உங்க மீடியா அரசியல் சண்டை சச்சரவில் தமிழர் நிம்மதியை கெடுக்காதீங்கடா பாவிகளா - மனோ கணேஷன் ஆவேசம்

சுவர்ணவாஹிணி டிவி நிறுவனத்துக்கு, ஹிரு டிவி நிறுவனத்தின் பிரபல ஊடகர்களான சுதேவ, ரங்கன இருவரும் சென்று விட்டார்கள் என்பது, ஒரு ஊடக வர்த்தக சம்பவம். இது இன்று இங்கே இந்த சிங்கள தேசியவாத ஊடக சச்சரவு.

ஆனால், இதற்குள்ளே இப்போது வழமைபோல் "விடுதலை புலிகள், பயங்கரவாதிகளின் பணம், தமிழ் டயஸ்போரா, தேச விரோதம்" என சுற்றி வளைத்து தமிழரை குறிப்பிட்டு கத்த ஆரம்பித்து விட்டார்கள்.

ஈஏபி எதிரிசிங்க நிறுவனம் தொழில்ரீதியாக உடைந்து விழுந்து விட்டது. ஆகவே அதன் கூட்டு நிறுவனங்கள் விற்கப்பட்டன. அதில் ஒன்றுதான், சுவர்ணவாஹிணி!

சுவர்ணவாஹிணியை சுபாஷ்கரனின் லைகா நிறுவனம், தனது சிங்கப்பூர் துணை நிறுவனம் மூலம் வாங்கி விட்டது என்றும், லைகா புலிகளின் நிறுவனம் என்றும், இதன்மூலம் இலங்கையின் பொதுஜன அபிப்பிராயத்தை, புலிகள் தமது ஊடக நிறுவனம் மூலம் மாற்றி ஆதிக்கம் செலுத்த போகிறார்கள் என்று ஒரு கும்பல் சொல்லிக்கொண்டே போக ஆரம்பித்து விட்டது.

முதலில் அதே "தமிழீழ விடுதலை புலிகள்" அப்படியே இன்னமும் இருக்கின்றார்களா? அப்படியானால் லைகா தமிழீழ விடுதலை புலிகளின் நிறுவனமா?

இலங்கை சுவர்ணவாஹிணி டீலுக்கு முன்னமேயே இன்று லைகா நிறுவனம், தமிழ் நாட்டில் மிகப்பெரும் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஆகிவிட்டது. புலிகளின் முகவர் நிறுவனம் என்றால், இந்திய அரசு அதை அங்கே இயங்க விடுமா? எங்கேயும் இயங்க விடாது. இந்நேரம் அதையெலாம் சல்லடை போட்டு தேடி விட்டுத்தான் அவர்களை இயங்க விட்டுள்ளார்கள்.

நல்லாட்சியின் போது இந்த சுவர்ணவாஹிணி வியாபாரம் நடந்தது எனவும், புலிகள் இந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கி விட்டார்கள் எனவும் காட்டு கூச்சல் எழுப்பியவர், வழமைபோல் இவை பற்றி பேசும் விமல் வீரவன்ச. இப்போது இதுபற்றிய இவரது சத்தம் கேட்கவில்லை.

மேலும் இன்றைய ராஜபக்ச ஆட்சியில் இப்படி புலிகளின் (அதாவது அதே தமிழீழ விடுதலை விடுதலை புலிகள் அப்படியே எங்கேயாவது இருந்தால்....!) “நிறுவனம்” இலங்கையின் பிரபல ஊடக நிறுவனம் ஒன்றை விலைக்கு வாங்க தைரியமாக டீல் போட முடியுமா?

மேலும் சுதேவ, ரங்கன பணி செய்த ஹிரு நிறுவனம், ராஜபக்ச ஆட்சியின் பிரபல ஆதரவு நிறுவனம் என்பது இரகசியமல்ல. இந்நிலையில், “புலிகள் இலங்கைக்கு தம் கோடிக்கணக்கான பணத்தை கொண்டு வந்து கொட்டி, அது மட்டுமல்லாமல் போதாததுக்கு, ராஜபக்சவின் பிரபல ஆதரவு ஊடக நிறுவனத்தில் இருந்தே இரண்டு பிரபலஸ்தர்களை நல்ல சம்பளம் கூட்டி தருகிறேன்..! என விலைக்கு பிடித்துள்ளார்கள். இவை ராஜபக்சர்களின் அனுமதி இல்லாமல் நடக்கின்றதாம்” என்றால் நம்ப முடிகிறதா?

இது ஏதோ விட்டாலாச்சாரியார் கதை போல் அல்லவா இருக்கிறது?

இந்த இரண்டு ஊடகர்களையும், இரண்டு ஊடக நிறுவனங்களையும் எனக்கு தனிப்பட்ட முறையில் மிக நன்றாக தெரியும். இவர்களது ஊடக நிகழ்வுகளில், செய்திகளில் அதிகம் கலந்துக்கொள்ளும் தமிழ் அரசியல்வாதி நான்தான்.

ஊடகம் என்பது, இந்நாட்டில் மட்டுமல்ல, உலகரீதியாக அரசியல் வர்த்தக பரப்புக்குள் போய் ரொம்ப நாளாகி விட்டது.

இந்த பின்னணியில், உள்நாட்டு பணமோ, வெளிநாட்டு பணமோ, எவரோ ஒரு ஊடக நிறுவனத்தை இலங்கையில் விலைக்கு வாங்குகிறார்கள். அதில் போய் இரண்டு பிரபல சிங்கள ஊடகர்கள் சேர்கின்றார்கள்.

இதுதான் நடந்துள்ளது. எனக்கு இதில் என்ன பிரச்சினை தேவை என்றால், இதில் சட்டம் மீறப்பட்டுள்ளதா என வேண்டுமானால் தேடுங்கள். அதைவிடுத்து, சும்மா, விடுதலை புலி, பயங்கரவாதிகளின் பணம், தமிழ் டயஸ்போரா என்றெல்லாம் சலப்பல் கதைகளை பேசி எம் நிம்மதியை கெடுக்காதீர்கள்...!

நாளை நான் இதை சிங்களத்திலும் சொல்வேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -