மட்டக்களப்பில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் வழங்கப்படும் குடி நீரினைப் பயன்படுத்தும் பொதுமக்கள் வேறு தேவைகளுக்குமாக குடிநீரைப் பயன்படுதவதனைத் தவிர்த்து சிக்கனமாக குடி நீரினைப் பயன்படுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா திங்கட்கிழமை (04) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நீர் வளத்தினை முகாமைத்துவம் செய்து உன்னிச்சைக் குளத்திலிருந்து விவசாயத்திற்கும் குடிநீருக்குமாக நீரினை பங்கீடு செய்தல் தொடர்பான விசேட கூட்டத்தில் தெரிவித்தார்.
நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையினூடான குடிநீருக்கும் நீர்ப்பாசனத் திணைக்களத்தினூடாக விவசாயத்திற்குமான நீர் உன்னிச்சைக் குளத்திலிருந்து விடுவிக்கப்பட்டுவருகின்றது. கடந்த 2004 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக் கமைவாக உன்னிச்சைக் குளம் புணருத்தான வேலைகள் நிறைவுபெற்றதை யடுத்து மட்டக்களப்பு பிரதேசத்திற்கு நீர் வழங்குவதற்காக 15ஆயிரத்தி 400ஏக்கர் அடி நீர் குடிநீருக்காக வழங்க திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதற்கமைவாக இந்த ஆண்டு முழுவதுக்கமாக நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையூடாக குடீநீர் தேவைக்காக வழங்க திட்டமிடப்பட்டுள்ள 9 ஆயிரம் ஏக்கர் அடி நீரில் இதுவரை 2ஆயிரத்தி 500 ஏக்கர் அடி நீர் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் மீதமாக உள்ள காலத்திற்கு 6ஆயிரத்தி 500ஏக்கர் அடி நீர் போதுமானதாகும் என நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை பிராந்திய முகாமையாளர் டீ.ஏ. பிரகாஸ் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் உன்னிச்சைக் குளத்தின் 28 அடி உயரத்தில் 41 ஆயிரத்தி 200 ஏக்கர் அடி நீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாயத்திற்காக இந் நீர் பயன்படுத்தப்பட்டு வந்தது. மட்டக்களப்பு மக்களுக்கேட்பட்ட குடி நீர் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில் 2004ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கமைவாக உன்னிச்சைக் குளம் 33 அடியாக உயர்த்தப்பட்டு 58ஆயிரம் ஏக்கர் அடி நீர் கொள்ளளவுடையாக உயர்த்தப்பட்டது. இதனையடுத்து குடிநீருக்கான பகுதி நீர் இக்குளத்திலிருந்து நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையால் பெறப்பட்டு வருகின்றது.
இதேவேளை நீர்ப்பாசன திணைக்களப் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.எம்.பீ. அஸார் கருத்துத் தெரிவிக்கையில் விவசாயத்திற்கும், குடி நீருக்குமான நீரினை வழங்குவதற்குப் போதுமான நீர் உன்னிச்சைக் குளத்தில் உள்ளது எனவும், கடந்த ஆண்டு வரட்சி காரணமாக ஏற்பட்ட நீர்த் தட்டுப்பாடு இம்முறை ஏற்படாது எனவும் தெரிவித்தார்.
இவ்விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த், நீர்ப்பாசன திணைக்களப் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.எம்.பீ. அஸார், நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை பிராந்திய முகாமையாளர் டீ.ஏ. பிரகாஸ் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.