முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பிற்கு எதிராக மற்றுமொரு மனு தாக்கல், ஆஜராகிறார் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா


ஐ. ஏ. காதிர் கான்-
"கொவிட் 19" கொரோனா தொற்று நோய் காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பிற்கு எதிராக, மற்றுமொரு மனுவொன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு சார்பில், முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா நேரடியாகவே ஆஜராகவுள்ளார்.
புறக்கோட்டை பள்ளிவாசல்கள் சம்மேனத்தின் செயலாளர் ஏ.எச்.எம். நஸார் மற்றும் சட்டத்தரணி ஏ.சீ.எம். பெனாஸீர் ஆகியோரினால் இந்த மனு தாக்கல் செயயப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
"கொவிட் 19" நோய் காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பிற்கு எதிரான குறித்த மனு, (12) செவ்வாய்க்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு - பலகத்துறை, கொழும்பு - மருதானை, தெஹிவளை - கல்கிசை, கொழும்பு - மோதரை ஆகிய நான்கு இடங்களைச் சேர்ந்த நான்கு ஜனாஸாக்கள், இதுவரை தகனம் செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில், மே 5 ஆம் திகதி உயிரிழந்து, கொரோனா என எரிக்கப்பட்ட கொழும்பு - மோதரையைச் சேர்ந்த பாத்திமா றினோஸா (52) என்ற பெண்ணுக்கு "கொரோனா தொற்று இல்லை" என்றும், கொரோனா பரிசோதனைகளின்போது பல்வேறு மருத்துவ அறிக்கைகளில் குழறுபடிகள் நிகழ்ந்துள்ளதாகவும் டாக்டர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பிலும் தற்போது முக்கிய வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏற்கனவே கொரோனா தொற்றால்
உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்வதற்கு எதிராக இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட மூன்று தரப்புக்கள் இது தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை கட்டணமின்றி பேசுவதற்கு, பிரபல சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் இணக்கம் தெரிவித்து ஆஜராகியுள்ளார்.
இது தவிர, முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறும், இவ்வாறு உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலைத் தகனம் செய்து சாம்பலை வழங்காது அடக்கம் செய்ய அனுமதி தருமாறும், அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்கு ரிஸ்வி முப்தி,
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -