கல்முனையில் தின்மக்கழிவகற்றல் சேவைக்காக செலவிடப்படும் பெருந்தொகை நிதியை ஈடுசெய்வதற்கே வரி அறவீடு


தெளிவுபடுத்துகிறார் மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப்

அஸ்லம் எஸ்.மௌலானா-

ல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் தின்மக்கழிவகற்றல் சேவைக்காக பெருந்தொகை நிதி செலவிடப்பட்டு வருகின்றது. இதனை ஈடுசெய்வதற்காகவே சட்ட ஏற்பாடுகளுக்கமைய குடியிருப்பாளர்களிடம் தின்மக்கழிவகற்றல் சேவை வரி அறவிடப்படுவதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் தின்மக்கழிவகற்றல் சேவை வரி தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (17) மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன் உட்பட சுகாதார மேற்பார்வையாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கல்முனை மாநகர பிரதேசங்களில் திண்மக்கழிவகற்றல் சேவையை முன்னெடுப்பதில் மாநகர சபை எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்தும் அந்த சேவைக்கான நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பிலும் அவற்றுக்கான செலவுகள் குறித்தும் விபரித்த மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்கள், அந்த வகையில் மாதம் ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி 50 இலட்சம் ரூபா நிதி, மாநகர சபையினால் செலவிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

எமது கல்முனை மாநகர சபை எல்லைக்குள் வாழ்கின்ற சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மக்களினாலும் மற்றும் ஆயிரக்கணக்கான பயணிகளினாலும் வர்த்தக நிலையங்கள், ஹோட்டல்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், அரச காரியாலயங்கள், பொலிஸ் நிலையம் மற்றும் இராணுவ, கடற்படை முகாம்கள், வணக்கஸ்தலங்கள் என்பவற்றில் இருந்தும் நாளாந்தம் 120 தொடக்கம் 150 தொண் வரையிலான தின்மக்கழிவுகள் வெளியிடப்படுகின்றன. இவற்றுள் பெரும்பகுதி கழிவுகள், மாநகர சபையினால் அன்றாடம் சேகரித்து அகற்றப்படுகின்றன.

இக்கழிவுகளை அகற்றுவதற்காக கொம்பெக்டர், ட்ரம் ட்ரெக், லொறிகள், உழவு இயந்திரங்கள் உட்பட 23 வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. இவ்வாகனங்களின் பராமரிப்பு செலவு, சேகரிக்கப்படும் குப்பைகளை தரம்பிரிப்பதற்கான செலவு, அட்டாளைச்சேனை, பள்ளக்காடு பகுதிக்கு கொண்டு சென்று, கொட்டுவதற்கான செலவு, இவற்றுக்கான எரிபொருள் செலவு, தொண் அடிப்படையில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு செலுத்தும் கட்டணம், ஊழியர்களுக்கான சம்பளம் உட்பட பல்வேறு வகையான செலவுகள் இடம்பெறுகின்றன.

இதன்படி ஒரு வருடத்திற்கு சுமார் 18 கோடி ரூபா நிதி, திண்மக்கழிவகற்றல் சேவைக்காக மாத்திரம் மாநகர சபையினால் செலவிடப்படுகின்றது. இதற்காக அரசாங்கம், எமது மாநகர சபைக்கு எவ்வித நிதியொதுக்கீடையும் மேற்கொள்வதில்லை. மாறாக, மாநகர சபையானது தனது சொந்த வருமானத்தின் மூலமே இப்பாரிய செலவீனத்தை ஈடுசெய்ய வேண்டியுள்ளது.

எனவேதான் மாநகர சபை உப விதிகள் சட்டத்தின் பகுதி 14 இன் கீழும் மற்றும் அது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரினாலும், கல்முனை மாநகர சபையினாலும் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி ஏற்பாடுகளின் கீழும் வழங்கப்பட்டிருக்கின்ற அதிகாரத்தின் கீழ், பொது மக்களிடமிருந்து தின்மக்கழிவகற்றல் சேவைக்கான பங்களிப்பு நிதியை சேகரிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. மேலும், இதனை கட்டாயம் அறவீடு செய்ய வேண்டும் என்று அரச கணக்காய்வு திணைக்களம் பணித்ததற்கமைவாக, கடந்த 2012ஆம் ஆண்டு தின்மக்கழிவகற்றல் சேவை வரி அறவீடு சம்மந்தமான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையிலேயே, தற்போது ஒரு வீட்டுக்கு வாராந்தம் 50 ரூபா வீதம் தின்மக்கழிவகற்றல் சேவை வரி அறவீடு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி ஒரு குடும்பம் ஒரு நாளைக்கு 07 ரூபாவையே செலுத்த வேண்டியுள்ளது. ஒவ்வொரு குடும்பத்தினதும் அன்றாட செல்வுகளுடன் ஒப்பிடுகையில் இத்தொகை மிகச்சொற்பமானதே என்பதை எல்லோரும் அறிவோம்.

அதேவேளை பாடசாலைகள், வைத்தியசாலைகள், பொலிஸ் நிலையம் மற்றும் படை முகாம்கள் உட்பட அனைத்து அரசாங்க நிறுவனங்களினதும் வணக்கஸ்தலங்களினதும் குப்பைகளை இலவசமாகவே சேகரித்து அகற்றுகின்றோம். இந்நிறுவனங்களிடம் எவ்வித கட்டணமும் அறவிடப்படுவதில்லை. ஏனெனில் அவை மக்களுக்கு சேவை வழங்கும் நிறுவனங்கள் என்ற அடிப்படையிலேயே அவற்றின் திண்மக்கழிவுகளை இலவசமாக பொறுப்பேற்று, அகற்றி வருகின்றோம்.

விடயங்கள் இவ்வாறிருக்க சில மாநகர சபை உறுப்பினர்கள், குப்பை வரி செலுத்தத் தேவையில்லை என்று கூறி, மக்களை பிழையாக வழிநடாத்த முற்படுகின்றனர். மாநகர சபையிடமிருந்து நிறைய சேவைகளை எதிர்பார்த்து, வலியுறுத்துகின்ற இம்மாநகர சபை உறுப்பினர்கள் அவற்றுக்கான செலவுகள் குறித்தோ சபையின் வருமானங்களுக்கான வழிகள் தொடர்பிலோ சிறிதளவும் கரிசனை செலுத்துவதில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறான விடயங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி, தமது சுயநல அரசியலை முன்னெடுப்பதிலேயே அவர்கள் குறியாக இருக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் ஒரு சில உறுப்பினர்கள் ஒழுக்கம் தவறியும் செயற்படுகின்றனர்.

ஆகையினால் பொது மக்கள் உண்மையை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டுக் கழிவுகளை சேகரித்து அகற்றுவதற்கு மாநகர சபை அன்றாடம் எதிர்கொள்கின்ற சவால்களையும் செலவுகளையும் புரிந்து கொள்ளுங்கள். உங்களது சிறிய பங்களிப்பானது, இச்சேவைக்கான பெரும் செலவீனத்தை ஈடுசெய்வதற்கும் நமது மாநகர சபையை நிதி நெருக்கடியில் இருந்து விடுவித்து, திண்மக்கழிவகற்றல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் வினைத்திறனுடன் இன்னும் சிறப்பாக முன்னெடுப்பதற்கும் உறுதுணையாக அமையும் என்பதைப் புரிந்து கொண்டு, ஒவ்வொரு வாரமும் 50 ரூபாவை செலுத்தி, ஒத்துழைப்பு வழங்க முன்வாருங்கள் என்று அன்பாய் வேண்டுகொள் விடுக்கின்றேன்.

நான் முதல்வராக பதவியேற்றபோது திண்மக்கழிவகற்றல் சேவை மிகவும் பலவீனமான நிலையில் காணப்பட்டது. கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களிலுள்ள பல பொது இடங்கள் குப்பை மேடுகளாக காட்சியளித்தன. அந்த இடங்களில் துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தன. சுற்றுச்சூழல் மாசடைந்து காணப்பட்டது. சாய்ந்தமருது தோணா முழுவதும் குப்பைத் தொட்டியாக பயன்படுத்தப்பட்டு, அத்தோணா மிகத்துயரமாக காட்சியளித்தது. கழிவுகள் அகற்றப்படுவதில் காணப்பட்ட மந்த நிலையே இவற்றுக்குக் காரணமாக அமைந்திருந்தன.

ஆளணித் தட்டுப்பாடு, வாகனப் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடி போன்ற காரணிகளால்தான் திண்மக்கழிவகற்றும் சேவை மந்த நிலையில் சென்று கொண்டிருந்தது. இதனை சீர்செய்வதற்காக
நாங்கள் வகுத்துக் கொண்ட அவசர திட்டங்களின் பயனாக 03 ட்ரம் ட்ரெக் கனரக வாகனங்களை சுமார் ஒரு கோடி 80 இலட்சம் ரூபா செலவில் கொள்வனவு செய்தோம். கட்டையில் ஏற்றி ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த 05 உழவு இயந்திரங்களையும் பெட்டிகளையும் குறைந்த செலவில் எமது ஊழியர்களைக் கொண்டே திருத்தியமைத்து, பாவனைக்கு ஏற்றதாக மாற்றியமைத்தோம். சிறிய ஒழுங்கைகளில் குப்பை சேகரிப்புக்காக 24 தள்ளு வண்டிகளைத் தயாரித்தோம்.

மேலும், உள்ளூராட்சி, மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக இருந்த எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் ஏற்பாட்டில் அந்த அமைச்சின் ஊடாக ஒரு கொம்பெக்டர் வாகனத்தை பெற்றுக் கொண்டோம். அத்துடன் ஒரு தொகை சுகாதார ஊழியர்களையும் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்தோம். அவ்வாறே இன்னும் பல குறைபாடுகளையும் கட்டம் கட்டமாக நிவர்த்தி செய்தோம்.

இதனால் அண்மைக்காலமாக எமது திண்மக்கழிவகற்றல் சேவை திருப்திகரமாக, சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதை எல்லோரும் ஏற்றுக்கொள்வீர்கள். கல்முனை மாநகர சபை பிரதேசங்கள் ஆறு வலயங்களாக பிரிக்கப்பட்டு, இச்சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வலயத்திற்கும் தலா 03 வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பிரதான வீதியில் நாளாந்தம் குப்பை சேகரிப்பு இடம்பெறுகின்றது. உள்ளூர் வீதிகளில் சுழற்சி முறையில், ஒரு வீதிக்கு வாரம் ஒரு தடவையாவது குப்பை வாகனம் செல்கின்றது. எதிர்காலத்தில் அதனை இரண்டு தடவையாக அதிகரிப்பதற்கு திட்டமிட்டு வருகின்றோம்.

ஆகையினால் திண்மக்கழிவகற்றல் சேவையை இன்னும் வினைத்திறனுடன் சிறப்பாக முன்னெடுப்பதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பே அவசியம் என்பதை புரிந்து கொண்டு செயற்பட முன்வர வேண்டும் என மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன் - என்று முதல்வர் ஏ.எம்.றகீப் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -