உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சராக தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் இருந்த போது கல்முனையின் நான்கு சபைகளையும் உருவாக்க கடந்த 2014 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் எத்தனங்களை மேற்கொண்டார். தேர்தல்களை காரணம் காட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதை செய்யவிடாது தடுத்து நிறுத்தியது. இருந்தாலும் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நான் உட்பட பலரும் இணைந்து 40 தடவைக்கு மேல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையை சந்தித்து கலந்துரையாடினோம்.
இருந்தாலும் எங்களின் கோரிக்கையை இழுத்தடித்து நிராகரிக்கும் நோக்கில் இந்த போராட்டத்தை முன்னின்று நடாத்தியவர்களுக்கும், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைகள் நிறையவே கழுத்தறுப்புக்களை செய்து துரோகங்களை செய்தனர். என்றாலும் நாங்கள் மனம்தளராமல் போராட்டத்தை முன்னெடுத்து சென்றோம் என தேசிய காங்கிரசின் வேட்பாளரும் அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம். சலீம் தெரிவித்தார்.
சாய்ந்தமருது அலுவலகத்தில் இன்று பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் தொடர்ந்தும்,
சாய்ந்தமருது நகரசபை போராட்டத்தை மழுங்கடிக்கும் நோக்கில் சிலர் இப்போது தமது அரசியல் அஜந்தாக்களை செய்ய முனைவதை அறிந்துகொண்ட மக்கள் அவர்களை புறக்கணிக்கும் செயற்பாடுகளை தொடர்ந்தும் செய்துவருகின்றனர். சாய்ந்தமருது நகரசபை போராட்டம் என்பது பல குரல்களின் வலுவினால் கடந்த முப்பது வருடங்களாக இருந்துவரும் ஒன்றாகும்.
கடந்த 2015ஆம் ஆண்டைய பொதுத்தேர்தலின் பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரையும் அக்கட்சியின் பிரதிநிதிகளையும் நாடி எங்கள் போராட்டத்தின் வலிமையையும், நியாயத்தையும் எடுத்துக்கூறி உரிமைகளை பெற்றுத்தர கோரிக்கையை முன்வைத்தோம். அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் எங்களுக்கு 2015 ஆம் ஆண்டு முதல் பல வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால் அதுவும் எட்டாக்கனியாகவே மாறிவிட்டது.
எங்களின் உரிமைகளை பெற நான் தேசிய காங்கிரசின் சார்பில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியது, எங்கள் கட்சிக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கின் தாக்கத்தினாலும், எங்களுக்கு மூன்று ஆசனங்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதையும் பொறுத்துக்கொள்ள முடியாத அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்காரர்கள் எங்களின் நகரசபை போராட்டத்தை கொச்சைப்படுத்தும் பிரச்சாரங்களில் இப்போது இறங்கியுள்ளார்கள்.
சாய்ந்தமருத்துக்கு நகரசபை வழங்க முயற்சிகள் செய்து பெற்றுத்தரும் கட்சிக்கு எங்களின் வாக்குகளை அளிப்பதாக வாக்குறுதியளித்திருந்தோம். அதனடிப்படையில் கடந்த 52 நாள் ஆட்சி மாற்றத்தின் போது அப்போதைய உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் சட்டத்தரணி பைசர் முஸ்தபா உட்பட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எங்களுக்கான உரிமை கிடைக்கப்பெற்றால் உங்களுக்கே எங்களது ஆதரவு என்று நாங்கள் வழங்கிய உறுதியை அடுத்து எங்களின் நகரசபை கிடைக்கப்பெற போகிறது என்பதை அறிந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அணியினர் நாங்கள் உதவி செய்கிறோம் என்று இணைந்து கொண்டனர். சாய்ந்தமருத்துக்கு நகரசபை பெற்றுத்தந்தால் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். ஆனால் அவை ஒன்றும் நடைபெற வில்லை.
தரகர் ஒருவர் எங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைப்பதற்கான ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும் போலும் இப்போது அது நடைபெறாமல் போனவுடன் நாங்கள் 16 தடவைகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரமுகர்களை சந்தித்த கதைகளை சமூக தளங்களில் பேசிக்கொண்டிருக்கிறார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், தவிசாளர் போன்றோர்களை பல நேரங்களிலும் சந்தித்து பேசிய எங்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அவர்களின் நோக்கமாக இருந்தது எங்களுக்கு சபை பெற்று தருவதை விட எங்களை கேடயமாக வைத்து அம்பாறையில் அவர்களது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை பலமாக காலுண்ட செய்வதே.
எங்களை நேரடி அரசியலுக்கு இழுப்பதிலும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் நாங்கள் இணைந்து பயணிக்கப்போவதாக அச்சம் கொண்டு அதை தடுப்பதிலும் எப்போதும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குறியாக இருந்து வந்தது. 52 நாள் ஆட்சி மாற்றம் ஒரு முடிவுக்கு வந்தவுடன் மீண்டும் நல்லாட்ச்சி அரசின் பங்காளிகளாக இருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட நல்லாட்ச்சி அரசின் முக்கியஸ்தர்கள் பலருடனும் உதவி கோரினோம். அதுவும் கைகூடாமல் பழைய செய்திகளையே அவர்கள் திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருந்தார்கள். அம்பாறை மாவட்ட அதிகாரம் எங்களிடம் இல்லை எங்களால் முடியாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூறி எங்கள் விடயங்களில் இருந்து விலகிகொண்டது.
பின்னர் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இரண்டு முக்கிய வேட்பாளர்களையும் சந்தித்து எழுத்து மூலமான உறுதிப்பாட்டை பெற எங்கள் குழு முடிவு செய்து முதலில் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை சந்திக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடாக முயற்சிகளை செய்தோம்.அது கைகூடவில்லை. பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்களை சந்தித்து எங்களது இலக்கில் வெற்றிக்கொண்டோம்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்கள் எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆதரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். நாங்கள் எங்கள் சபையை உறுதிப்படுத்துவதில் தெளிவாக இருந்தோம். சாய்ந்தமருத்துக்கு நகரசபை வழங்க முயற்சிகள் செய்து வர்த்தகமாணி அறிவித்தலுடன் வரும் கட்சிக்கு எங்களின் வாக்குகளை அளிப்பதாக வாக்குறுதியளித்திருந்தோம். அதன் பிரகாரம் இப்போதும் நாங்கள் தேசிய காங்கிரஸை ஆதரித்து அதன் பிரதிநிதியாக இப்பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றார்.