இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பாராளுமன்றத் தேர்தல் முறைமை


1978 ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பின்கீழ் பாராளுமன்றத் தேர்தல் விகிதாசாரப் பட்டியல் முறையின் கீழ் நடைபெறுகின்றது. இத்தாலி, ஒஸ்ரியா, பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் சில பிரிவுகளின் சேர்க்கையாக இலங்கை விகிதாசாரப் பிரதிநிதித்துவதுமுறை காணப்படுகின்றது.
அரசியலமைப்பின் 96வது உறுப்புரைக்கமைவாக எல்லை நிர்ணய ஆணைக்குழு இலங்கை முழுவதையும் 22 தேர்தல் மாவட்டங்களாகப் பிரித்துள்ளது. தேர்தல் மாவட்டங்களைப் பிரிக்கும்போது 20 க்குக் குறையாமலும் 25க்கு மேற்படாமலும் தேர்தல் மாவட்டங்கள் பிரிக்கப்படுதல் வேண்டும் என யாப்பு விதி கூறுகின்றது.
இலங்கையில் காணப்படும் 25 நிர்வாக மாவட்டங்களும் 22 தேர்தல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய இரண்டு நிர்வாக மாவட்டங்கள் இணைக்கப்பட்டு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டமாகவும், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று நிர்வாக மாவட்டங்களும் இணைக்கப்பட்டு வன்னி தேர்தல் மாவட்டமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
1978 ஆண்டைய மூல யாப்பின் பிரகாரம் பராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையினை 196 ஆக வயைறுத்தது. பின்னர் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 14வது திருத்தத்தின் பிரகாரம் பாராளுமன்ற மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆக இருத்தல் வேண்டும் எனவும் இதில் 196 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் மக்களால் தெரிவு செய்யப்படுவதுடன் 29 உறுப்பினர்கள் தேசியப்பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டது.
மக்களால் தேர்தல் மாவட்ட அடிப்படையில் தெரிவு செய்யப்படும் 196 உறுப்பினர்களும் பின்வருமாறு ஒதுக்கீடு செய்யப்பட்டனர். இலங்கையிலுள்ள 9 மாகாணங்களுக்கும் ஒரு மாகாணத்திற்கு 4 உறுப்பினர் வீதம் 36 உறுப்பினர்கள் மாகாணக் கோட்டா என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டனர். அவ்வாறு ஒதுக்கீடு செய்யும்போது அம்மாகாணத்திலுள்ள தேர்தல் மாவட்டங்களுக்கு ஒரு தேர்தல் மாவட்டத்திற்கு ஒரு உறுப்பினரேனும் ஒதுக்கப்படுதல் வேண்டும். இலங்கையில் எந்த ஒரு மாகாணத்திலும் கூடியது 4 தேர்தல் மாவட்டத்திற்கு மேல் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று தேர்தல் மாவட்டங்களே காணப்படுகின்றது. ஒரு மாகாணத்தில் இரண்டு தேர்தல் மாவட்டம் காணப்பட்டால் ஒரு தேர்தல் மாவட்டத்திற்கு 2 என்ற அடிப்படையிலும் மூன்று தேர்தல் மாவட்டங்கள் காணப்பட்டால் அம்மூன்றில் எம்மாவட்டம் அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளதோ அம்மாவட்டத்திற்கு இரண்டு உறுப்பினர்களும் ஏனைய இரு மாவட்டங்களுக்கு தலா ஒரு உறுப்பினர் வீதமும் ஒதுக்கீடு செய்யப்படவேண்டும்.

எஞ்சியுள்ள 160 உறுப்பினர்களும் தேர்தல் மாவட்டங்களின் வாக்காளரின் விகிதாசாரத்திற்கு ஏற்ப மாவட்டங்களுக்கு பிரதிதிநித்துவம் பிரித்து வழங்கப்படும். இலங்கையிலுள்ள பதிவு செய்யப்பட்ட முழு வாக்காளர்களின் எண்ணிக்கையினை 160 ஆல் பிரிக்கும்போது பெறப்படுகின்ற தொகையினை (தேசிய கோட்டாத்தொகை) ஒவ்வொரு மாவட்டங்களின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையினால் பிரிப்பதன் மூலம் மாவட்டங்களுக்குரிய ஆசனங்கள் வழங்கப்படும். இவ்வாறு கிடைக்கப்பெறும் எண்ணிக்கையையும் மாகாண கோட்டா மூலம் கிடைக்கப்பெறும் எண்ணிக்கையையும் இணைத்தே ஒரு மாவட்டத்தில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை தேர்தல் ஆணையாளரால் அறிவிக்கப்படும். இவ்வாறு 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் தெரிவுசெய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படும்.
வருடாந்த வாக்காளர் பட்டியலில் ஏற்படும் திருத்தங்களுக்கு ஏற்ப மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படும் உறுப்பினர் எண்ணிக்கையிலும் மாற்றங்கள் ஏற்படலாம். உதாரணமாக எதிர்வரும் 9வது பாராளுமன்றத்துக்கான தேர்தலில் மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களிலிருந்து தெரிவாகவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையில் தலா ஒன்று குறைவடைகின்றது. வதுளை மொனறாகலை மாவட்டங்களில் தலா ஒரு உறுப்பினர் வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுத்தேர்தலின் போது எவரும் ஒரு தனித்த வேட்பாளராக போட்டியிட முடியாது ஒன்றில் அரசியல்கட்சி ரீதியாகவோ அல்லது சுயேற்சைக் குழுவாகவோ பல வேட்பாளர்களைக் கொண்ட பட்டியலின் மூலமாகவே போட்டியிட முடியும். இப்பட்டியலில் இடம்பெறவேண்டிய உறுப்பினர்களது எண்ணிக்கையானது குறித்த மாவட்டத்தில் தெரிவு செய்யப்படவேண்டிய உறுப்பினர் எண்ணிக்கையுடன் மூன்றைக் கூட்டி வருகின்ற எண்ணிக்கையைக் கொண்டதாகக் காணப்படும். இவ்வேட்பாளர் பட்டியலை கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் அந்தந்த தேர்தல் மாவட்ட அத்தாட்சி அதிகாரியிடம் அறிவிக்கப்படும் தினங்களில் சமர்ப்பித்தல் வேண்டும் இதனை வேட்புமனு தாக்கல் செய்தல் என அழைப்பர்.
அவ்வாறு கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் தமது வேட்பாளர் பட்டியலினை சமர்ப்பித்ததன் பின்னர் அப்பட்டியலிலுள்ள பெயர்கள் தனித்தனியாக சிங்கள அகரவரிசைப்படுத்தப்பட்டு அவ்வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் வழங்கப்படும். வாக்காளன் தான் விரும்பும் கட்சியின் அல்லது சுயேட்சைக்குழுவின் சின்னத்திற்கு எதிரே புள்ளடியிட்டு தனது வாக்கினை அளிக்கவேண்டும். பின்னர் தான் வாக்களித்த கட்சியின் அல்லது சுயேட்சைக் குழுவின் மூன்று வேட்பாளர்களின் இலக்கங்களுக்கு மேல் புள்ளடியிட்டு மூன்று விருப்பத்தேர்வு வாக்குகளை அளிக்கமுடியும்.
இப்பொதுத்தேர்தலில் வெட்டுப்புள்ளி முறை பின்பற்றப்படுகின்றது. தேர்தல் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட செல்லுபடியான மொத்த வாக்குகளில் 5 வீதத்திற்;கு (1ஃ20) குறைவான வாக்கினைப் பெற்ற கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் போட்டியிலிருந்து நீக்கப்படும் அவை பெற்ற மொத்த வாக்குகள் அம்மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குத் தொகையிலிருந்து கழிக்கப்படும் அவ்வாறு நீக்கப்பட்டதன் பின்னர் பெறப்படுகின்ற வாக்குத் தொகை உரிய வாக்குத் தொகை அல்லது இயையும் வாக்குத் தொகை என அழைப்பர். இத்தொகையே கணிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
பொதுத் தேர்தலில் போனஸ் ஆசனம் வழங்கும் முறையும் காணப்படுகின்றது. தேர்தல் மாவட்டம் ஒன்றில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களில் எக்கட்சி அல்லது சுயேட்சைக் குழு அதிக வாக்குத் தொகையினைப் பெறுகின்றதோ அக்கட்சிக்கு அல்லது சுயேட்சைக்குழுவிற்கு ஒரு மேலதிக ஆசனம் வழங்கப்படும். இப்போனஸ் ஆசனம் அம்மாவட்டத்தில் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர் எண்ணிக்கையிலிருந்தே வழங்கப்படும்.
பின்னர் ஆசன ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படும். தேர்தல் மாவட்டம் ஒன்றின் அளிக்கப்பட்ட செல்லுபடியான மொத்த வாக்குத் தொகையிலிருந்து வெட்டுப்புள்ள வாக்குகள் கழிக்கப்பட்டு பெறப்படுகின்ற வாக்குத்தொகையினை (இயையும் வாக்குத் தொகை) அம்மாவட்டத்தில் தெரிவு செய்யப்படவேண்டிய மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் போனஸ் ஆசனத்தை கழித்து வருகின்ற உறுப்பினர் எண்ணிக்கையினால் பிரிப்பதன் மூலம் ஒரு வாக்குத் தொகை பெறப்படும். இதனை விழைதொகை அல்லது முடிவான வாக்கு என அழைப்பர். இது ஒரு உறுப்பினரை தெரிவு செய்வதற்குத் தேவையான ஆகக்குறைந்த வாக்;குத் தொகையாகக் காணப்படும்.
இவ்வாறு பெறப்பட்ட வாக்குத் தொகையினை மாவட்டத்தில் தகைமை பெற்ற கட்சிகள் சுயேட்சைக்குழுக்கள் பெற்றுக்கொண்ட வாக்குத் தொகையுடன் தனித்தனியாக பிரிப்பதன் மூலம் அக்கட்சிகள் சுயேட்சைக் குழுக்களுக்கான உறுப்பினர் எண்ணிக்கை ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு ஒதுக்கீடு செய்யும்போது ஆசனங்கள் எஞ்சியிருப்பின் அவ்வாசனங்கள் பிரித்ததன் பின்னர் ஆகக்கூடுதலாக எஞ்சியுள்ள வாக்குகளைக் கொண்டுள்ள கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களுக்கு வழங்கப்படும். அவ்வாறு அனைத்து ஆசனங்களும் ஒதுக்கப்பட்டதன் பின்னர் கட்சிகள் சுயேட்சைக் குழுக்களிலிருந்து எந்த வேட்பாளர்கள் வெற்றியீட்டியுள்ளார்கள் என்பது கூடிய விருப்பு வாக்குத் தொகையினை பெற்றுள்ள ஒழுங்கின் பிரகாரம் அறிவிக்கப்படும்.
பாராளுமன்றத் தேர்தலில் எஞ்சியுள்ள 29 உறுப்பினர்கள் தேசியப்பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படுவர். யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 14வது திருத்தத்தின் பிரகாரம் இவ் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசியப்பட்டியல் உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு பின்வரும் முறை பின்பற்றப்படுகின்றது. பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை ரீதியாக அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குத் தொகையினை மொத்த தேசியப்பட்டியல் ஆசனத் தொகையினால் (29) பிரிப்பதன்மூலம் ஒரு தேசியப்பட்டியல் உறுப்பினருக்கான வாக்குத்தொகை பெறப்படும். இத்தொகை வாக்கினை தனித்தனியாக அரசியற்கட்சிகள் சுயேட்சைக்குழுக்கள் தேசிய ரீதியில் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குத் தொகையுடன் பிரிப்பதன்மூலம் கட்சிகள் சுயேட்சைக் குழுக்களுக்கான தேசியப்பட்டியல் ஆசனத்தொகை ஒதுக்கீடு செய்யப்படும்.
பொதுத் தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் 29 பேர் அடங்கிய தனது தேசியப்பட்டியல் பெயர் விபரத்தினை தேர்தல் ஆணையாளருக்கு சமர்ப்பித்தல் வேண்டும். தேர்தல் ஆணையாளர் தேர்தலின் பின்னர் கட்சிகள் சுயேட்சைக் குழுக்களுக்குரிய தேசியப்பட்டியல் ஆசனத் தொகையினைக் குறிப்பிட்டு அவ்விடத்திற்கு நியமனம் பெறவேண்டியவர்களின் பெயர்களினை சிபாரிசு செய்யுமாறு கட்சிகளின் செயலாளர்களுக்கும் குழுக்களின் தலைவர்களுக்கும் அறிவிப்பார். இவர்களால் பட்டியலிலிருந்து சிபாரிசு செய்யப்படுபவர்களே உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். இச்சந்தர்ப்பத்தில் பட்டியலில் பெயரில்லாத ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்களையும் கட்சிகளின் சிபாரிசுகளுக்கு அமைவாக உறுப்பினர்களாக நியமனம் செய்யமுடியும்.
மேற்படி முறையின்கீழ் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து வருடங்களைக் கொண்ட ஒரு தவணைக்காலப்பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களாகப் பதவிவகிப்பர்.

எம்.ஏ. அச்சிமுகம்மட்
ஆசிரியர் - அல் அஷ்றக் தேசிய பாடசாலை
நிந்தவூர்.
வளவாளர் அரசியல் விஞ்ஞானம்
கல்முனை கல்வி வலயம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -