ஒடுக்கப்படும் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் திரு- சுமந்திரனின் பணியும் பாத்திரமும்...


- ஒரு முஸ்லிம் நோக்கு நிலை - 01-
பௌஸர் மஹ்ரூப்-
ந்தப் பதிவின் தொடக்கத்தில் முன்கூட்டியே ஒரு விடயத்தினை தெரிவித்துவிட விரும்புகிறேன்.

அது தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கானது. திரு - சுமந்திரன் பற்றிய எனது இக்கருத்துகள் சமகாலத்தில் இலங்கை முஸ்லிம்களிடத்தில் நீண்ட காலத்தின் பின்பு , அதிக கவனமும் தோழமை உணர்வும் பெற்றுவரும் ஒரு தமிழ்த் தலைவரான சுமந்திரன் தொடர்பான முஸ்லிம் அகத்தின் மனப்பதிவுகள் பற்றியதே. தமிழர் அரசியலில் அவரது ஏற்பு மறுப்புக் குறித்து இப்போது நான் இங்கு பேசுவது எனது நோக்கம் இல்லை. அதனை நான் எழுதுவதும் பொருத்தமானதில்லை.

அண்மைக்கால இலங்கையின் முஸ்லிம்கள் மீதான நெருக்கடிகளின் போது , தமது சொந்த அரசியல் தலைவர்களுக்கு வெளியில் அதிகம் விதந்து நட்பு ரீதியான உணர்வினை தழுவிய பாராட்டும் நன்றியும் முஸ்லிம் சிவில் சமூக மட்டத்திலிருந்து ஒரு தமிழ்த் தலைவரான சுமந்திரனை நோக்கி குவிந்து வருவதை இலங்கை முஸ்லிம் சமூகத் தளத்தில் மிக துல்லியமாக காணக்கூடியதாக உள்ளது.

கடந்தகால கசப்புகளால் இரு துருவ நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள தமிழ் , முஸ்லிம் சமூகங்களுக்குள் இருந்து, ஏனைய சமூகத்தினை சேர்ந்த ஒரு அரசியல் தலைவரை ஏற்றுக் கொள்ளவோ, அவர் தொடர்பான சாதகமான எண்ணப்பாடு வெளிப்படவோ , அவரை அல்லது அவர்களை போற்றுவதற்கான சூழலும் இருந்ததில்லை, அப்படி ஏற்கப்படுவதற்கான முன் மாதிரியான அரசியல் தலைவர்களோ இரு சமூகங்களுக்குள்ளும் இருந்ததில்லை என்பதையும் நாம் கண்டிருக்கிறோம்.

இப்போது இந்த ”பனிப்போர்” தன்மையில் ஒரு மெல்லிய விலகல் நிகழ்ந்து வருவதை முஸ்லிம் தளத்தில் காண முடிகிறது. தமிழ்த் தரப்பில் இருந்து திரு சுமந்திரனின் அரசியல், சமூக அணுகுமுறை இதனை சாத்தியப்படுத்தி உள்ளது. துரதிருஷ்டம் என்ன வென்றால் முஸ்லிம் தரப்பிலிருந்து தமிழர்கள் மத்தியில் ஒரு நட்புடன் அணுகக் கூடிய ஒரு அரசியல் தலைவரும் இன்னும் அடையாளம் காணப்படாதேயாகும்.

கடந்த பல வருடங்களாக இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு தளங்களில் , பல்வேறு வடிவங்களில் அரச, அரசாங்க ஒடுக்குமுறையை மிக வெளிப்படையாகவே எதிர் கொண்டு வருகின்றனர்.

இந்த ஒடுக்குமுறை இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் , உளவியல் தளத்தினை உள்ளார்ந்த வகையில் மிக மோசமாக உலுக்கி வருகிறது...
.
இன்னொரு வகையில் சொன்னால் , இலங்கை முஸ்லிம் சமூகம் இப்படியான , வெளிப்படையான கருத்தியல் போர்ப்பிரகடனத்துடன் ஒரு அரச ஒடுக்குமுறையை பல்வேறு தளங்களில் இக்காலகட்டங்களுக்கு முன் சந்தித்தது இல்லை.

தமிழ் மக்கள் இலங்கை அரசின் ஒடுக்குமுறையை எதிர் கொண்ட போது , இலங்கை முஸ்லிம் சமூகம் இந்த ஒடுக்குமுறை வட்டத்திற்கு வெளியே தான் தன்னை இருத்தி வந்தது. இதுவொரு Comford Zone , இந்த வலயம் தொடர்ச்சியாக தம்மிடம் இருக்கும் என அவர்கள் நினைத்திருந்தனர்.

இப்போதுதான் இலங்கை முஸ்லிம்களில் கணிசமானோருக்கு ஒரு அரச ஒடுக்குமுறையின் தன்மையும், அதன் பாரதூரமும் படிப்படியாக புரியத் தொடங்கியுள்ளது.

 இந்தப் புரிதலை ஏற்படுத்திய நடைமுறை வடிவங்களே தென்னிலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அரசின் துணையுடனான கலவரங்கள், உயிரிழப்புகள், சொத்தழிப்புக்கள் ,வெளிப்படையான இனவெறுப்பு, இன ஒதுக்கல் கொள்கைகள், பாரபட்சம், புறக்கணிப்பு உட்பட இலங்கை முஸ்லிம் சமூகத்தினை இலங்கை மைய நீரோட்டத்திற்குள் இருந்து வெளியகற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரல் என்பனவாகும்.

அச்சமும், எதிர்காலம் குறித்த பல கேள்விகளும் முஸ்லிம் மக்கள் மத்தியில் உள்ளார்ந்து படர்ந்து ஆட்கொள்ளத் தொடங்கி உள்ளன. பல திரைகள் விலகத் தொடங்கி உள்ளன. அரசியல், இராணுவ , பொருளாதார, பண்பாட்டு நெருக்கடிகள் சூழ்ந்துவிட்டன.

இத்தகைய கைசேத சூழலின் ஒவ்வொரு நடவடிக்கையின் போதும், முஸ்லிம்களின் துயருடன் தன்னை தொடர்ச்சியாக அடையாளப்படுத்தி வரும் , ஒரு தமிழ்த் தலைவர் என்றால் அது திரு சுமந்திரன் என்பது முஸ்லிம் சமூகத்திற்குள் இருந்து வந்து கொண்டிருக்கும் பதிவுகள், எழுத்துக்கள், நேசக்கரம் என்பன இன்று சான்று பகர்கிறது. திரு சுமந்திரன் தென்னிலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரப் பூமிகளுக்கு கள விஜயம் சென்றிருக்கிறார்.

 இவற்றிற்கு எதிராக பாரளுமன்றத்தில்,நீதிமன்றங்களில் , ஊடகங்கள் முன் குரல் கொடுத்து இருக்கிறார்.

 உள்ளூர் தொடக்கம் சர்வதேச ரீதியாக வரை இவற்றிற்கு எதிராக அறிக்கைகளை கொடுத்திருக்கிறார்.வாதடி இருக்கிறார்... தொடர்ந்தும் இருந்தும் வருகிறார்.

அண்மையில் சமூக வலைத்தளங்களில் சிங்கள இனவாதிகளுக்கெதிராக ஒரு தனி மனிதனாக நின்று எழுதிப் போராடிய றம்சீ ராசிக் எனும் இளம் குடும்பஸ்தரை, இலங்கை ஒடுக்குமுறை அரசு கைது செய்து கொடும் ஒடுக்குமுறை சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் ,அவரின் விடுதலைக்காக நீதிமன்றில் ஆஜரானார்.

 அப்போது அவர் சொன்னார் “ இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்படுகிறது” என்பதை இந்த நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

அப்போது நீதிபதி திரு. சுமந்திரனை நோக்கி கேட்டார், “யார் அப்படியான பிரச்சாரங்களை செய்கிறார்கள்” என.. திரு. சுமந்திரன் நீதிபதியை பார்த்து சொன்னார்... ”இலங்கைஅரசு செய்கிறது,இலங்கை அரசாங்கம் இதற்கு பின்னாலுள்ளது “என்றார்.

இப்படியான ஒரு துணிச்சலான குரலை இன்னமும் முஸ்லிம்களுக்குள் உள்ள முஸ்லிம் தலைவர்களே ஒரு நீதிமன்றின் முன் பகிரங்கமாக சொல்ல, அரசியல், ஆன்மீகபலம் இல்லாது இருக்கின்ற போது, திரு சுமந்தரன் எந்தவித பிரதி உபகாரமும் இல்லாது சொன்னால்.... முஸ்லிம் மக்கள் திரு. சுமந்திரனை நோக்கி தமது கவனத்தை குவிப்பது ஆச்சரியமானது அல்ல....
தொடரும்.....
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -