எம்.எச்.சேகு இஸ்ஸதீன் முஸ்லிம்களுக்கான தனித்துவ அரசியல் கட்சியின் ஸ்தாபக பங்களிப்பாளர்களுள் முதன்மையானவர்!


பௌஸர் மஹ்ரூப்-
பகுதி 01----- பகுதி 02
டுக்கப்படுகின்ற ஒரு மக்கள் பிரிவிலிருந்து , தமது அரசியல் ,சமூகப் பலத்தினை ஒன்று திரட்டவும் , தம்மை அடையாளப்படுத்தவும், தமது கோரிக்கைகளை முன் நிறுத்தவும் தமக்கான தனித்துவ அமைப்பு , கட்சிக் கோரிக்கையானது அந்த சமூகத்தின் அரசியல் ,சமூக ஆன்மாவுடன் தொடர்புபட்டது.
பேரினவாத, மேலாதிக்க ஒடுக்குமுறைகளின் நெருக்குதல்களில் இருந்து ஒடுக்கப்படுகின்ற ஒரு இனம், மக்கள் திரள் தம்மை தற்காத்துக் கொள்ள முன்னெடுக்கின்ற ஒரு அரசியல் பாதுகாப்பு அரண் அது. இலங்கை முஸ்லிம்களுக்கான தனித்துவ அரசியல் கட்சியான முஸ்லிம் காங்கிரஸின் உருவாக்கமும் வரலாற்றில் இதன் வழியேதான் நிகழ்ந்தது. இது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல, ஒடுக்கப்படுகின்ற மக்களின் அபிலாசைகளினதும் எதிர்பார்ப்புகளினதும் அரசியல் விளைவுதான் இது.
இந்த அரசியல் இயக்கத்தினை மக்களிடம் கொண்டு செல்வதிலும், இதனை ஒரு ஒடுக்கப்படுகின்ற மக்கள் சார் அரசியல் பண்புள்ள கட்சியாகவும், அதன் கொள்கை சார்ந்தும் , நடைமுறை சார்ந்தும் முன்னெடுப்பதிலும் அந்த இயக்கத்தினை வழி நடாத்துகின்ற தலைமைத்துவத்திற்கு முக்கிய பங்குள்ளது.
முஸ்லிம் காங்கிரசின் அடிக்கட்டுமான வரலாற்றினை பார்க்கின்ற போது, முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் இயக்கப் பரிமாணத்தில் இரண்டு பேரினது பங்களிப்பும் ஆளுமையும் முதன்மையானதாக இருக்கின்றது .
அக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப். அக்கட்சியின் முதல் தவிசாளர் எம்.எச். சேகு இஸ்ஸதீன். அஷ்ரப் அவர்கள் இன்று உயிருடன் இல்லை. சேகு இஸ்ஸதீன் அவர்கள் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவரது 76வது பிறந்த தினம் கடந்த மே மாதம் 12ம் திகதியாகும். இலங்கை முஸ்லிம்களுக்கான ஒரு தனித்துவ அரசியல் இயக்கத்தினை கட்டமைப்பதிலும் அதனை வளர்த்தெடுப்பதிலும் சேகு இஸ்ஸதீன் ஆற்றிய பணி பெரும் பங்கினைக் கொண்டது. பல்வேறு அம்சங்களிலும் பல்வேறு தளங்களிலும் முக்கியத்துவமானது. நான் சொல்லும் ஒப்பிட்டை ஒரு அரசியல் குறியீட்டின் மூலம் சொல்ல முடியும் என்றால், கியுபா புரட்சியின் போது பிடல் காஸ்ட்ரோவும் சேகுவாராவும் வகித்த
பாத்திரம் போல்தான் அஷ்ரபும் சேகு இஸ்ஸதீனும் என்று சொல்ல முடியும்.
ஒரு அரசியல் மாற்றத்திற்கான பணியில் அவர்கள் இருவரும் இப்படியான ஒரு பாத்திரத்தினையே வகித்தனர். இங்கு நான் இந்த இருவரையும் சுட்டிக் காட்டுவதன் மூலம், முஸ்லிம் காங்கிரசின் ஆரம்ப அடித்தளத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும் பங்களித்த சாதாரண மக்களையும், அதன் அன்றைய முக்கிய செயற்பாட்டு பங்களிப்பாளர்களையும் விட்டு விட்டேன் என யாரும் கருதத் தேவையில்லை. அத்துடன் இக்குறிப்பு முஸ்லிம் காங்கிரஸில் சேகு இஸ்ஸதீன் வகித்த பங்களிப்பினை முதன்மையாக பதியும் நோக்கில் எழுதப்படுகிறது என்பதனையும் கவனத்தில் கொள்ளவும்.
000
முஸ்லிம் காங்கிரஸ் ,தமிழ் ஆயுத இயக்கக்கங்களின் முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறை காரணமாக உருவாகியது என்றே பலரும் வரலாற்றில் எழுதி வருவதை நான் காண்கின்றேன். அது தவறானது மட்டுமல்ல, இது முஸ்லிம்கள் மேலான பேரினவாத சிங்கள ஒடுக்குமுறையை அரசியல் நீக்கம் செய்வதுமாக அமைந்தும் விடுகிறது.
முஸ்லிம் காங்கிரசின் உருவாக்கத்தின் (1980)கால கட்டமே இதற்கு தக்க சான்றாகும். சிங்கள இனவாத ஒடுக்குமுறை அரசும், அதன் பாரபட்ச புறக்கணிப்புகளும், அவ்வரசாங்கங்கள், அதன் நிறுவனங்களான சிங்கள பெரும்பான்மை கட்சிகளில் தலைமை வகித்த தென்னிலங்கை முஸ்லிம் பிரதிநிதிகள், மற்றும் அக்கட்சிகளின் வடக்கு கிழக்கு முஸ்லிம் பிரதிநிதிகள் மீதான நம்ப்பிக்கையீனமும் அதிருப்தியுமே முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கத்தின் அடிப்படைகளாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் உருவாகி , அரசியல் அரங்கிற்கு மக்கள் மத்தியில் வருகின்ற போதுதான், வடக்கு கிழக்கில் தமிழ் ஆயுத இயக்கங்கள் பலம் பெறுவதுடன் , முஸ்லிம்கள் மீதான ஒடுக்குதல்களை தீவிரப்படுத்துகின்றன. அப்போதுதான் , இந்த தமிழ் ஆயுத இயக்கங்களின் செயற்பாடுகள் வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்களின் உயிர்களையும் உடமைகளையும் காவு கொள்வதும் அழித்தொழிப்பதுமான செயற்பாடுகள் அதிகரிக்கின்றன. இத்தகைய நிலை முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் நாளாந்த உடனடி நெருக்கடியாக மாறுகின்றது.
வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் வாழ்வில், தமிழ் ஆயுத இயக்கக்கங்களின் அத்துமீறல் முதன்மை, உடனடிப் பிரச்சினையாக 1985 காலகட்டமே மேல் எழுகிறது. அப்போதுதான் இந்த ஒடுக்குமுறை படி நிலை ,வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்களை ஆதாரத் தளமாகக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முதல் அரசியல் நிகழ்ச்சி நிரலாக முன்னுக்கு வருகிறது. எந்தவொரு மக்கள் பிரிவினரதும், மக்களுக்கான அமைப்பினதும் அரசியல் வழித்தடத்தினையும், அதன் தீர்மானங்களையும் செயற்பாடுகளையும் எடுப்பதில், வெளி ஒடுக்குமுறையாளர்களின் ஒடுக்குதல் வடிவங்களே முக்கிய பாத்திரத்தினை வகிக்கும் என்பதை நாம் அறிவோம்.
0000
1980களின் ஆரம்பத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த உள்ளூர் சமூகப்பிரதியான அஹமட்லெப்பை என்பவர்தான் முஸ்லிம்களுக்கான ஒரு அரசியல் கட்சி தேவை என்கிற வகையில் முஸ்லிம்காங்கிரசுக்கு நாமம் சூட்டுகின்றார். அவரால் அதனை ஒரு அரசியல் இயக்கமாக முன் கொண்டு செல்ல முடியாத நிலை காரணமாக , இளம் சட்டத்தரணியும் , அன்று அரசியல் ஈடுபாட்டுடன் இயங்கி வந்தவருமான அஷ்ரப் அவர்களை ஏற்று நடத்துமாறு கோரியதை அடுத்துத்தான் , 21 செப்டம்பர் 1980ம் திகதி காத்தான்குடியில் வைத்து முஸ்லிம்களுக்கான ஒரு அரசியல் இயக்கமாக முஸ்லிம் காங்கிரஸ் கருக் கொள்கிறது.அன்று இந்த உருவாக்கம் பெரிய ஆதரவினை பெறாததுடன், இந்த அரசியல் இயக்கத்தில் யாருமே பெரிதாக வந்து பணிகளைப் பொறுப்பெடுத்து செய்ய தயாராகவும் இருக்கவில்லை. இக்கால கட்ட சூழலை பார்க்கு முன்,
பின் நாளில் இலங்கை முஸ்லிம்களுக்கான தனித்துவ இயக்கத்தினை உருவாக்குவதில் முக்கிய பங்கற்றிய அஷ்ரபும் சேகு இஸ்ஸதீனும் 1975 தொடக்கம் 1985 காலப்பகுதியில், எந்தவகையான செயற்பாடுகளில் இயங்கி கொண்டிருந்தார்கள் என்பது இங்கு முக்கியமானது. இந்த இருவரும் பெயரளவில் இருவரையும் அறிந்திருந்தனர். இருவரும் ஒரே தளங்களிலும், வேறு பட்ட தளங்களிலும் இயங்கி வந்துள்ளனர். ஒரே தளம் எனும் போது அரசியல் இலக்கியம் என்பன முக்கியமானவை. இருவரும் கதை, கவிதை எழுதி வந்துள்ளனர் . அஷ்ரப் அவரது சொந்தப் பெயரிலும் பல புனைபெயர்களிலும் எழுத, சேகு இஸ்ஸதீன் “வேதாந்தி “எனும் பெயரில் கலை, இலக்கிய உலகில் அறியப்பட்டிருந்தனர்.
அஷ்ரபின் அரசியல் ஈடுபாடு நேரடியாக தமிழரசுக் கட்சியாகவும், சிறிலங்கா சுதந்திரக்கட்சி வெளி ஆதரவாளராகவும் இருக்க , சேகு இஸ்ஸதீன் இடதுசாரி கட்சிகளில் ஈடுபாடு கொண்டவராக இருந்ததுடன், 1977 பொதுத் தேர்தலில் சம்மாந்துறை தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.எச்.எம் ஹாசிம் அவர்களை ஆதரித்து நின்றார் .( ஈபிஆர் எல் எஃப் இயக்கத்தில் இந்தியாவில் முதல் பயற்சி பெற்ற அணியில் இருந்த யோகன் என்ற இயக்கப் பெயர் கொண்ட முஹம்மட் ராபியின் தந்தைதான், தமிழரசுக் கட்சி சார்பில் அன்று போட்டியிட்ட சட்டத்தரணி எம்.எச்.எம் ஹாசிம் அவர்கள். பின்னாளில் 1985 இல் கிழக்கு மாகாணத்தில் நடந்த தமிழ் முஸ்லிம் கலவரத்தினை அடுத்து முஹம்மட் ராபி ஈபிஆர் எல் எஃப் இயக்கத்தில் இருந்து விலகி , தமிழ் இயக்கங்களுக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்தார். 1986 இல் இவர் ஈரோஸ் இயக்கத்தால் ராபியின் பிறந்தகமான அக்கறைப்பற்றில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்டார்).
அஷ்ரபுக்கும் சேகு இஸ்ஸதீனுக்கும் இடையில் இருந்த மிகப்பெரும் ஒற்றுமை இருவரும் அன்றைய ஆளும் அரசாங்கமான ஐக்கிய தேசியக்கட்சியையும் அதன் தலைமையான ஜே.ஆர் ஜெயவர்த்தானவை தீவிரமாக எதிர்த்து நின்றதுமாகும். இந்த நிலைப்பாட்டிற்கு பிரதான காரணமே இந்த ஐக்கிய தேசியக் கட்சியானது தரகு முதலாளித்துவ -இனவாத,முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை ஒடுக்கும் கட்சியாக இருந்ததேயாகும். இருவரும் முஸ்லிம் விவகாரங்களில் ஈடுபாடு கொண்டிருந்தனர். அஷ்ரப் அரசியல் மற்றும் தனது சட்டத்துறை காரணமாக தேசிய ரீதியாக அறியப்பட்டிருந்தார். சேகு இஸ்ஸதீன் அந்தளவு தேசிய ரீதியாக அரசியல் விவகாரங்களில் அறியப்பாடாது இருந்த போதிலும் , இலக்கியம், எழுத்து துறையில் அன்று தேசிய அளவில் முக்கியத்துவமானவராக அறியப்பட்டிருந்தார். இருவரும் சமூக தளங்களில் தத்தம் பகுதிகளில் முக்கிய செயற்பாட்டாளர்களாவே இருந்தனர்.
இருவரும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை கண்டிப்பவர்களாவும், தமிழ் மக்களுடன் சினேக உறவை பேணக் கூடியவர்களாவும் இருந்தனர். பொது சிந்தனைத் தளத்தில் இருவரும் , முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை ஒடுக்குகின்ற தரப்புகளிடம் இருந்து பெற்றுக் கொள்ள , பாதுகாத்துக் கொள்ள முஸ்லிம்களுக்கான தனித்துவ அமைப்பு தேவை என்பதில் ஒருமித்த பார்வையும், நிலைப்பாட்டினையும் கொண்டவர்களாக இருந்தனர் . ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்காத
தனித்தனிப் பாதையில் பயணித்து வந்தனர்.......

பகுதி 02

1981ம் ஆண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக ஜே.ஆர் ஜெயவர்த்தன அரசாங்கம் மாவட்ட அபிவிருத்தி சபையை முன் வைத்து தேர்தலை நாடாத்தியது. அப்போது கிழக்கு மாகாணத்தில் சில கிராமங்களில் அஷ்ரஃப் வந்து சிறுசிறு கூட்டங்களை நடாத்துகிறார். அக்கரைப்பற்றில் அப்படியொரு முதல் கூட்டத்தினை அஷ்ரபுக்காக ஒழுங்கு செய்தவர் தையார் மாஸ்டர் அவர்கள். அவர்களது வளவுக்குள் 100க்குட்பட்ட மக்கள் மத்தியில் அஷ்ரஃப் பேசும் போது இலங்கையில் ஒரேயொரு பெரும்பான்மை முஸ்லிம் மாவட்டமான அம்பாரையை, சிங்களக் குடியேற்றங்கள் மூலம் ஜே.ஆர் அரசாங்கம் எப்படி மாற்றி அமைத்தது என்பதையே பிரதானப்படுத்தி பேசினார். அக்காலப்பகுதியில் அஷ்ரப் வளர்ந்து வரும் ஒரு சட்டத்தரணியாக அறியப்பட்டிருந்தார். ஆனால் கட்சியை கட்டும் பணியில் அஷ்ரபால் ஒரு அடி கூட முன்னகர முடியவில்லை.சேகு இஸ்ஸதீனும் உள்ளூர் அளவில் அரசியல் பணிகளில் ஈடுபடத் தொடங்கி இருந்தார். சேகு இஸ்ஸதீனுக்குப் பின்னால் இளைஞர்களும் இவரது நண்பர்களும் இருந்தனர்.
1982இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேகடுவவின் தேர்தல் உரைகளை அஷ்ரப் மேடைகளில் தோன்றி மொழிபெயர்த்தார். (சிறிமா அம்மையாரின் உரைகளையும் மொழிபெயர்த்துள்ளார்.)
இதே ஆண்டு பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தினை நீடிப்பதற்காக நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பு ஆகியவற்றிலும் அஷ்ரஃப், சேகு இஸ்ஸதீன் ஆகியோர் தனித்தனியே நின்று ஜே.ஆர் ஜெயவர்த்தனவையும், அவரது ஆட்சியையும் எதிர்த்தே வேலை செய்தனர்.
1983 ஜூலைக்கலவரத்தினை அடுத்து நாட்டின் இன நெருக்கடி மிக மோசமான கட்டத்தினை அடைந்தது. வடக்கு,கிழக்கு முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து முஸ்லிம் இளைஞர்களும் தமிழ் ஆயுத இயக்கங்களை நோக்கி ஈர்க்கப்பட்டனர். ஒவ்வொரு முஸ்லிம் கிராமங்களிலும் இளைஞர்கள் இயக்கங்களில் சேர்ந்ததும், இக்கிராமங்களில் இவ் இயக்கங்களுக்கான ஆதரவுத் தளம் உருவாகத் தொடங்கியது. அரச படைகளின் கெடுபிடிகளும் தேடுதல்களும் முஸ்லிம் கிராமங்களிலும் நடைபெறத் தொடங்கின. இயக்கத்தில் சேர்ந்த பல முஸ்லிம் இளைஞர்கள் அரச படையால் கொல்லப்பட்டனர், கைது செய்யப்ப்பட்டனர். இன்னொரு புறம் தமிழ் ஆயுத போராட்டத்தினை ஒடுக்க இஸ்ரேல் அரசை இலங்கைக்கு கதவைத் திறந்து விட ஜே.ஆர் ஜெயவர்த்தன எடுத்த முடிவை எதிர்த்து வடக்கு கிழக்கு முஸ்லிம் கிராமங்களில் அன்றைய இலங்கை அரசுக்கெதிரான அடையாள எதிர்ப்பு போராட்டங்கள் ( கடையடைப்பு, ஹர்த்தால், பேரணி, பணிப் புறக்கணிப்பு ) தீவிரம் பெறத் தொடங்குகிறது.
1984 காலப்பகுதியில் தனது அரசியல், சமூக ஈடுபாட்டின் காரணமாக, பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியரான சேகு இஸ்ஸதீன் சட்டம் படிக்கும் உந்துதலில் இடமாற்றம் பெற்றுக் கொண்டு கொழும்பு சென்று சட்டக்கல்லூரியில் சேர்கின்றார். கொழும்பு சட்டக்கல்லூரியில் படிக்கும் காலத்தில்தான் , இலங்கை முஸ்லிம் விவகாராங்களில் ஆய்வாளராக விளங்கிய எம்.ஐ.எம். முஹிதீனுடனான தொடர்பு வருகிறது. எம்.ஐ.எம். முஹிதீன் இலங்கை முஸ்லிம்களின் இழப்புகள், மற்றும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை தொகுத்து ஆவணமாக்கிய ஒரு ஆய்வு முன்னோடியாவார். அதுமட்டுமன்றி முஸ்லிம்களுக்கான பதிவு செய்யபட்ட இரண்டாவது முஸ்லிம் கட்சியான ”முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி”யை உருவாக்கி, 1988 களில் சென்னையில் விடுதலை புலிகளின் சார்பில் கிட்டுவுடன் ஒரு அரசியல் ஒப்பந்தத்தினையும் செய்தவர் அவர். இந்த ஒப்பந்தம்தான் முஸ்லிம் தரப்பு , தமிழ் ஆயுத இயக்கப் பிரதிநிதிகளுடன் செய்த முதலாவது அரசியல் ஒப்பந்தமுமாகும்.
1985 ஆரம்ப காலப்பகுதிதான் சமூக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வின் உறவை மிக மோசமாக சிதைக்கத் தொடங்கிய காலப்பகுதியாகும். விடுதலைப் புலிகள் தவிர்ந்த மற்ற அனைத்து இயக்கங்களும் இதற்கு பதில் சொல்ல வேண்டும். இந்த உறவு சிதைவுக்கு இலங்கை அரசும் பங்களித்திருக்கிறது. தமிழ் முஸ்லிம்களுக்கு இடையிலான சமூக உறவு ஆயுத இயக்கங்களின் அத்துமீறலாலும் , மக்கள் விரோதத்தாலும் நெருப்பாய் எரிந்தன. (வி. புலிகள் இக்காலத்தில் கிழக்கில் தமது காலை ஆழ ஊன்றி இருக்கவில்லை,1990 இன் நிகழ்வுகளுக்கு வி. புலிகளே காரணமானார்கள்)இப்போது பார்த்தால் இந்த ஆயுதம் தரித்த இவர்கள் தம் சொந்த தமிழ் மக்களையே கொன்றொழித்த, வதைத்த இவர்களுக்கு முஸ்லிம்கள் ஒரு பொருட்டாக இருந்திருக்கப் போவதில்லை என்பது புரிகிறது.
இந்த கால சூழல், நிலைமை தொடர்பில்( 1984-1985) , சேகு இஸ்ஸதீன் ( வேதாந்தி)அன்று எழுதிய ஒரு கவிதை முக்கியமானது. இப்போது மீண்டும் படிக்கின்ற போது சறுக்கல்கள், திசை மாறுதல்கள் குறித்தும், முன்னே எடுத்த பணி மறந்து இடையில் வீழ்வது குறித்தும் சொல்லி இருப்பார். இக்காலகட்டத்தில் தமிழ் கவிஞர்களின் சில கவிதைகளும் இது தொடர்பாக வந்துள்ளன.
திசை மறந்த தீவிரங்கள்
---------------------------------
யாளிக்கு வைத்த முள்
மானுக்கு தைத்ததில்
யாருக்கும் இஷ்டமில்லை-அந்த
மானின் வலியினில்
நஞ்சைக் கலந்தவர்
வாழவும் போவதில்லை
மான் பின் மரையினை
மோதி இடிக்கையில்
மானுக்கோர் திட்டமில்லை –வலி
வாட்டப் பகையை
வளர்த்த நரிகளின்
வஞ்சகம் பொய்க்கவில்லை .
வேடனை ஊட்டிய
மரையினை மான் முட்ட
வேடன் வெகுண்டெழுந்தான் –அந்த
வெண்புள்ளி மானுக்கு
பாடம் புகட்டிட
யாளி தனை மறந்தான்.
வேலுடன் வில்லுடன்
வெஞ்ச நெருப்புடன்
வேடன் வெகுண்டெழுந்தான் –உயர்
வேட்டைகள் கண்டிடக்
கொண்டதோர் யாத்திரை
வீணாய்க் குலைத்து நின்றான்.
மானைத் தொடருதல்
லாபமோ? வீண் இன
மாயையில் மூழ்கலாமோ-மட
மானும் மரையினம்
யாவும் ஒரேயினம்
மதியை இழக்கலாமோ.
மெல்ல நுழைந்து அக்
குள்ள நரிச்சதி
வெல்ல இடங் கொடுத்தால் –மிக
மேன்மையாய்ப் போற்றிடும்
ஒற்றுமை மாண்டிடும்
மேலும் பகை வளர்த்தால் .
வேடனே நீ ஒரு
மூடனோ? உன் பணி
வெற்றுக் கலவரமோ –முழு
விரலை ஒடித்த பின்
வீணையை மீட்டிடும்
வெறியை வளர்க்கலாமோ.
போடு உன் காழ்ப்பினை
தேடு உன் பாதையை
போனது போகட்டுமே – இனிப்
புத்துலகத்தொளி
வீழும் வழியினில்
யாத்திரையத் தொடரு...
- வேதாந்தி

இக்கவிதையை இங்கு குறிப்பிடுவதன் நோக்கம். சேகு இஸ்ஸதீனின் அன்றைய அரசியல் ,சமூகப் பார்வையை ஆதாரமாக்கவும், கசந்து அழிந்து நிற்கும் தமிழ் முஸ்லிம்களுக்கிடையில் நடந்த முழு இன மோதல் சரித்திர தொடக்கத்தினையும் சுட்டவும் தான்.
1985ம் ஆண்டு காலப்பகுதியில்தான், முதன் முதலில் அஷ்ரபும் சேகு இஸ்ஸதீனும் கொழும்பில் சந்தித்து கொள்கிறார்கள். அந்த வரலாற்று சந்திப்புக்கு அடித்தளமிட்டதும் வேதாந்தி எழுதிய இன்னுமொரு கவிதைதான்.... அந்த சந்திப்பு நிகழவில்லையானால், இந்த முஸ்லிம் காங்கிரஸ் எனும் முஸ்லிம்களுக்கான அரசியல் இயக்கம் இந்த வீச்சுடன் வளர்ந்து வியாபித்து இருக்குமா என்பது ஒரு முக்கிய கேள்விதான்...
0000
........ இனித்தான் முஸ்லிம் காங்கிரசின் அரசியல் கட்சி வரலாறு தொடங்குகிறது..............தொடரும்....
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -