அரசாங்கங்கள் தங்களை மீள் பரிசோதனை செய்ய வேண்டும்': -கலாநிதி ஜனகன்..!


தான் சார்ந்த மக்களின் பசியைப் போக்கத் தன்னால் முடிந்த வகையில் பணம் வழங்க முன்வந்த வர்த்தகர் மீது வன்மத்தைக் காட்டுவதை விட, இந்த நிலைக்கு மக்களை கொண்டுவந்த அரசாங்கங்கள் தங்களை மீள் பரிசோதனை செய்ய வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும், கல்விமானுமான கலாநிதி வி.ஜனகன் வலியுறுத்தியுள்ளார்.

மாளிகாவத்தையில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே கலாநிதி ஜனகன், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளவையாவன:

“மாளிகாவத்தையில் வியாபாரி ஒருவரால் வழங்கப்பட்ட 5,000 ரூபாயைப் பெற்றுக்கொள்ளச் சென்று, நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்தும் எட்டு பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டும் உள்ள நிலை, கூட்ட நெரிசலால் மட்டும் இடம்பெறவில்லை. மாறாகத் தங்களின் குழந்தைகளின் பசிக்கொடுமையைப் போக்குவதற்குப் போராடி, தங்கள் உயிர்களைப் பறிகொடுத்த தாய்மார்கள் அவர்கள்.

“உண்மையில் இந்த நிலைமைக்கு எமது மக்களைக் கொண்டுவந்து விட்டு, அனைத்து அரசாங்கங்களும் தங்களுடைய பதவி வெறிக்காக மக்களின் உணர்வுகளைப் பயன்படுத்தியதையிட்டு வெட்கித் தலைகுனிய வேண்டும். ஏதோ அவர்கள் தேவையற்று நெரிசலில் உயிர்விட்டவர்கள் என்ற போர்வையில் இந்த விடயத்தை சாதாரணப்படுத்த முயற்சிக்க வேண்டாம். அதைவிட இனவாத சாயம் பூசி இந்த மக்களுக்குத் தன்னாலான உதவியைச் செய்வதற்கு முன்வந்த அந்த தனவந்தரை நிந்திக்கும் செயலையும் சில இனவாதிகள் செய்வதைப் பார்க்கும் போது, ஓர் இலங்கையனாக வெட்கப்படுகிறேன்.

“இந்த மக்கள் மட்டும் அல்ல இலங்கையில் பல பிரதேசங்களில் உள்ள மக்கள் நாளாந்த கூலிகளாக ஒரு நேர உணவு இன்றி, தூங்குவதற்கு இடம் இன்றி, கற்பதற்கு பாடசாலைகள் இன்றி, கட்டங்கள் இருந்தும் கற்றுக்கொடுப்பதற்கு ஆசிரியர்கள் இன்றி வாழ்கிறார்கள் என்பதை எந்த அரசாங்கங்களும் கவனத்தில் எடுக்கவில்லை; சில இனவாதிகளும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
“இதனால் தான் இந்த இறப்புகளை வெறுமனவே இன, மத ரீதியாகவும் ஒரு சாதாரண நிலையிலும் பார்க்க முடிகின்றது இவர்களால். ஒரு விடயத்தைப் புரிந்துகொள்ளுங்கள், இந்த இறப்புகள் கொவிட் 19 காரணத்தால் வரவில்லை. மாறாக, இறந்த தாய்மார்களின் குழந்தைகளைப் பட்டினியோடு வாழ மற்றும் அடிப்படைத் தேவைகளைக் கூட வழங்க மறந்த அல்லது மறைத்த அனைத்து அரசாங்கங்களால் இடம்பெற்றன. குழந்தைகள் வீட்டில் பசியோடு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழும்போது அவர்களின் ஏக்கத்துக்காக எப்படியாவது பணத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் ஏற்பட்ட போராட்டமே இந்த மரணங்களுக்கான காரணம்.

“5,000 ரூபாயில் அரசியல் செய்த அரசாங்கம், தேர்தல் ஆணையாளரைக் காரணம் காட்டி ஜூன் மாதத்துக்கான கொடுப்பனவை நிறுத்த முடிவெடுக்க முன், யாருடன் கலந்து ஆலோசித்தார்கள்? இந்த அனர்த்த நிலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிரிக்கெட் மைதானம் அமைப்பதை நிறுத்தும்படி பல்வேறு எதிர்கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் கூறும்போது, உடனடியாக நிறுத்துவற்கான கட்டளையைப் பிறப்பித்திருக்க முடியும். ஆனால், அதற்கு மாறாக அதற்காக ஒரு கூட்டம் போட்டு அதன்பின் நிறுத்துவதாக அறிவித்த அரசாங்கம், எந்தக் கூட்டமும் போடாமல் இந்த 5,000 ரூபாய் வழங்கும் நடவடிக்கையை நிறுத்தியது ஏன்?

“இன்று மரணங்களை ஏற்றுள்ள இந்தத் தாய்மார்கள் இன்னும் நாளந்தக் கூலிகள் பசியுடன் தான் வாழ்கிறார்கள் என்பதற்கான சாட்சிகள். இந் நிலையில் நாளாந்தக் கூலிகளாக வாழும் ஐந்து மில்லியன் அளவான மக்களைப் பசியால் மரணிக்க வைக்க முற்படும் செயற்பாடே இந்தக் கொடுப்பனவு நிறுத்தம். நீதியா அல்லது மக்களா என்று வரும் போது மக்களுக்குத் தான் முலிடம் என்று சொன்ன விஜயதாச ராஜபக்‌ஷ அவர்கள், இந்தக் கொடுப்பனவை நிறுத்தும் தீர்மானம் எடுத்ததாக அறிவிக்கப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்துக்கு விடுப்பில் இருந்தாரா அல்லது நீதி அல்லது மக்கள் அல்லது மேலிடம் என்று வரும்போது மேலிடம் தான் என்று புதிய கோட்பாட்டுடன் அமைதியாக இருந்துவிட்டாரா?

“இதனை உணர்ந்துகொண்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசாங்கங்கள் செயற்பட வேண்டும். பசியால் வாடும் சமூகம் எல்லா இனத்திலும் எல்லா மதத்திலும் உள்ளது என்பதனை பேரினவாத சக்திகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். தான் சார்ந்த மக்களின் பசியைப் போக்கத் தன்னால் முடிந்த வகையில் பணம் வழங்க முன்வந்த வர்த்தகர் மீது வன்மத்தைக் காட்டுவதை விட, இந்த நிலைக்கு மக்களை கொண்டுவந்த அரசாங்கங்கள் தங்களை மீள் பரிசோதனை செய்ய வேண்டும்” என, கலாநிதி ஜனகன், மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -