என்பதை ஊடகங்கள் அவ்வப்போது தெரிவித்துவருகின்றன.

இந்தநிலையில் இந்தமுறை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பற்றியும் சிந்திக்கவேண்டும்.
அவர்கள் ஒரு புறம் பூரணமாக பாடத்திட்டத்தை கலைத்திட்டத்தை அதாவது பாடப்பரப்பை பூர்த்தி செய்யவில்லை. மறுபுறம் படித்தபாடத்தையாவது மீட்டல் செய்வதற்கோ பயிற்சி செய்வதற்கோ போதிய உளவியல்களநிலைவரம் இல்லை.

தயார்நிலை Readiness என்பது கல்வி உளவியல்பரப்பில் பேசப்படும் சொற்பதமாகும். ஒருமனிதனுக்கு எதற்கும் தயார்நிலை வேண்டும். அதேபோல ஒரு மாணவன் கற்பதற்கும் பரீட்சை எழுதுவதற்கும் தயார்நிலை வேண்டும்.

இன்றைய கொரோனாக்காலகட்டத்தில் இத்தயார்நிலை என்பது எத்தகையதாகவிருக்கும் என்பதை அனைவரும் அறிவர். அவர்கள் நிம்மதியாகவிருந்து கற்கும் சூழ்நிலை உள்ளதா? எதை எடுத்தாலும் கொரோனா ஊரடங்கு பயம்பீதி உணவுக்கு அல்லாடும் நிலை இப்படிப்பல.

இந்தநிலையில் அவர்களால் இயல்பாக வழமைபோன்று கற்கமுடியுமா? மறுபுறம் வாழ்க்கையைத்தீர்மானிக்கின்ற இப்பரீட்சையை ஒட்டுமொத்தமாக முழுவீச்சுடன் முழுமையாக நடாத்தமுடியுமா? என்பது கேள்விக்குறி.

இதேவேளை அடுத்த ஆகஸ்ட்டில் உயர்தரப்பரீட்சையைச்சந்திக்கப்போகும் மாணவர்களுக்கான பரிகாரக்கற்பித்தல் அல்லது இந்த 7மாதகாலம் இழந்த கற்றல்அலகுகளை துரிதமாக பூர்த்திசெய்யக்கூடிய நடவடிக்கைகளும் கல்வியமைச்சால் மேற்கொள்ளப்படவேண்டும்.

எதி;ர்வரும் ஆகஸ்ட்டில் நடாத்த உத்தேசிக்கப்படவிருக்கும் க.பொ.த உயர்தரப்பரீட்சையை பிற்போடுவது அனுகூலமாகவிருக்கும் என கல்வியியலாளர்களும் பெற்றோர்கள் பலரும் கருத்துத்தெரிவித்துவருகின்றனர்.
எனவே பரீ;ட்சைத்திணைக்களம் மாணவர்மையமாகச் சிந்தித்து நியாhமாகச்செயற்படவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -