இழந்தவற்றை பெற இணக்க அரசியலே வழி என்பதைதமிழ் உறவுகள் உணர்ந்து பெரமுனவை ஆதரியுங்கள்.


எஸ்.அஷ்ரப்கான்-
ழந்தவற்றை பெற இணக்க அரசியலே வழி என்பதை
தமிழ் உறவுகள் உணர்ந்து பெரமுனவை ஆதரியுங்கள் என்று பொது தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் றிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.

காரைதீவில் இன்று (05) செவ்வாய்க்கிழமை இவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைப்பாளர் பி. ரி. தர்மலிங்கம், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் பொறியியலாளர் வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அரசியல், சமூக, பொதுநல, ஊடக முக்கியஸ்தர்களை சந்தித்து பேசியபோது மேலும் உரையாற்றிய போது,
எதிர்ப்பு அரசியல் மூலமாக இழந்தவைகள் ஏராளம், அவ்வாறு இழந்தவற்றைகூட இணக்க அரசியல் மூலமாகத்தான் பெற்று கொள்ள முடியும் என்பதை தமிழ் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் உறவுகளுக்கு ஏராளமான பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால் காலம் காலமாக அரசாங்கத்தை எதிர்க்கின்ற அரசியலை செய்வதன் மூலம் அவற்றுக்கான தீர்வு கிடைத்து விட போவதே இல்லை. வருகின்ற பொது தேர்தல் ஜூன் 20 ஆம் திகதி நிச்சயம் நடக்கும். அதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறுதி பெரும்பான்மை ஆசனங்களை வென்று தனித்து ஆட்சி அமைக்கும். பெரமுனவின் ஆட்சி பத்து. பதினைந்து வருடங்களுக்குகூட தொடர்ந்து நீடிக்கும் என்பது அரசியல் அவதானிகளின் கருத்து ஆகும். இந்நிலையில் பெரமுனவை தவிர்த்து வேறு எந்த கட்சிகளுக்கு வாக்களித்தாலும் அது விழலுக்கு இறைத்த நீராகவேதான் மாறி விடும்.
அதே போல ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து ஆட்சி அமைப்பது உறுதி என்பதால் இணக்க அரசியல் செய்ய கூடிய உதிரி கட்சிகளுக்குகூட வாக்களிப்பது பயன் அற்றது. சிங்கள பெரும்பான்மை மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனேயே ஒன்றித்து நிற்கின்றனர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் அமோகமான வாக்குகளை அள்ளி வழங்கி கோதாபய ராஜபக்ஸவை மகத்தான வெற்றிக்கு இட்டு சென்றனர். வருகின்ற பொது தேர்தலிலும் பொதுஜன பெரமுனவையே ஆதரிக்க வேண்டும் என்கிற முன்முடிவோடு காணப்படுகின்றனர். எனவே பொதுஜன பெரமுனவின் மாபெரும் வெற்றியில் பங்காளிகளாக தமிழ், முஸ்லிம் மக்களும் நேரடியாக இணைந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

நான் உங்கள் அயலவன். எனது பாட்டன், தந்தை ஆகியோரை நீங்கள் மிக நன்றாகவே அறிவீர்கள். தமிழ் மக்களையும் அரவணைத்து அரசியல் செய்த குடும்ப பாரம்பரியத்தில் வந்தவன் என்பதில் எப்போதும் எனக்கு பெருமையும், பெருமிதமும் இருக்கின்றது. காரைதீவு மண்ணில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கான பேராதரவு வளர்ந்து வருகின்ற நிலையில் வருகின்ற பொது தேர்தலில் காரைதீவு மக்களின் விருப்ப தெரிவாக எனக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று உரிமையுடன் கேட்டு கொள்கின்றேன். கண் காண முடியாத தூரங்களில் இருக்க கூடிய வேட்பாளர்களை முதன்மைப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது என்பதையும் உள்ளபடி புரிந்து வைத்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
சாத்தியமானவற்றை சாத்தியமான வழிமுறையில் சாத்தியப்படுத்துவதே அரசியல் ஆகும்.உங்களின் வாக்குகளை பெறுவதற்காக நான் யதார்த்தத்துக்கு புறம்பான வாக்குறுதிகளை தருபவன் அல்லன். என்னால் முடிந்த வரையில் உங்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்று தர நிச்சயம் முயல்வேன். சொல்வதையே செய்வேன். செய்வதையே சொல்வேன். எனது இல்லத்தின் கதவுகள் தமிழ் உறவுகளுக்காக எப்போதும் திறந்தேதான் இருக்கின்றன. எனவே உங்களின் இதய கதவுகளை திறந்து எனக்காக திறந்து வைத்திருங்கள் என்று கோருகின்றேன். வருகின்ற பொது தேர்தலில் மொட்டு கட்சி வேட்பாளரான எனக்கு கிடைக்கின்ற தனிப்பட்ட வெற்றி தமிழ் பேசும் சமூகங்களுக்கு கிடைக்கின்ற வெற்றியாகவே மலரும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -