மஜ்மா நகர் பொதுக்காணி தொடர்பில் கல்குடா முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்கள் மெளனம் கலைக்க வேண்டும்..

MI.லெப்பைத்தம்பி-

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில் அமைந்துள்ள பொதுக்காணியினை சகல இனத்தவர்களும் பயன்படுத்தும் வண்ணம் பொது மயானமாக பிரகடனப்படுத்துமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு நாவலடி ரஹ்மத் நகர் பள்ளிவாயல் தலைவர் கோரிக்கையொன்றை விடுத்திருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

இது தொடர்பில் கடந்த 23.05.2020ம் திகதி சனிக்கிழமை வீரகேசரி 15வது பக்கத்தில் "ஓட்டமாவடி அல் மஜ்மாஹ் மையவாடியை பொது மயானமாகப் பிரகடனப்படுத்துங்கள்-மாவட்ட செயலாளருக்கு மகஜர்" எனத்தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியறிக்கை சமூகக்காட்டிக் கொடுப்பாகவே அமைந்துள்ளதை தெட்டத்தெளிவாக காணக்கூடியதாகவுள்ளது.

இது விடயத்தில், கல்குடாவிலுள்ள முஸ்லிம் சிவில் அமைப்புக்கள், ஜூம்ஆப் பள்ளிவாயல்கள் கூட்டமைப்பு, ஜம்இய்யதுல் உலமா, FRDK, சூறா சபை, SECRO Srilanka, Aboobaker Foundation, Ameerali Foundation மற்றும் கல்விமான்கள், புத்திஜீவிகள் ஆகியோர் அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

இவ்வாறாக பிரதேசத்திலுள்ள ஒரு பள்ளிவாயல் நிருவாகம் தன்னிச்சையாக முடிவுகளை மேற்கொண்டு எமக்கான உரிமையினை தாரைவாரத்துக் கொடுக்க முன்வந்திருப்பது கல்குடா முஸ்லிம்களின் சிவில் சமூகக்கட்டமைப்பு நலிவுற்றுள்ளதா? எனச்சந்தேகிக்க வேண்டியுள்ளது.

எதிர்கால சமூகத்தின் இருப்பு தொடர்பில் தூரநோக்கற்ற பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது அமைப்புக்களில் உள்ளீர்ப்பதில் ஒவ்வொரு பிரதேச முக்கியஸ்தர்களும், புத்திஜீவிகளும், குறிப்பாக சிவில் சமூக அமைப்பினரும் அக்கறை செலுத்த வேண்டிய தேவையை உணர்த்தி நிற்கிறது.

இவ்வாறான பொது அமைப்புக்களுக்கு பிரதிநிதிகளைத் தெரிவு செய்கின்ற போது தூரநோக்குள்ளவர்களை உள்ளடக்கி தேர்வு செய்தல் வேண்டும். இல்லாதவிடத்து இவ்வாறான முடிவுகளுக்கு நமக்கும் சேர்ந்து விலை கொடுக்க வேண்டிய நிலை உருவாகும்.

தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி, குரோதங்களுக்காக எதிர்கால சமூகத்தைப் பாதிக்கும் காட்டிக்கொடுப்புகளை மேற்கொள்ளாதிருக்க வேண்டும்.

இன்று நாம் எமது காணிகளில் பெரும்பாங்கை இழந்துள்ளோம். அதனை மீட்டெடுப்பதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளோம். தற்காலிக இணைப்பாக வழங்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் பலவந்தமாக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், போதிய குடியிருப்புக்காணி இல்லாத நிலையிலும் எஞ்சியிருக்கின்ற காணிகளைப் பாதுகாத்து எதிர்கால சந்ததிக்கு வழங்க வேண்டிய நாம், எஞ்சி இருப்பதை தாரைவாரத்துக் கொடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதும் அவ்வாறு எடுக்கப்படும் தீர்மானங்களக் கைகட்டி பார்த்திருப்பதும் எமது கையாலாகாத தனமாகும்.

இழந்ததை மீட்கப்போராட வேண்டிய இக்கட்டான நிலையில், இருப்பதை இழப்பதா? இன்று எமக்கான சரியான காணிப்பங்கீடு இல்லாத நிலையில், பெரும் நிலப்பரப்பை மாற்று இனத்தினர் கையகப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக, எஞ்சியுள்ள எமது காணிகளில் கூட சுதந்திரமான எதையும் செய்ய முடியாத நிலையே காணப்படுகின்றது.

எமது பிரதேசத்தைப் பொறுத்தவரை தடி எடுத்தவனெல்லாம் வேட்டைக்காரன் போலாவதும். தான்தோன்றித்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவதும் சமூகக்கட்டுக்கோப்பு என்பதை கவனத்திலெடுக்காத துர்ப்பாக்கிய நிலையும் எமது கல்குடா முஸ்லிம் சமூகத்தில் மட்டும் தான் காணப்படுகின்றது.

இங்கே தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற சிந்தனை மேலோங்கி இருக்கின்றது. சமூக இருப்புப்பற்றி தூரப்பார்வையற்ற மனநிலை கொண்ட மனிதர்களின் இவ்வாறான செயற்பாடுகள் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தும் அதே வேளை, எமது எதிர்கால இருப்புக்கும் அச்சுறுத்தல் என்பதை சகல மட்டத்தினரும் கவனத்திற் கொள்ளல் வேண்டும். இது விடயத்தில் பாராமுகமாக இருப்போமானால், பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

இவ்வாறான சூழ்நிலைகளின் போது விமர்சனங்களுக்கப்பால் நடுநிலையான பொது அமைப்புக்கள் இதில் உடனடியாகத் தலையட்டு தீர்வினைக்காண முன்வர வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்கள் என்பது தொடர்ந்து கொண்டே இருக்கும். இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களின் எதிர்பார்ப்புக்கள் என்ன? என்பது புரிந்து கொள்ளப்படாத நிலையில், இவ்வாறான மனோநிலையில் உள்ளவர்களால் தான் சமூகம் சார்ந்து எடுக்கப்படுகின்ற முக்கிய செயற்பாடுகலும் தீர்மானங்களும் தோல்வியையும் பின்னடைவையும் சந்திக்கின்றது.

அன்று குறுகிய சிந்தனைகளால் எமக்குச் சொந்தனமான பூர்வீக நிலங்களையும் கிராமங்களை இழந்தோம். இழந்தவை இன்னும் மீளப்பெறப்படாத நிலையில், குறுக்கிய நிலப்பரப்புக்குள் சுருக்கப்பட்ட சமூகமாக அடக்கியொடுக்கப்பட்டு வாழ்கிறோம். எமது வயற்காணிகளில் சுதந்திரமாக நடமாடவோ, எமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ முடியாத நிலை காணப்படுகின்றது. நிருவாகப்பயங்கரவாதம் ஒரு புறமும் அரசியல்வாதிகளின் அடாவடித்தனங்கள் மற்றொரு புறமுமாக எமது நிலபுலன்கள் கபளீகரம் செய்யப்பட்டு வரும் நிலையில், இருப்பதை தாரைவார்த்துக் கொடுப்பதற்கு சிந்தனையற்ற சமூகமொன்று உருவாகியுள்ளமை சமூகத்துக்கு சாபக்கேடாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.

அதே நேரம், அரசு ஒதுக்கீடு செய்து தருகின்ற காணிகளைக்கூட பெற்றுக்கொள்ள முடியாதளவுக்கு மாவட்ட அரச நிருவாகம் தடை ஏற்படுத்தி வருகின்ற நிலையும் கவலையளிக்கின்ற விடயங்களாகும். ஒரு புறம் எமது தொழில்களை சுயாதீனமாக மேற்கொள்ள முடியாமல் கடல், வயல் வளங்களில் இறுக்கமான நிருவாக அடக்குமுறை அமுல்படுத்தப்படும் அதே நிலையில், எமது பிரதேசத்தின் எல்லைக்கிராமங்களில் வாழ முடியாத அச்சநிலை காணப்படுகின்றது. எல்லைப்பிரச்சனைக்கான எந்தத்தீர்வுகளும் கிட்டாத நிலை காணப்படுகின்றது.

இவ்வாறு நில ரீதியான அடக்குமுறைக்குள் மாவட்ட முஸ்லிம்கள் வாழ வேண்டிய நிலையும் எமது காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டாத நிலையிலும் பயத்துடனும் பீதியுடனும் வாழ்க்கையைக் கொண்டு நடாத்த வேண்டிய நிலையும் தொடர்கிறது. இவ்வாறு ஆயிரம் பிரச்சனைகள் எம்மைச்சுற்றி இருக்கும் போது, எம்மைச்சுற்றி சதி வலைகள் பின்னப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் எமது சமூகத்திலிருப்போர் ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள்? என்ற கேள்வி மனதைக் குடைகிறது.

ஆகவே, இது விடயத்தில் சிவில் சமூக அமைப்புக்கள் உடனடியாகத் தலையிட்டு தீர்வுகளைப்பெற வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாமுள்ளோம். இதற்கான கால நேர விரயம் தவிர்க்கப்பட்டு, தீர்வுக்கான முன்னெடுப்புக்கள் முடுக்கி விடப்பட வேண்டும்.

நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் மறைமுகமாக எதையோ நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை மனதிற்கொள்வோமாக. உடனடியாக இப்பிரதேசத்திலுள்ள சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஒரு குழுவை அமைத்து இழக்கவுள்ள காணியை மீட்க முன்வர வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -