ஒடுக்கப்படும் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் திரு- சுமந்திரனின் பணியும் பாத்திரமும்...


- ஒரு முஸ்லிம் நோக்கு நிலை - 02-

பௌஸர் மஹ்ரூப்-
திரு. சுமந்திரன் அவர்கள் ஒடுக்கப்படும் முஸ்லிம்களுக்காக இந்தளவு அரசியல் உறுதியுடன் பேசுகிறாரே, சட்டத்தளங்களில் வாதிட முன்வருகிறாரே , ஏன் இதனை முஸ்லிம் அரசியல்வாதிகளும் ,முஸ்லிம் சட்டவாளர்களும் செய்யத் தயங்குகின்றனர் என்கிற கேள்விகளும், அவர்கள் மீதான நெருக்கடிகளும் இப்போது முஸ்லிம் அரசியல் , சமூகத் தளங்களில் மேல் வரத் தொடங்கி உள்ளதை காண முடிகிறது. இது சுமந்திரனின் செயற்பாடுகளின் ஒரு தூண்டுதல் என்றால், இதன் இன்னொரு விளைவும் நல்ல சமிக்கையும் முஸ்லிம் மக்கள் மத்தியிலுள்ள ஒரு கணிசமான பிரிவினரிடையே மெல்ல மெல்ல பிரக்ஞை அளவில் மேல் எழுகிறது.......
அதுதான் மிக முக்கியமானது. திரு. சுமந்திரன் போன்றவர்களின் இந்தப் பணியை எம்போன்றவர்கள் விதந்தோதுவதற்கும், மனம் கொள்வதற்குமான அடிப்படையே அதுதான். நான் முதல் பகுதியில் சொன்னது போல் , மிக மோசமான கசப்புகளாலும் முரண்களாலும் இருள் மண்டிக் கிடக்கிறது, தமிழர் முஸ்லிம் மக்களிடையேயான சமூக உறவுகள்.
குறிப்பிட்ட ஒரு தொகை தனி மனிதர்களிடையே இந்த உறவுகள் இன்னமும் தனி மனித, குடும்ப உறவுகளாக உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் பெரிய அளவில் இரு சமூகங்களுக்கிடையேயான உறவு என்கிற போது அது எட்டாத தூரத்தில்தான் தோற்றம் காட்டுகிறது. இதுவரை தனி மனிதர்களாகவும் , குடும்பங்களாகவும் தக்க வைக்கப்பட்டுவரும் இரு சமூகங்களுக்கிடையிலான இந்த உறவின் வேர் அறுபடாத நிலையில், இந்த காய்ந்த மரத்திற்கு நீரூற்றி, உரமூட்டி வளர்க்க ஆழமானதும் ஒருமைப்பாட்டை வழங்கக் கூடியதுமான செயற்பாடுகள் அவசியமாகின்றன. இதனையே சுமந்திரனின் சமகாலப் பாத்திரம் செய்திருக்கிறது என்பதையே காண்கிறேன்.
நான் இதனை போகிற போக்கில் சொல்லவில்லை, தமிழ் முஸ்லிம்களுக்கிடையிலான உறவின் முக்கியத்துவம் பற்றி சமூக அசைவியக்கத்தில் பாத்திரமேற்றுவரும் பல்வேறு பிரிவினரும் இப்போது வெளிப்படையாக பேசத் தொடங்கி இருக்கின்றனர். எழுதுகின்றனர். இதுபற்றி யோசிக்கின்றனர். இதனை நீங்களும் கண்ணாரக் காணலாம். தமிழ்த்தரப்பின் அரசியல் பிரதிநிதி என்ற வகையில் திரு சுமந்திரன் முஸ்லிம்களை நோக்கி இந்த ஒருமைப்பாட்டை வழங்குவதன் வழியான நேசக்கரத்தினை நீட்ட , முஸ்லிம் சமூக சக்திகள் அதனை அரவணைத்துக் கொள்ள படிப்படியாக முன் வருகிறது........
ஆனால் இன்னொரு போக்கும் மேலே வரத்தான் செய்கிறது.... அந்த நச்சு வளையத்தினை கடப்பதும், சமூக சிந்தனை, சமூக உறவுகளை சிதைக்கும் சமூகங்களுக்குள் உள்ள இனவாத போக்கும் , இதனை ஒரு போதுமே விரும்பாத பேரினவாத திட்டங்களும், அதன் உள்ளூர் அரசியல், தரகர்களையும் , இவர்களின் நிகழ்ச்சி நிரல்களையும் இனம் காண்பதும் அதற்கு பலியாகாமல் இருப்பதுமே முக்கியம். இப்படியான ஒரு நல்ல புள்ளியை நச்சுப்பிரச்சாரங்களையும் , சந்தேகங்களையும், பழைய புண்களையும் கீறீ அதன் ஊனங்களையும் கண்முன்னே கொணர்ந்து அழித்து விடத் துடிக்கும் போக்கும் இப்போது மேல் வருவதை நீங்கள் கண்ணால் காணக்கூடும்.
இவர்கள் அதிக பதற்றம் அடைவதும், எதிர்ப்பிரச்சாரங்களை தொடங்குவதும் எதனால்? , இவர்கள் யார்?
*தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்குள் இருக்கும் இனவாத தரப்பினர், இனத்துவ மேலாதிக்க எண்ணம் கொண்டோர் .....
*தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்குள் இனவாதத்தினை வளர்ப்பதன் வழியாகவே அரசியல் அதிகாரத்தினை அடைந்து கொள்ள முடியும் என நம்பும் பிரிவினர்…
*மகிந்த + கோதபாயவின் அரசியல் ஏஜெண்டுகளாக வடக்கு கிழக்கில் இயங்குபவர்களில் ஒரு கணிசமான பிரிவினர். ( இது மிக வெளிப்படையானது, தமிழர்களுக்குள்ளும் முஸ்லிம்களுக்குள்ளும் மகிந்த + கோதபாயவை ஆதரிக்கும் அரசியல்வாதிகளை பட்டியல் இட்டுப் பாருங்கள்).
உண்மையில் இவர்களுக்கு தமது சொந்த மக்களின் நிம்மதியான வாழ்விலும் இருப்பிலும் அக்கறை இருக்குமானால் இந்த விடயத்தினை வரவேற்க வேண்டுமல்லவா? அல்லது குறைந்த பட்சம் மௌனமாகவாவது இருக்கலாம் அல்லவா? தமிழ் முஸ்லிம் சமுகங்களிடையே , அந்த காய்ந்து போன நிலத்தில் ஒரு சிறு துளிப்பரப்பில் நீர் வார்க்கப்படுவதன் வழியாக நல்லுறவு துளிர்ப்பதற்கான சாத்தியம் முளை விடுவதை காண சகிக்க முடியாது இருக்கிறது இவர்களுக்கு.....
000000
கொரோனா தொற்று இன்று உலக அரங்கில் எந்தளவில் அதிகாரத்தில் இருக்கின்ற அரசாங்கங்களின் சர்வாதிகார போக்கினை மேலும் வலுப்படுத்தி வருவதை நாம் படித்து வருகிறோம். தம் எதோச்சதிகாரத்தினை மேலும் பலப்படுத்தவும் , தமக்கு தேவையற்ற மக்கள் , வர்க்கப் பிரிவினரை உழைப்பு, உற்பத்தி பிரிவிலிருந்து இலகுவாக அகற்றவும் , அவர்களை இலகுவாகக் கைவிடவும் உலக ஆதிக்க சக்திகளுக்கு கொரோனா தொற்று அதிகம் கை கொடுத்து வருகிறது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இனம், மதம் ஆயுதமாக்கப்பட்டு ஏலவே பல்வேறு வழிகளில் ஒடுக்கப்படும் மக்களை மேலும் ஒடுக்கி நசுக்க கொரோனாவை இந்த அரசாங்கங்கள் பயன்படுத்தி வருகின்றன.
இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இன, மத அடிப்படையில் கொரோனா நச்சு உயிரியை இனவாதமாக்கி , சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தினை மேலும் ஊட்டி வளர்ப்பதன் வழியாக அதிகாரத்தினை அடைந்து கொள்ள மகிந்த + கோதா ஆளும் குழுமம் முயற்சித்து வருகிறது. அதன் ஒரு வகை மாதிரிதான் . இறக்கின்ற முஸ்லிம்களின் உடலங்களை எரிக்கும் அரசியல் , இனவாதத் தீர்மானமாகும். முஸ்லிம்களின்” ஜனாசாக்களை எரித்தே அதன் (வெறி) வெளிச்சத்தின் வழியாக ”பாரளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று சர்வாதிகார, இராணுவ ஆட்சியை இலங்கையில் நிலை நிறுத்த மகிந்த + கோதா ஆளும் குழுமம் முயல்கிறது.
இந்த செயற்பாடு, இலங்கை முஸ்லிம்களில் பெரும்பகுதியினரை காயப்படுத்தியுள்ளது. இதற்கு நீதி கேட்க முஸ்லிம் சமூகம் கையேந்தி நிற்கும் போதுதான், திரு. சுமந்திரன் இந்த விடயத்தில் நீதிமன்றின் மூலம் முஸ்லிம்களுக்காக தான் வாதிட முன் வருகிறார். திரு. சுமந்திரன் இதனை ஒரு தனிமனித சட்டவளவாளராக செய்ய முன்வரவில்லை. அவர் தமிழரசுக் கட்சியினது முக்கிய அரசியல் பிரதிநிதி. தமிழரசுக் கட்சியும் அதன் தலைமையும் அவரது இந்த முயற்சிக்கு எதிர் நிலையில் இல்லை என்பதையும், தமிழ் மக்களின் வாக்குகள் , அதன் வழியாக வழங்கப்பட்ட அரசியல் ஆணையும் இதற்கு காரணமாக இருக்கிறது என்பதையும் , முஸ்லிம் மக்கள் உணரும் சந்தர்ப்பம் இது. ... திரு சுமந்திரன் ஒரு தனி மனிதனல்ல, பெரும்பான்மையான தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியின், ஒரு அரசியல் கூட்டு முன்னணியின் முக்கிய இளம் தலைவரவர்....
தொடரும்….
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -