எரியூட்டலை தனிமைப்படுத்திய கெடுதல் சக்திகள் எவை?


சுஐப் எம்.காசிம்–
"மனிதர்களை மண்ணினால் படைத்தோம், மண்ணுக்குள்ளே மீட்போம், மண்ணிலிருந்தே எழுப்புவோம்" என்ற இறைமறை வசனம், மரணத்துக்கான தயார் நிலையில் இருப்பதை எச்சரிப்பதுடன், வாழ்வின் நிலையாமையையும் எடுத்தோதுகிறது. முஸ்லிம்களின் மண்ணறை (கப்ர்) வாழ்க்கை மீதான நம்பிக்கைக்கு இவ்விறை வசனமே அடிப்படையாகும். மரணித்தால் மட்டும்தான் உலகத்தை அனுபவிக்க இயலாதென்ற மனிதனின் அறியாமைக்கு ஒளியூட்டவே, இன்று கொவிட் – 19 (கொரோனா) வைரஸ் எமக்குள் குடிகொள்ள வந்ததோ தெரியாது!

உலகின் எந்த வளங்களும் விலங்கிடப்படாது, வழமைபோன்று விரிந்து, விடுதலையாகக் கிடக்கையில், கொரோனாவால் மனிதன்தான் கைதியாகிக் கிடக்கிறான். இந்தக் கைது, அவனது கடைசிக் கிரியைகளுக்கும் விலங்கிட்டுள்ளதுதான் கவலை. வாழ்வின் முடிவையாவது ஆத்மீக திருப்தியில் அனுப்பி வைக்கும் மத உரிமையின்றி இறப்பதை விட, வேறென்ன வேதனை உண்டு இந்த மானிடனுக்கு. “இவ்வேதனையிலிருந்து விடுபட வழியைத் தா!” என்ற வேண்டுதல்களே முஸ்லிம்களின் உள்ளங்களில் ஓங்கி ஒலிக்கின்றன.
நாகரீக நாடுகளும், நாஸ்தீக தேசங்களும், வல்லரச அரசுகளும், வளர்ச்சியடைந்த ராஜ்யங்களும் எரிக்கவும், அடக்கவும் இடமளிக்கையில் இலங்கையில் மட்டும் ஏன் எரியூட்டல்கள்? இது மதரீதியான காழ்ப்பா? அல்லது மடமையின் உச்சக்கட்டமா? இவையிரண்டுமுள்ள ஒரு நாட்டில் மேலாதிக்கமே மிகைத்திருக்கும். இம்மிகைத்தல்களுக்கு மத்தியில் மனிதாபிமானமும், மத உரிமைகளும் பிழைக்க முடியாது. இவற்றை பிழைக்கச் செய்ய எமக்குள்ள வழிகளென்ன?
வீர வசனங்களும், வீட்டுக்குள்ளிருந்து விடுக்கப்படும் விடுதலைத் தூதும், வியாக்கியானங்களும், தனி நபர்களின் போர் முரசங்களும், உணர்ச்சிகளால் தெறிக்கும் வேதனைகளும் இந்நிலைமைகளிலிருந்து எம்மை மீட்காது. நிலைதவறாத நிலைப்பாடுகள், விட்டுக்கொடுக்காத விடாப்பிடிகள், அறிவார்ந்த விளக்கங்கள், மாற்று யோசனைகளுக்கான தர்க்கித்தல்களே இவற்றைச் சாத்தியமாக்கலாம். இவையில்லாவிடின் எதிர்காலங்களுக்கும் எமது எதிரிகளுக்கு இது ஏதுவாகப் போகும். எரிக்கவே முடியாதென்ற உரிமையை பின்னர் சாம்பரையாவது தருமாறு கோரும் தயவுக் கோரிக்கையும், மூன்று கிழமைகளுக்கு மேல் நிறுத்தவே முடியாதென்ற ஜும்ஆக்கள் இன்று 12 வாரங்களாகத் தடைப்படுவதும், முஸ்லிம்களுக்குள் மிகைத்துள்ள “அகீதா கருத்தியல்” அபிப்பிராயங்களும் வேதனை மட்டுமல்ல, இவ்வாறான மற்றுமொரு மத ஒடுக்கல்களை நியாயப்படுத்திவிடுமோ? என்ற அச்சமும்தான் முஸ்லிம்களை ஆட்கொண்டுள்ளது.
விட்டுக்கொடுக்காது முரண்டுபிடிப்பது, கூட்டுப் பொறுப்பில்லாத சமூகம் என்ற அபகீர்த்தியை ஏற்படுத்துமெனச் சிந்திப்பது சரிதான். விட்டுக் கொடுத்தல்களிலுள்ள மாற்று வழிகளும் தெளிவுபடுத்தப்பட வேண்டுமே! வாரத்துக்கு ஒருமுறை ஊரடங்கு நீக்கப்பட்டு மக்கள் திறந்து விடப்படுகையில், மூன்று வாரங்களுக்கு ஒரு தடவையாவது நாட்டின் எந்த மூலையிலாவது, பொது மைதானத்தில், இடைவெளி பேணி ஜும்ஆவை நடாத்துவது பற்றிப் பேசியிருக்க வேண்டும். எத்தனை ஜனாஸாக்களை எரித்தாலும் தொடர்ந்து எதிர்ப்பதுதான், நல்லடக்கத்தில் முஸ்லிம்களுக்குள்ள நம்பிக்கையை ஏனையோருக்கு ஸ்திரப்படுத்தும். மாறாகக் கீழிறங்கி வந்து, சாம்பரையாவது நல்லடக்கத்திற்கு கேட்டதால் எம் சமூகத்தின் நிலைமாறும் தளர்வுப்போக்கு, கடும் போக்காளர்களுக்கு காட்டப்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது. விலக்கப்பட்டவைகளை, உள்ள விடயங்கள் அனைத்தையும் கையாண்டு கைகூடாத பட்சத்திலே கைக்கொள்ள வேண்டுமென்பது பலரது அபிப்பிராயமாகும். இவ்விடயத்தில் எத்தனை வழிகள் கையாளப்பட்டன?
பெரும் போரையே வீழ்த்திய பெருமிதத்திலுள்ள இந்த அரசாங்கம், அந்நிய அழுத்தங்கள், ஆலோசனைகளைக் கருத்தில்கொள்வதாகத் தெரியவில்லை என்பதால், மத உரிமைகளை மீட்டெடுப்பதற்கான மாற்று வழிகளென்ன? நல்லடக்கக் கிரியைகளில் நம்பிக்கையுள்ள சகல சமயத்தவர்களது உரிமைகளையும் பாதுகாக்க, சுமந்திரன் உள்ளிட்ட சிரேஷ்ட சட்ட விற்பன்னர்கள் நீதி மன்றத்தை நாடவுள்ளமை பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆறுதல்தான். கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த சிலரும் எரியூட்டலை எதிர்த்து வழக்காட விழைந்துள்ளனர். இவ்வுரிமைகளைப் பறிகொடுத்த சகல சமயத்தினரும் ஏற்கனவே ஒன்றுபட்டிருந்தால், எரியூட்டல் ஒரு சமூகத்தின் பிரச்சினையெனத் தனிமைப்பட்டிருக்காது. இவ்விவகாரத்தை வேறுவடிவில் கையாண்டு கருமமாற்றி, இக் கையாள்கைகளை சில வேளைகளில் கைகூடவும் செய்திருக்கலாம். இங்கு மதத்தை விடவும் ஒரு சக்தி விளையாடியதாலேயே நம்பிக்கையாளர்களின் ஒன்றிணைவு தூரமாகியது.
இவ்வாறுள்ள நிலையில், கொழும்பில் சேரிப்புறத்துக் காட்சிகளும் எம் நெஞ்சங்களுக்கு நீதி சொல்கிறது. ஆறடி மண்ணுக்கும் சொந்தமில்லாத மனிதன், ஆறடி அறைக்குள் அனுபவிக்கும் ஆற்றாமைகளை என்ன சொல்வது? குளித்தலும், குடித்தலும், கூடுவதும், ஆடுவதும், கண் அயர்வதும், களைப்பாறுவதும், பசியாறுவதும், பிணி போக்குவதும் எப்படி ஆண்டவா? பணம் கொடுத்தே பொருட்களை வாங்க முடியாதுள்ள ஊரடங்குச் சூழலில், தினம் உழைத்தே உறவுகளுக்குச் சோறுபோடுபவனின் உள்ளக் குமுறல்களை ஊதிப் பெருப்பிக்க எனக்கு எண்ணமில்லை. ஆனால், இக்கூலித் தொழிலாளர்களின் மனைவியரை இல்லத்தரசிகள் என்பதா? இல்லை இடுக்கண்ணரசிகள் என்பதா? கணவன்மாரின் இயலாமையை குடும்ப கௌரவத்திற்குள் மூடுவதற்கு முயலும் இப்பெண்களின் பதி பக்திகள் பரிதாபமாகவே உள்ளன.

மீண்டும் மத உரிமைப் போராட்டம் பக்கம் வருவோம். முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாக முத்திரைகுத்தப் பயன்படுத்தப்படும், ஈஸ்டர் தாக்குதல்களின் காயங்கள் ஆறிவிடக் கூடாதென விரும்பும் கெடுதல் சக்திகள், இவ்வாறான வீடு விடும் தூதுகளையும் விடப்போவதில்லை. எரியூட்டலை நிறுத்துவதற்கான முயற்சிகளுக்கு எண்ணெய் ஊற்றுவதாக, இத்தனி நபர்களின் ஒழுங்கமைக்கப்படாத தூதுகள் இருந்துவிடக் கூடாது. கூடிப் பேசி முடிவெடுத்தலன்றி கூவியழைத்து கோஷமிடல், ஈஸ்டர் தாக்குதல் காயங்களை மேலும் கிழித்துக் காயப்படுத்தவே உளவுத் துறைக்கு உதவும்.
எனவே, எரிக்க வேண்டாமென்று எல்லாத்தரப்பும் சொன்ன பின்னரும் எரிந்துகொண்டே இருக்கின்றன எமது நம்பிக்கைகள். இது இத்தருணத்தில் எவ்வாறு செயற்படுவதென்ற சிந்தனையையே இன்று எழுப்பியுள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு பரிந்துரைத்தபடி வைத்தியத் துறை விற்பன்னர்கள், தொழில்நுட்ப நிபுணர்களையும் உள்வாங்கிச் செயற்பட வைக்கும் வழிகள் குறித்துச் சிந்திப்பதும், முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதியில் பொதுமையவாடி அமைக்க அரசை விட்டுக்கொடுக்காது விடாப்பிடியாக அழுத்துவதும், ஏனைய முஸ்லிம் ஜனாஸாக்களாவது இறுதிக் கிரியை உரிமைகளைப் பெற வழி வகுக்கலாம். இவ்வழி வெற்றி பெற இறைவன் துணை நிற்பானாக!!!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -