இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,
இவ்வாறு பிரதமர் கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டோம் என கூறுவதன் மூலம் இவர்கள் சுயமாக செயல்படாமல் இன்னமும் சஜித்தின் அடிமைகளாக இருப்பதாகவே அர்த்தப்படும்.
அதே நேரம் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதாக த.தே. கூட்டமைப்பு அறிவித்திருப்பது முஸ்லிம் அரசியல்வாதிகள் படிக்க வேண்டிய பாடமாகும்.
எந்த இடத்தில் எதிர்ப்பது எந்த இடத்தில் சேர்ந்து போவது என்பதில் த.தே.கூட்டமைப்பின் பாதை ஓரளவு போற்றத்தக்கது.
இதன் மூலம் தமிழ்க்கூட்டமைப்பு அரசுடன் இணைந்து விட்டது என்பது பொருள் அல்ல. ஆயினும் ஒரு சந்திப்புக்காக பிரதமர் அனைத்து கட்சிகளையும் அழைத்திருக்கும் போது தாம் அந்த அழைப்பை நிராகரித்து முரண்பாட்டை காட்டுவதில் எந்த நன்மையும் இல்லை என அக்கட்சி நினைத்திருக்கலாம்.
த. கூட்டமைப்பு இணைந்து சாதிக்கும் நேரத்தில் சாதிக்கிறது. கடந்த அரசிலும் எதிர் கட்சியாக இருந்து கொண்டே சில விசயங்களில் சாதித்தது. முஸ்லிம் கட்சிகள் அரசில் இருந்தும் எதுவும் முடியாமல் ஒப்பாரி வைத்தன.
அரசில் இணையாமல் சில விடயங்களில் ஒத்துழைப்பது தமிழ் கூட்டமைப்பின் வழமை.
முஸ்லிம் அரசியலோ அரசில் இருந்தால் அரசுக்கு அடிமை, எதிர்க்கட்சியில் இருந்தால் எதிர்க்கட்சிக்கு அடிமை என்றே உள்ளது. ஏன் இந்த நிலை?
முஸ்லிம் கட்சிகள் சுயமாக முடிவெடுத்து மஹிந்தவின் அழைப்பை ஏற்று கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு வராமை மூலம் மேலும் மேலும் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் பற்றி தப்பபிப்பிராயமும் கோபமுமே, அவநம்பிக்கையுமே ஏற்படும்.
ஜேவிபி, சஜித் போன்றோர் கலந்து கொள்ள முடியாது என சொன்னால் அதில் பெரிதாக எதிர்ப்பு இருக்காது. ஆனால் முஸ்லிம் கட்சிகள் மஹிந்தவிடம் அமைச்சராக இருந்து அனுபவித்தோர் என்பதால் சிங்கள மக்கள் மத்தியில் விமர்சனத்துக்கு இடமுண்டு.
முஸ்லிம் கட்சிகள் எதிர்க்கட்சி அரசியல் செய்யலாம். அதில் பிரச்சினை இல்லை. அரசுடன் இணைய வேண்டும் என நாம் சொல்லவுமில்லை. ஆனாலும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் கலந்து கொண்டு தமது சமூக தேவைகளை முன் வைக்கலாம்.
இனியாவது முஸ்லிம்களின் வாக்குகள் பெற்ற முஸ்லிம் கட்சிகள் சுயமாக செயற்படுவதே சிறுபான்மை முஸ்லிம்களுக்கு சிறந்ததாகும்.