தற்போது முஸ்லிம்களின் புனித நோன்பு காலத்தினை முன்னிட்டு ஓட்டமாவடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினால் வீதியோர உணவகங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கை ஓட்டமாவடி பிரதேசத்தில் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் நோன்பு காலத்தினை முன்னிட்டு வீதியோர உணவு விற்பனைகள் உட்பட உணவகங்கள் மக்களின் பாதுகாப்பு கருதி சுகாதார முறைப்படி வியாபார நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமை தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வாழைச்சேனை பொலிஸாரால் சோதனைகள் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.எஸ்.எஸ்.எம்.வசீம் தலைமையில் அலுவலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் உணவகங்கள், பழ விற்பனை நிலையங்கள் என்பவற்றினை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் இணைந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பார்வையிட்டதோடு, உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் விற்பனை செய்யும் ஊழியர்கள், உரிமையாளர்களுக்கு சுகாதார முறைகள் தொடர்பில் விளிக்கமளிக்கப்பட்டது.
அத்தோடு சுகாதாரப் பழக்க வழக்கங்களைப் பேணி உணவு வகைகளைத் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்றும், சுகாதார நடைமுறையை மீறி செயற்படும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.