தேசிய காங்கிரஸ் பிரமுகர்களின் பெருநாள் வாழ்த்து செய்தி


நூருல் ஹுதா உமர்-

நமது செயற்பாடுகள் முன்மாதிரியாக அமையட்டும் : தே.கா கொள்கை அமுலாக்கள் சட்டவிவகார செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ்.
ல்லாஹ்வை பயந்து, அவனுக்கு முழுமையாக கட்டுப்பட்டு, றமழான் மாதம் முழுவதும் நோன்பை நிறைவேற்றி இறுதியில் பெருநாளை கொண்டாடுகின்ற முஸ்லிம்கள் தூய்மைமிக்க ஒரு சமூகமாக மாறி, ஏனைய சமூகத்தவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

என தேசிய காங்கிரஸின் கொள்கை அமுலாக்கள் சட்டவிவகார செயலாளரும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

"ஒவ்வொரு மனிதனும் அல்லாஹ்வை பயந்து, அவனது உண்மையான அடியானாக மாற வேண்டும் என்கின்ற உயர்ந்த தத்துவார்த்தத்தின் பேரிலேயே நம்மீது நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும்".
ஒரு தூய்மையான திசைக்கு திரும்பி, அதன் ஊடாக பாவ மன்னிப்பையும் நரக விடுதலையையும் இலக்காகக் கொண்டு பயணிக்கும் நாம் மாற்று சமூகத்தவர்கள் நம்மைப் பார்த்து வியக்கின்ற அளவுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும். அதுவே முஸ்லிம்கள் மீது அவர்கள் கொண்டுள்ள பிழையான- தப்பபிப்பிராயங்களை களைந்து, நல்லபிப்பிராயங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கு வழியேற்படுத்தும்.

அதன் மூலம் மாற்று சமூகத்தவர்களுடன் பரஸ்பரம் நல்லுறவையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்ப முடியும் என்பதுடன் முஸ்லிம் சமூகத்தின் மீதான ஒருதலைப்பட்சமான குற்றச்சாட்டுகளையும் நெருக்கடிகளையும் முடிவுக்கு கொண்டு வர முடியும் என நம்புகின்றேன். நாடு எதிர்பார்க்கின்ற நல்லிணக்கம், நிம்மதி, சமாதானத்திற்கு முஸ்லிம்களாகிய நாமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு இத்திருநாளில் திடசங்கற்பம் பூணுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலமை சீரடைந்து இயல்பு வாழ்க்கை வழமைக்குத் திரும்ப பிராத்திக்கிறேன் : ஏ.எல்.எம்.சலீம்
நாட்டின் நிலமை சீரடைந்து இயல்பு வாழ்க்கை வழமைக்குத் திரும்ப அனைவரும் பிரார்த்திப்பதுடன், தற்போதைய சூழ்நிலைக்கேற்ப சட்டதிட்டங்களை மதித்து பெருநாளை சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என தேசிய காங்கிரஸின் பொதுத்தேர்தல் வேட்பாளர் ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம்.சலீம் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த வாழ்த்துச் செய்தியில் , கொரோனா பரவல் நிலையால் வழமைக்கு மாறாக வீட்டிலிருந்தே அமல்களைச் செய்து புனித ரமழானை அமல்களால் அலங்கரித்து பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் உங்கள் சகோதரனாக, நண்பனாக எனது உளம்கனிந்த ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் நிலமை சீரடைந்து இயல்பு வாழ்க்கை வழமைக்குத் திரும்ப அனைவரும் பிரார்த்திப்பதுடன், தற்போதைய சூழ்நிலைக்கேற்ப சட்டதிட்டங்களை மதித்து பெருநாளை சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதோடு மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.ஈத் முபாறக் என தெரிவித்துள்ளார்.

தூய சிந்தனையுடன் ஆக்கபூர்வமான முயற்சிகளை முன்னெடுக்க இன்றையநாளில் திடசங்கற்பம் பூணுவோம் : தே.கா. தேசிய கொள்கைப்பரப்பு இணைப்பாளர் யூ.எல்.என்.ஹுதா.
முஸ்லிம் சமூகம் தனது பாதுகாப்பையும்,உரிமைகளையும் உத்தரவாதப்படுத்திக் கொள்வதற்கு தூய சிந்தனையுடன் ஆக்கபூர்வமான முயற்சிகளை முன்னெடுக்க இன்றைய ஈகைத்திருநாளில் திடசங்கற்பம் பூணுவோம் என தேசிய காங்கிரசின் தேசிய கொள்கைப்பரப்பு இணைப்பாளரும், அல் மீஸான் பௌண்டசனின் தவிசாளருமான யூ.எல்.என்.ஹுதா விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

"முஸ்லிம் சமூகத்தின் மீதான கெடுபிடிகள் இன்னும் முற்றுப் பெறாமல் அங்கும் இங்குமாக தலைவிரித்தாடுகின்ற சூழ்நிலையில் சுயநலமற்ற, தூரநோக்கு சிந்தனையுடைய அரசியல் சக்தியின் தேவை உணரப்படுவதனால் அத்தகைய சக்தியொன்றை பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து எல்லோரும் சிந்திக்க வேண்டியுள்ளது.

தமது சுகபோகங்களுக்காக சமூகத்தை ஏமாற்றி வருகின்ற சக்திகளிடமிருந்து முஸ்லிம்கள் தம்மை விடுவித்துக் கொள்ளாத வரையில் முஸ்லிம் சமூகம் ஒருபோதும் தனது அபிலாஷைகளை அடைந்து கொள்ள முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எமது சமய, மத, கலாசார உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், கல்வி, பொருளாதார துறைகளுக்கு விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல்கள் உடைத்தெறியப்பட வேண்டும், வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டும், தென்னிலங்கை முஸ்லிம்களின் அரசியல் இருப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும், கிழக்கு முஸ்லிம்களின் காணிகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதுடன் பொதுவாக இந்நாட்டு முஸ்லிம்கள் தமது தாய் மண்ணில் அனைத்து உரிமைகளுடனும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான சூழ்நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும்.

ரமழான் மாதம் நமக்கு கற்றுத்தந்த படிப்பினைகள், சமூகம் வேண்டி நிற்கின்ற இத்தகைய சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுக்க உறுதுணையாக அமைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -