ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் எஞ்சியுள்ள ரமழான் காலங்களில் விழிப்பாகச் செயற்படுவோம் - பைஸர் முஸ்தபா முஸ்லிம் சமூகத்திடம் வேண்டுகோள்


மினுவாங்கொடை நிருபர் -

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த நாட்டின் அனைத்து இடங்களிலும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஊரடங்கு தளர்த்தப்படும் என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
முஸ்லிம் சமூகம் இக்கால கட்டத்தில் விழிப்பாக நடந்துகொள்ள வேண்டும் என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, சகல முஸ்லிம்களிடமும் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நோன்புப் பெருநாளைக்கு இன்னும் சுமார் 14 நாட்கள் உள்ள நிலையில் முஸ்லிம் சமூகம் சிந்திந்துச் செயற்பட வேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார். 

ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா இது தொடர்பில் விசேட செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்தச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
அரசாங்கம் மே மாத இறுதிவரை ஊரடங்கு அவசியம் எனக் கூறிவந்தாலும், அதனை தற்போது மெல்ல மெல்ல தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. 

 அத்துடன், சிலவேளை ரமழான் வியாபாரத்தை மனதில் கொண்டு ஜவுளிக்கடைகளைத் திறக்கவும் அனுமதி வழங்கப்படலாம்.

இந்நிலையில், நேராக நாம் நகரில் முக்கியமான பிரபல்யமான ஜவுளிக் கடைகளில் போய்க் கூட்டம் கூட்டமாக ஏறக்கூடாது.

ஊரடங்கு மற்றும் ரமழான் காலங்களில் நமது
வீடுகளிலேயே நாம் எவ்வாறு வணக்க வழிபாடுகளைப் பேணிவந்தோமோ, அவ்வாறே தொடர்ந்தும் எஞ்சிய நாட்களிலும் நடந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

எமக்கு எட்டு ஜும்ஆத் தொழுகைகள் தவறிப்போய்விட்டது.
ஜமாஅத்துத் தொழுகைகளும் தவறிவிட்டது.

தராவீஹ், கியாமுல்லைல் ஆகிய தொழுகைகளும் இம்முறை இல்லை.
பெரும்பாலும் நோன்புப் பெருநாள் தொழுகையும் கிடைக்காமல் போகலாம்.
இந்நிலையில்,
முஸ்லிம்கள் எஞ்சியுள்ள நாட்களில் வீன் சந்தேகங்களையும் பிரச்சினைகளையும் எடுத்து "நோய்க்காவிகள்" என்ற பெயரை சூட்டிக்கொள்ளக் கூடாது.

கொரோனா தொற்று ( கோவிட் 19 ) பரவக் கூடும் என்ற அச்சத்தினாலும், ஊரடங்குச் சட்ட அமுலினாலும் கிறிஸ்தவ சகோதர மக்களின் உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) பண்டிகை சென்ற (2019) வருட சோகத்தைச் சுமந்துகொண்டு இம்முறை வீடுகளுக்குள் முடங்கிப்போனதை நாம் அறிவோம்.

 அத்துடன், இந்து சகோதர மக்களும் சித்திரைப் புத்தாண்டை தமது வீடுகளுக்குள் இருந்து கொண்டு, எந்தவித ஆரவாரங்களுமின்றி கொண்டாடினார்கள். அரசாங்கத்திற்குக் கட்டுப்பட்டு தத்தமது இல்லங்களுக்குள்ளேயே சடங்கு, சம்பிரதாயங்களோடு பெருநாளைக் கழித்தார்கள். 

அதனைத் தொடர்ந்துவந்த பெளத்த சகோதர மக்களின் மே மாதம் 7 ஆம் 8 ஆம் திகதிகளில் கொண்டாடப்படவிருந்த வெசாக் பெளர்ணமி தின வைபவங்களும் இம்முறை களை கட்டவில்லை. 

இத்திருவிழாவும், அவர்களின் சிங்கள புதுவருடப் பிறப்புத் திருவிழாவும் இம்முறை வீடுகளுக்குள் அடங்கிப் போனதையும் எம்மால் உணர முடிகிறது.
இந்நிலையில், ரமழானின் நடுப்பகுதியில் இருக்கும் நமக்கு "ஈதுல் பித்ர்" என்ற நோன்புப் பெருநாள் வரவுள்ளது. 

 எமது அடுத்த இன சகோதரர்கள் தமது பண்டிகைகளைக் கோலாகலமான முறையில் கொண்டாடுவதற்குத் தடையாக இருந்த அதே காரணங்கள் இன்றும் இன்னும் நமது நாட்டில் இருப்பதென்பதே உண்மை. அத்துடன், சுகாதாரத் துறையினரின் எச்சரிக்கையும் அபாய அறிவிப்பும் அப்படியே இருப்பதென்பதையும் மறைக்க முடியாது.

இத்தருணத்தில், எமது பெருநாள் இம்முறை எப்படி அமைவது சிறந்தது என்பதைப்பற்றி நாமே ஒருகணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கொரோனா தொற்று பரவுகையின் சாத்தியமும் அபாயமும் ஒரு புறமிருக்க, எம்மோடு ஒரே நாட்டில் வாழ்கின்ற எமது அடுத்த இன சகோதர மக்கள் அனைவரும் தங்களது கொண்டாட்டங்களை முற்றாகக் கைவிட்டு, மிக எளிமையான முறையில் வீடுகளுக்குள் கொண்டாடியிருக்கும் போது, நாமும் அதே மனநிலையோடு வீடுகளுக்குள் இப்பெருநாளைக் கொண்டாடுவதே சிறந்தது.

பிறர் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் போது நாம் மாத்திரம் இன்புறுவது தர்மமாகாது.

நாடும் நாட்டு மக்களும் அச்சத்தாலும் பொருளாதார நெருக்கடிகளாலும் பாதிப்புற்றிருக்கும் இவ்வேளையில், பெருநாளைக் கோலாகலமாகக் கொண்டாடுவது உசிதமானதல்ல.

பெருநாள் தொழுகையோடு, இருப்பதில் சிறந்த ஆடைகளை அணிந்து, எளிமையான உணவோடு இப்பெருநாளைக் கொண்டாடி நாம் மகிழவேண்டும்.

இஸ்லாம் இயல்பிலேயே எளிமையான மார்க்கம் என்பதைப் புரிந்துகொண்டு, அந்த எளிமையைப் பிற சமூகங்களுக்கும் எத்தி வைக்கின்ற ஒரு பொன்னான சந்தர்ப்பமாக இம்முறை பெருநாளை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதனை அனைத்து முஸ்லிம்களும் ஒருமுகப்பட்டு, கச்சிதமாகப் பயன்படுத்தினால், இந்த நாட்டு மக்களுக்கு ஓர் உன்னதமான செய்தியைச் சொன்னதாக அச்செய்தி அமையும். 

“இஸ்லாம் ஓர் உயர்ந்த மார்க்கம். அது மனிதாபிமானம் கொண்டது. பிற சமயத்தவர்களையும் அரவணைத்துச் செல்லக் கூடியது. அது, நாட்டு நலனில் அக்கறை கொண்டது. அதனைப் பின்பற்றும் முஸ்லிம்கள் இப்போது அதனை வெளிக்காட்டியிருக்கின்றார்கள்" என்ற உணர்வு அனைவரினது உள்ளங்களிலும் வருமளவுக்கு நாம் நடந்து கொள்ளவேண்டும்.

விழிப்போடு இருப்போம்...! சிந்தித்து செயற்படுவோம்...!! பொறுப்போடு நடந்து கொள்வோம்...!!!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -